பதிவு செய்த நாள்
15
மே
2019
12:05
உடுமலை: உடுமலை, போடிபட்டி உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று திருக்கல்யாண சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.போடிபட்டி, உச்சிமாகாளியம்மன் கோவில், திருவிழா, கடந்த, 7ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, போடிபட்டி முருகன் கோவிலிருந்து, அம்மன் திருக்கல்யாண சீர் உற்சவ ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்சவத்துடன், மாலை, பட்டுப்புடவை என பக்தர்கள் சீர் எடுத்து, உச்சி மாகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.இரவு, 8:00 மணிக்கு, போடிபட்டிபுதுார் நாகம்மாள் கோவிலிருந்து சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நாளை, காலை, 7:00க்கு, மஞ்சள் நீராட்டு உற்சவம், மதியம், 12:00க்கு, மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.