தேனி : சின்னமனுார், குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி சனிவார பெருந்திருவிழா 5 வாரங்கள் நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று பகல் 11:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்: சனீஸ்வரர் - நீலாதேவி திருக்கல்யாணம் ஆக., 2 பகல் 12:30 மணிக்கு நடைபெறும். ஆக., 3ல் மூன்றாவது சனிவார திருவிழா நிறைவடைந்தவுடன் மஞ்சனக்காப்பு சாத்துபடி நடக்கிறது. ஆக., 12ல் சோணைக்கருப்பசாமி பொங்கல் விழா நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மதுபாட்டில்கள் சுவாமிக்கு படையல் வைக்கப்படும். கோயில் சார்பில் கறி விருந்து நடைபெறும். ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.