பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
01:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழாவில், திரளான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா, கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர், குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், பொதுப்பணித்துறை அம்மன் அறக்கட்டளை சார்பில், பவானி ஆற்றிலிருந்து அலங்காரம் செய்து, சப்பரத்தில் அம்மனை அழைத்து வந்தனர். கோவில் பூஜாரி தண்டபாணி, காலை, 6:20க்கு குண்டத்தை வலம் வந்து, பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து, உதவி பூஜாரிகள், முக்கிய பிரமுகர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கினர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். பல்வேறு அமைப்பினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 500க்கும் மேற்பட்ட போலீசார், 150க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ., சின்னராஜ், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷ னர் ராஜமாணிக்கம், தாசில்தார் சாந்தாமணி பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி, பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.