பதிவு செய்த நாள்
30
மார்
2012
11:03
பொள்ளாச்சி : இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கோவில்களில் அறங்காவலர் நியமனம் குறித்த அறிவிப்புகள் மானிய கோரிக்கையில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகள், கட்சியினரிடையே மேலோங்கியுள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 36 ஆயிரத்து 441 கோவில்கள் உள்ளன. இதில், ஆயிரம் கோவில்களில் பரம்பரை அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற கோவில்களில், துறை மூலம் அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். சட்டசபை தேர்தலுக்கு பின் அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் ராஜினாமா செய்தனர். அதனால், புதிய அறங்காவலர்கள் நியமிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில், அதிக வருமானமுள்ள கோவில்களில் அறங்காவலர் பதவியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வினரிடையே போட்டி ஏற்பட்டது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து தே.மு.தி.க., விலகியதால், அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் பதவி அ.தி.மு.க.,வினருக்கே என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால், அறங்காவலர் பதவியை கைப்பற்ற "சிபாரிசு கடிதத்துடன் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம், கட்சியினர் விண்ணப்பித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்கள், ஆன்மிகவாதிகளின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று, கோவிலின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுபவர்களை அறங்காவலர்களாக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதால், அறங்காவலர் குழு நியமன அறிவிப்பு தாமதமாகி வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களாக அறங்காவலர்கள் நியமிக்காததால், பல்வேறு திருப்பணிகளும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதிகாரிகளுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், அறங்காவலர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால் துறை வாரியான மானிய கோரிக்கையில் அறங்காவலர் நியமனம் குறித்த அறிவிப்பு இடம் பெறும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகளும், கட்சியினரும் காத்திருக்கின்றனர்.