பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
மகாராஷ்டிராவின் லோனாவாலா குகைக்குமுன் ஏக்விரா ஆய்மந்திர் உள்ளது.
யார் இந்த ஏக்விரா?
தென்னிந்தியாவில் மற்றும் வட நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் கும்பிடப்படும ரேணுகாவின் ஒரு வடிவம்தான் - ஏக்விரா...
அப்பகுதி பிராம்மணர்கள் விவசாயம் செய்பவர்கள் மற்றும் மீனவர்களின் கண்கண்ட தெய்வம்- ஏக்விரா...
லோனாவாலா குகைகளின் சிறப்பு...
ஒரு காலத்தில் புத்தமதம் மற்றும் சமணமதம் தழைத்திருந்த இடம்!
அதன் துறவியர் மடங்கள், இந்தக் குகைகளில் அமைந்திருந்தன!
இன்று இந்தக் குகைகள் மகாராஷ்டிராவின் தொல்பொருள் இலாக்காவின் கையில் உள்ளது.
இந்தக் குகைக்கு வெளியே இரண்டு கோயில்கள் உள்ளன.
அந்த இரண்டில் ஒன்றில் ஏக்விரா அம்மனை தரிசிக்கலாம். தெற்குப் பார்த்து உள்ளார்.
எப்போ.... ஏக்விரா.... ரேணுகாவின் ஒரு வடிவம் எனக் கூறினோ
மோ, அப்போதே ரேணுகாவின் வரலாற்றைக் கூறவேண்டியதும் அவசியம்!
கர்நாடகா, மஹராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், இமாச்சல் மற்றும் தமிழ்நாட்டில் எல்லையோரப் பகுதிகளில் ரேணுகாவுக்குக் கோயில்கள் உள்ளன. ரேணுவை கர்னாடகத்தில் எல்லம்மா... மற்றும் ஜகதாம்பா எனவும் அழைப்பர்!
மகாபாரதத்தில் ரேணுகா பற்றிக் கதை உள்ளது.
ஒரு மன்னனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையில்லை. இந்தச் சூழலில் சிவனை திருப்பதிப்படுத்த மிகப்பெரிய யாகம் செய்தான். சிவனும் மகிழ்ந்து, யாகத்திலிருந்து ஒரு குழந்தை எழும் பாக்கியத்தை அளித்தார். ரேணுகா என பெயரிடப்பட்டாள்.
அந்தக் குழந்தை வளர்ந்து வந்த போது, அந்தப் பக்கம் வந்த அகத்தியர், இந்தப் பெண்ணை ஜமதக்னிக்குத் திருமணம் செய்து
தரவேண்டும் எனக் கூறிச் சென்றார்.
திருமண வயது வந்ததும், ஜமதக்னி முனிவருக்கே ரேணுகா, திருமணம் செய்து தரப்பட்டாள். ரேணுகா... முனிவருக்கு நல்ல பணிவிடைகளைச் செய்து ஐந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து வந்தாள்!
தினமும், ஆற்றில் குளித்துப் பச்சை மண்ணில் தன்னுடைய
மனோபலத்தால் அதனை ஒழுகாத குடமாக்கி, தண்ணீர் நிரப்பி,
தலையில் வைத்துக்கொள்ள ஏதுவாய் ஒரு பாம்பைப் பிடித்துச் சுற்றித் தலையில் வைத்துக்கொண்டு, அதன் மீது சொட்டாத பச்சைப்பானை நீரைக் கொண்டுவந்து முனிவருக்குத் தருவாள்...! அவர் அதனை வைத்துப் பூஜைகளை நிறைவேற்றுவார்!
ஒருநாள். ஆற்றை நெருங்கியவளுக்கு அதிர்ச்சி! இரண்டு கந்தர்வர்கள், குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவனைப் பார்த்து, "ஆஹா எவ்வளவு அழகு! என யோசித்தாள்! அவளுடைய "சக்தி போனது! குளித்துவிட்டு, பச்சைப் பானை பிடித்து தண்ணீர் நிரப்ப முயற்சித்தபோது பானை உருவாகவில்லை.
வெறுங்கையுடன் திரும்பிய ரேணுகாவைக் கண்டார் முனிவர்! ஞான திருஷ்டியால் "என்ன நடந்தது என அறிந்து கொண்டார். இதனால், ""இனி என்னுடன் வாழ நீ லாயக்கற்றவள் எனக் கூறி, தன்னுடைய மகன்களைக் கூப்பிட்டு, தாயை வெட்டச் சொன்னார். நாலு மகன்களும் தாயை வெட்ட முன்வரவில்லை! இதனால், தன் பேச்சைக் கேட்காத மகன்களை, சாம்பலாகச் சபித்தார்...!
அந்தச் சாம்பல்களைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதாள் ரேணுகா.
அப்போதுதான் ஐந்தாவது மகன் வந்தான். நடந்ததை அறிந்தான்!
அதே சமயம், தந்தையின் கோபம் பற்றியும் அவனுக்குத் தெரியும்... அதனால், யோசித்தான். அப்போது தந்தை ஜமதக்னி, அவனிடம் ""தாயை வெட்டிக் கொல் என்றார். பரசுராமன் உடனே தன்னுடைய கோடாலியால் தாயை வெட்டிச் சாய்த்தான்.
மகிழ்ந்த தந்தை ஜமதக்னி, ""உனக்கு ஒரு வரம் தருகிறேன்... என்ன வேண்டும் கேள்..? என்றார்!
""என் தாயையும், நாலு சகோதரர்களையும் உயிர்ப்பித்துத் தர
வேண்டும்!
உடனே முனிவரும் தன் கமண்டலத்திலிருந்து தண்ணீரைத் தெளித்து அம்மா, நாலு சகோதரர்களையும் உயிர்ப்பித்தார்...
