பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
12:07
காஞ்சிபுரம், :அத்தி வரதர் வைபவ விரைவு தரிசன டிக்கெட்டுக்கு ஆன்லைன்வாயிலாக முன்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.பக்தர்கள் வசதிக்காக சகஸ்ரநாமம் அர்ச்சனை டிக்கெட் 500 ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.இதில் சர்வர் கோளாறு அடிக்கடி ஏற்படுவதாக பிரச்னை எழுந்ததை அடுத்து சரிசெய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டிலும் சர்வரில் இணைப்பு கிடைக்காமல் முன்பதிவு ரத்தாவதாக புகார் எழுந்துள்ளது.அதாவது www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேர் ஒன்றாக பதிவு செய்ய முடியவில்லை.தவிர ஒவ்வொருக்கும் தனித்தனியாக பதிவு செய்யப்படுவதாகவும் அதனால் சர்வர் கோளாறு காரணமாக முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.விரைவு தரிசனத்திற்கு பதிவு செய்யும்போது ஏற்பட கூடிய இந்த சிக்கல்களை அறநிலையத் துறை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதற்கிடையே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி உள்ளிட்டோர் வந்து அத்தி வரதருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தனர்.
அஞ்சும் போலீசார்!: நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு வேண்டப்பட்டோரை யார் தயவும் இல்லாமல் அத்தி வரதரை தரிசிக்க கோவிலுக்குள் அழைத்து செல்கின்றனர். வி.ஐ.பி. நுழைவாயிலில் பொதுமக்களிடம் அடாவடி காட்டும் போலீசார், ஊழியர்களுடன் செல்வோரையும் எதுவும் சொல்வதில்லை; பேச்சுக்குகூட தடுப்பதில்லை. எந்தவித அனுமதி அட்டையும் இல்லாமல் வி.ஐ.பி. நுழைவாயிலில் ஊழியர்கள், அவரது உறவினர்கள் செல்வதை பார்த்து பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
ஒரு மணி நேரம் நீட்டிப்பு: ஆன்லைன் மூலம் 300 ரூபாய் செலுத்தி விரைவு தரிசனத்துக்கு டிக்கெட் பெறுவோர் அன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர்.ஒரு நாளைக்கு 2000 பேர் விரைவு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் அதிக பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியதாக உள்ளது.இதனால் மாலை 5:00 மணிக்கு இரவு 9:00 மணி விரைவு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் டோனர் பாஸ் வைத்திருப்போருக்கு காலை 5:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.