Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » துருவன்
துருவன்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2012
17:28

ஸ்வாயம்புவ மனுவின் குமாரன் உத்தானபாதன். அவருக்கு சுநீதி, சுருசி என்ற இரு மனைவிகள். சுநீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். அரசனுக்கு சுநீதியிடம் பாராமுகம்; சுருசியிடமோ அடக்க முடியாத பற்று. ஒருநாள் துருவன் ஓடிவந்து தந்தையின் மடியில் அமர முயற்சித்த போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் சுருசி. அரசரின் மடிமீது அமர நீ எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும். அந்தப் பாக்கியம் இல்லாத நீ இங்கிருந்து ஓடிவிடு. அழுதுகொண்டே துருவன் தனது தாயிடம் சென்று நடந்ததைக் கூறினான். மகனே, எனது துரதிர்ஷ்டம் உன்னையும் பாதித்துள்ளது. வருந்தாதே, மனிதர்களின் மடியில் அமர்வதில் என்ன பெருமை உள்ளது துருவா? நீ பகவானின் குழந்தை. அவரது மடியில் அமர முயற்சி செய். அவரைப் பார்க்கத் தவம் செய். தாயின் அறிவுரைப்படி, ஐந்தே வயதான துருவன் வனம் சென்றான். அங்கே நாரதர் அவனுக்குக் காட்சி தந்தார். துருவா! தந்தையின் அன்பைவிட மேலான அன்பு ஸ்ரீமந் நாராயணனிடம் கொள்ளும் அன்புதான். இந்த மந்திரத்தைப் பக்தியுடன் ஜபித்து வா என்று கூறினார். சுவாமி, நான் தன்யனானேன். அடியேன் எங்கு சென்று தவம் செய்வது என்று நாரதரிடம் துருவன் வினவினான். குழந்தாய், யமுனா நதி தீரத்தில் உள்ள மதுவனத்திற்குச் சென்று தவம் செய். உனக்கு ஸ்ரீமந் நாராயணனின் பரிபூரணமான அருள் கிடைக்கும். துருவன் ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஏகாக்ர சிந்தையுடன் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்தான்.

சில நாட்கள் கழித்து அரசன் உத்தானபாதன், தான் செய்துவிட்ட தவறுக்காக வருந்தினான். ஐயோ, என்னவொரு மூடத்தனமான காரியம் செய்துவிட்டேன். ஆவலுடன் வந்த என் குமாரனைக் கட்டித் தழுவாமல் மனைவிக்குப் பயந்து ஒரு கோழையாகி விட்டேனே! குழந்தையின் மனம் என்ன பாடுபட்டதோ! அப்போது அவன் முன் நாரதர் தோன்றினார். வர வேண்டும் மகரிஷியே! தங்களை வணங்குகிறேன் என்று அரசன் வரவேற்றான். அரசே! உன் மகன் துருவன் மதுவனத்தில் தேவர்களும் அஞ்சும்படியான கடும் தவமியற்றுகிறான் என்பது உமக்குத் தெரியுமா? என்ன! ஐந்து வயது பாலகனா வனத்தில் தனியாகத் தவம் செய்கிறான்? என்ன கொடுமை! நான் இப்போதே சென்று அவனை அழைத்து வருகிறேன் என்றான். அரசே! வருந்தாதே; துருவன் உனது மடியையும்விட மிக மேலான பதவியை அடையப் போகிறான். அவன் பகவானால் ரட்சிக்கப்படுவதால் நீ கவலைப்படாதே என்று நாரதர் கூறினார். இருந்தாலும் அவன் சின்னஞ்சிறு பாலகன், அவனால் கடும் தவத்தைத் தாங்க முடியுமா? என்று மன்னன் வருத்தமடைந்தான். நிச்சயமாக முடியும் அரசே, அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் தவம் செய்கிறான் என்று கூறிவிட்டு நாரதர் அங்கிருந்து சென்று விட்டார். காட்டில் தவம் செய்த துருவன் ஒரு மாதம் கனிகளை உண்டான்; பிறகு ஒரு மாதம் கிழங்குகளை உண்டான்; அதன் பிறகு வெறும் இலைச்சருகுகளை உண்டான்; இறுதியில் காற்றை மட்டும் சுவாசித்துக் கடும் தவம் இயற்றினான்.