அப்போது, ஓர் அதிசயம் நடந்தது. ரேணுகா உயிர் பெறும்போது, அவரிடமிருந்து ஒரு ஜீவ ஒளி புறப்பட்டு, பல பாகங்களாகப் பிரிந்து, பல திசைகளில் சென்றது. அது சென்றடைந்த இடங்களில் இன்று ரேணுகா கோயில் கொண்டிருக்கிறாள்!
மகன்கள், தாய் ரேணுகாவை கையெடுத்துக் கும்பிட்டனர்.
அவள் இறைவடிவம் என்பதை அறிந்தனர்!
அதுமுதல் அவள் தெய்வமானாள்!
எல்லம்மா பற்றியும் ஒரு கதை உண்டு!
இவளை ஏழை எளியவர்களின் தெய்வம் என்பர்!
ஜமதக்னி முனிவர், ரேணுகாவை திட்டியதும், அவள் புறப்பட்டாள், ஒரு புறக்கணிக்கப்பட்ட ஜாதியினர் வீட்டில் போய் தங்கினாள். பிறகு முனிவரால் தேடி அழைக்கப்பட்டாள். அப்போது ரேணுகாவுடன், அந்தப் பெண்ணும் வந்தாள்.
பிறகு பரசுராமர் தன்னுடைய கோடாலியால், தாயை வெட்டியபோது அவளுடன் அப்பெண்ணும் வெட்டிக் கொல்லப்பட்டாள்.
பிறகு, முனிவரின் வரத்தின்படி, அவர்களை உயிர்ப்பிக்க தலைகளை ஒன்று சேர்த்தபோது, ரேணுகாவின் உடலுக்கு அந்தப் பெண்ணின் தலையும், அப்பெண்ணுக்கு, ரேணுகாவின் தலையும் பொருத்தப்பட்டது. ரேணுகாவின் தலை பொருத்தப்பட்ட பெண், கடவுளாக்கப்பட்டாள். அவள்தான் எல்லம்மா.... ஏக்விர ஆய்.... போன்றவர்கள்!
ஆக ரேணுகாவின் தலை மட்டுமே வணங்கப்படுகிறது.
கர்னாடகாவின் கடக் ஜில்லாவில் "பிதர்ஹல்லி என இரு இடம் உள்ளது. இங்கு ரேணுகாவிற்குக் கோயில் உள்ளது!
இந்த பிதர்ஹல்லியில்தான் ஒரு காலத்தில் ஜமதக்னியும், ரேணுகாவும் வசித்துள்ளனர்! ரேணுகா துங்கபத்ரா ஆற்றில் தான் தினமும் குளித்துள்ளார்!
உத்ராஞ்சலில்கூட ஜமதக்னி, ரேணுகா கோயில் உள்ளது.
லோனாவாலாவில் காணப்படும் ஏக்விரா ஆய் மந்திர் முதலில் பாண்டவர்களால் ஒரே இரவில் கட்டப்பட்டதாகும்.
ஆரண்யவாசத்தில் இருந்தபோது, ஒரு வருடம் மறைந்து வாழும் நிலை வந்தபோது ஏகாவிராமாதா அவர்கள் கனவில் தோன்றி, ""எனக்கு ஒரே இரவில் கோயில் எழுப்ப வேண்டும். அப்படி எழுப்பினால், பதிலுக்கு மறைந்து வாழும் ஒரு வருடமும், உங்களை யாரும் கண்டு பிடிக்க இயலாதவாறு காப்பேன் எனக் கூறினாள்! பாண்டவர்களும் இரவோடு இரவாக ஒரு கோயில் கட்டினர்! இதனால் மகிழ்ந்த அம்மன், சொன்ன வாக்குப்படி, பஞ்சபாண்டவர்களைக் காப்பாற்றினாள். பிறகு பலமுறை இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்மனுக்கு, ரேணுகாவைப் போன்று, ஏராளமான சக்தி உண்டு. கோயில், மராட்டியர்களிடையே ரொம்பப் பிரபலம். சைத்ர நவராத்திரி, அக்டோபர் நவராத்திரி சமயங்களில் ஏராளமானோர் இங்கு தரிசிக்க வருவர்! இங்கு அம்மனின் தலைக்கு வெள்ளிக் கவசம் சாத்தியுள்ளனர். நெற்றியில் பெரிய கும்குமப் பொட்டு, தலையில் கீரிடம்!
தலையையும் சேர்த்து மாலை அணிவிப்பது இங்கு விசேஷம்...! மகா மண்டபம், வர்ஷமண்டபம், கர்ப்ப கிரகம் என மூன்று அடுக்காக உள்ளது இக்கோயில்.
ஏக்விரா மத்தியில் உள்ளாள். தென் பகுதியில் உள்ள அம்மனின் பெயர் ஜோகேஸ்வரி! இந்தக் கோயிலில் இன்றும் மிருகங்களை பலி கொடுப்பது தொடருகிறது. ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகின்றன. இந்தக் கோயிலை தரிசிக்க ஐநூறு படிகள் ஏற வேண்டும். கோயிலுக்கு அருகில் கர்லா குகைகள் உள்ளன. படி ஏறும்போது, வழியில் தாயின் பாதங்களைத் தரிசிக்கலாம்! சமீபத்தில் இந்த அம்மனைத் தரிசிக்க சிவசேனா தலைவர், உத்தல் தாக்கரே குடும்பத்துடன் வந்திருந்தார். ஏழைகள்... தாழ்த்தப்பட்டோரின் குலதெய்வமாக ஏக்விரா ஆய் உள்ளதால் கூட்டத்திற்குப் பஞ்சமில்லை!