பதிவு செய்த நாள்
20
செப்
2019
12:09
கிருஷ்ணகிரி: மழை பெய்து கிராமம் செழிக்க வேண்டி, கிராம மக்கள் திருப்பதிக்கு நடை பயணம் மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம் பட்டி, எம்.ஜி.ஆர்., நகரில் இருந்து நேற்று 19ல், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். முன்னோர்கள் காலத்தில் இருந்தே, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில், இக்கிராம மக்கள் நடைபயணமாக சென்று, சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு அருள் வந்து திருப்பதிக்கு அனைவரும் வர வேண்டும் என கூறியதால், கிராம மக்கள் ஒன்றிணைந்து நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது, 50 பெண்கள் உட்பட, 150 பேர் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆந்திரா மாநிலம் சித்தூர் வழியாக, 255 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 முதல், 35 கி.மீ., தூரம் சென்று, வழியிலுள்ள கோவில்களில் இரவு தங்கி செல்வோம். திருப்பதியில், சுவாமி யை தரிசனம் செய்துவிட்டு வாகனத்தில் வீட்டிற்கு திரும்புவோம். எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்தே, மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி இம்முறையை கடைபிடித்து வருகின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.