துருவனது தவத்தினால் பூவுலகு மட்டுமல்ல, தேவருலகும் தவித்தது. தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள். பகவானே! துருவனின் தவம் எங்களை அக்னியாக எரிக்கிறது. தாங்கள் அவனுக்கு அருள் புரிய வேண்டும் சுவாமி என்றனர். வருந்தாதீர்கள் தேவர்களே! துருவன் எம்மைத் தனது இதயத்தில் சிறைப்படுத்திவிட்டான். யாம் சென்று அவனுக்கு அருள் புரியும் காலம் வந்துவிட்டது. ஆழ்ந்த தவத்தில் இருந்த துருவனுக்கு பகவான் ஸ்ரீவிஷ்ணு காட்சியளித்தார். துருவன் சிறுவனானதால், பகவானைத் துதிக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை. அதனால் பகவான் தமது பாஞ்சஜன்யம் என்ற சங்கினால் அவனது கன்னத்தை வருடினார். துருவன் ஞானம் பெற்றுப் பகவானைத் துதித்தான். குழந்தாய்! ராஜ்யத்தை விரும்பித் தவமியற்றினாய். ஆகையால் நீண்ட காலம் சகல சவுபாக்கியங்களுடன் ஆட்சியை நடத்தி வா. பிறகு அனைத்திற்கும் மேலானதும் நிலையானதுமான துருவ நட்சத்திரமாக என்றென்றும் ஒளிர்வாய். பகவானே! தங்களால் அனுக்ரஹிக்கப்பட்டேன். எனது தாய் தந்தையருக்கும் மோக்ஷமளித்து அருள் புரியுங்கள் என்றான். பகவான் அவ்வாறே அருளி மறைந்தார். துருவன் நாடு திரும்பினான். அரசன் உத்தானபாதன் உரிய காலத்தில் துருவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, வானப்பிரஸ்தம் சென்றார். காட்டிற்கு வேட்டையாடச் சென்ற துருவனின் தம்பி உத்தமன் ஒரு யக்ஷனால் கொல்லப்பட்டான். அவனைத் தேடிச் சென்ற அவனது தாய் சுருசி காட்டுத்தீக்கு இரையானாள். இதை அறிந்த துருவன் யக்ஷர்களின் மீது போர் தொடுத்தான். பாட்டனார் மனு கூறியதால், போரை நிறுத்திய துருவனிடம், யக்ஷர் தலைவனான குபேரன்... துருவா! போரை நிறுத்து. உனக்கு வேண்டும் வரம் அளிக்கிறேன். யக்ஷர் தலைவனே! பகவானிடம் திடமான பக்தியைக் கொடுங்கள். பக்தி செய்வதில் எனக்குச் சலிப்பே வரக்கூடாது. நல்லது! அப்படியேயாகுக. துருவன் 36,000 ஆண்டுகள் அரசு புரிந்த பின் பகவானுக்கு மிக நெருங்கியவர்களான சுநந்த, நந்தர்கள் திவ்ய விமானத்துடன் துருவனை வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர். ஐயனே! என் தாயையும் என்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி வேண்டுகிறேன். மாமன்னரே, சற்று விமானத்தைப் பாருங்கள். தங்களது தாயார் முன்னரே அதில் அமர்ந்து உள்ளார். பகவானுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கை தெரியாதா? ஆஹா, என்னவொரு பேறு பெற்றோம் என்று அதிசயித்தான் துருவன். அந்த துருவனே இன்றும் துருவ நட்சத்திரமாக விளங்குகிறான்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.