பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
கோவை:ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகரில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது; பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்ட னர். கோவை பெரியகடை வீதி, டவுன்ஹால், மணிக்கூண்டு அருகில், கோவையின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் கோனியம்மன் கோவிலில், நேற்று (ஜூலை., 19ல்) காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
காலை, 6:00 மணி முதல் இரவு வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்ட னர். பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில், துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர் மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரையில் உள்ள, பொங்காளியம்மன் கோவிலில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். போக்குவரத்து அதிகம் உள்ள பொள்ளாச்சி சாலை யில், நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று அம்மனை வழிபட்டனர்.கெம்பட்டி காலனியில் உள்ள, குண்டத்து பத்ரகாளியம்மன் கோவிலில், அம்மன் நாணய அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
வைசியாள் வீதியில் உள்ள வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன் கோவிலில், அம்மன்கள் முத்து அலங்காரத்திலும், பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில், அம்மன் மஹா வில்வம் அலங்காரத்திலும், புலியகுளம் மாரியம்மன் கோவிலில், அம்மன் வீரலட்சுமி அலங்காரத்திலும், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகரில் உள்ள ஜெய மாரியம்மன் கோவிலில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100, 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளால், பண மாலை அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
இதேபோல், நகர் மற்றும் புறநகரில் உள்ள, அம்மன் கோவில்கள் மற்றும் சன்னதிகளில், நேற்று (ஜூலை., 19ல்) ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானது என்பதால், அனைத்து கோவில்களிலும் நேற்று (ஜூலை., 19ல்) காலை முதல் இரவு வரை, பக்தர்கள் வழிபட்டனர்.கோவில்களில், பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்ததால், பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் கோவில் முன் போக்குவரத்தை சீர்படுத்த, ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.