பதிவு செய்த நாள்
20
செப்
2019
01:09
கிருஷ்ணகிரி: சோழர் ஆட்சிக்கால கல்வெட்டை, வராலாற்று ஆய்வுக்குழுவினர் கண்டறி ந்துள்ளனர். கிருஷ்ணகிரி, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன், வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோருடன் வேப்பனஹள்ளி ஒன்றியம் தம்மாண்டரஅள்ளியில், ஒரு கல்வெட்டை கண்டறிந்துள்ளனர். இதில், வீரராஜேந்திரனின் எட்டாவது ஆட்சியாண்டில், சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிகக்குழு, விரியூர் நாட்டில் கோமறு உடையார் கோவில் திருப்பணிக்கு, பணம் தானமளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
இது குறித்து, அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது: பூர்வாதராஜர் என்ற குறுநில மன்னர்களின் தனித்த கல்வெட்டுக்களே அதிகம். அறிஞர் சாந்தலிங்கம், பூர்வாதராயர்களை ஒய்சாளர்களின் குறுநில தலைவர்கள் என்று குறிப்பிடுகிறார். வீரராஜேந்திரனை தவிர்த்து, மூன்றாம் குலோத்துங்கனும் இப்பெயரை சூட்டிக் கொண்டதாக, சில கல்வெட்டுக்கள் தெரி விக்கின்றன. இறுதியாக ஆண்ட மூன்றாம் ராஜேந்திரன் என்பவரும் வீரராஜேந்திரன் என குறிப்பிடப்படுவது, ஒரு கல்வெட்டு வாயிலாக தெரிகிறது.
அத்திமல்ல பூர்வாதராயன், கி.பி.,1260ல் வாழ்ந்ததாக, வேறு சில கல்வெட்டுகளின் மூலம் தெரிய வருவதால், இவரை மூன்றாம் ராஜராஜன் காலத்தவர் எனக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வில், வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.