பதிவு செய்த நாள்
28
ஆக
2019
12:08
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், குண்டடம் - உப்பாறு அணை அருகே, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல்லை, திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய த்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:செயற்கரிய செயல்கள் செய்தவர்களுக் காக அமைக்கப்பட்ட நடுகல் தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 110 செ.மீ., அகலம், 85 செ.மீ., உயரம் உடைய இந்த நடுகல்லில், இரு ஆண் மற்றும் ஒரு பெண் சிற்பங்கள் உள்ளன. வலப்பக்கம் உள்ள வீரன், தன் இடது கையை இடுப்பில் வைத்து, வலது கையில் உள்ள நீண்ட வாளை தரையில் ஊன்றியபடி உள்ளார்.நடுவே உள்ள வீரன், தன் இரு கைக ளிலும் உள்ள ஆயுதத்தை நிலத்தில் ஊன்றியபடி உள்ளார்.
இவர்கள், இருவரும் தந்தையும், மகனுமாக இருக்கலாம். இடப்புறம் உள்ள பெண், தன் இடது கையை இடுப்பில் வைத்தபடி, வலது கையில் பூச்செண்டை உயர்த்திய நிலையில் காணப் படுகிறார்.பெண்ணுக்கு அருகில், ஒரு குழந்தை தன் தாயை, தன் இடது கையில் பிடித்த படியும், வலது கையை தொங்க விட்ட நிலையில் உள்ளது. நடுகல்லின் பின்புறத்தில் சந்திரன், சூரியன் முத்திரை இருப்பதால், அவர்கள் செய்த தானம், சந்திரன், சூரியன் உள்ளவரை நீடித்து நிலைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்த நடுகல், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.