பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பந்தலூர் அருகே பொன்னணியில் உள்ள மகா விஷ்ணு கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதிகாலை 4.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் கோவில் மேல்சாந்தி சதீஷன் பூஜைகளை நடத்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து முன்னோர்களுக்கு திதி வழங்குவதற்கான பூஜைகளை மனோகரன் எம்பிராந்தரி தலைமையிலான குழுவினர் செய்தனர். இதில் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் முன்னோர்களுக்கு எள், தர்ப்பை புல், துளசி, பச்சரிசி, தண்ணீர், சந்தனம் கொண்டு பூஜைகள் செய்து தர்ப்பணம் வழங்கப்பட்டது. மீண்டும் குளித்த பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா வில் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரே கோவில் இந்த விஷ்ணு கோவில் என்பதால் இரண்டு தாலுகாவை சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினார்கள். மேலும் சேவா பாரதி சார்பில் தன்னார்வலர்கள் பூஜைக்கான பணிகளில் ஈடுபட்டதுடன்,அதிகாலையில் குளிரில் வந்த பக்தர்களுக்கு காபி மற்றும் அவில் பிரசாதங்களை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சுரேஷ் தலைமையிலான கமிட்டியினர் செய்திருந்தனர்.