சென்னையில் வசித்த அந்தப் பெண்மணியின் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்தார். அவள் மட்டும் தனியாக இருந்தாள். அமைதியாக போய்க் கொண்டிருந்த வாழ்வில் திடீரென புயல் வீசியது. கணவரின் நண்பரிடமிருந்து அப்பெண்ணுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் அவளது கணவர் போரில் இறந்ததாகவும், சடலம் கூடக் கிடைக்கவில்லை என்றும், அவரது மரணம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வந்து சேரும் என்றும் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தைப் படித்த அவளுக்கு கண்ணீர் பெருகியது. தகவல் வராததால் கடிதம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. மனசுக்குள்ளேயே மறுகினாள்.
அப்போது அவளின் உறவுக்காரப்பெண் வீட்டில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. அதில் பங்கேற்கும்படி வற்புறுத்தி அழைத்தனர். ஆனால் அவளுக்கு பூஜையில் பங்கேற்கலாமா? கூடாதா என ஆயிரம் கேள்விகள் எழுந்தன. தகவல் வராமல் விஷயத்தை வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறினாள். இறுதியாக காஞ்சிபுரம் மடத்திற்கு செல்ல முடிவு செய்தாள். வரிசையில் காத்திருந்து சுவாமிகளை தரிசித்தாள். தன் நிலையைச் சொல்லி அழுதாள். அருள் பொங்கும் கண்களால் பார்த்த சுவாமிகள் கை நிறைய குங்குமம் எடுத்து பிரசாதமாக கொடுத்தார். அவளின் கணவர் உயிருடன் இருக்கிறார் என்றும், சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ளலாம் என்றும் சொல்லி ஆசீர்வதித்தார். நிம்மதியுடன் சென்னைக்கு புறப்பட்ட அவள், உறவினர் வீட்டுக்குச் சென்றாள். கணவர் நலமாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் மங்களகரமாக நெற்றியில் குங்குமம் இட்டாள். அவள் நம்பிக்கை பலித்தது. கொஞ்சநாளில் சுவாமிகள் சொன்னபடியே கணவர் உயிரோடு இருக்கும் தகவல் வந்தது. காயங்களுடன் தப்பித்த அவர், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை முடித்து பத்திரமாக ஊர் திரும்பினார். மீண்டும் சுவாமிகளை தரிசிக்க தம்பதியாக வந்த போது, அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. - திருப்பூர் கிருஷ்ணன்