வடபழனி ஆண்டவர் கோவிலில், ஆடி கிருத்திகை விழா, இரண்டாம் நாளாக நேற்றும், கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.இந்தாண்டு, ஆடி கிருத்திகை, இரண்டு நாள் விழாவாக நடத்தப்பட்டது. வடபழனி ஆண்டவர் கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:45 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.தொடர்ந்து, பள்ளி அறை திறக்கப்பட்டது.
காலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. மதியம், 1:00 மணி முதல் மாலை, 4:00 மணிவரை, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.மாலை, 5:00 மணி முதல் இரவு, 11:00 மணிவரை, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல், பக்தர்கள், வடபழனி கோவிலுக்கு வர துவங்கி, நீண்ட வரிசையில் வழிபட்டனர். பெண்கள் பலர் அகல் விளக்கு ஏற்றி, பால் குடம், காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.இரவு, வள்ளி, தேவசேனா சமேதருடன், சுப்ரமணிய சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாம் நாள் விழாவான நேற்று காலை, பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில், முருகப் பெருமான், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவிற்கான ஏற்பாடு களை, வடபழனி ஆண்டவர் கோவில் தக்கார், எல்.ஆதிமூலம், உதவி கமிஷனர், சித்ராதேவி ஆகியோர் செய்திருந்தனர்.