கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா மகாமககுளத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது. உலகில் முதன்முதலாக பிரளய காலத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோவில் தோன்றியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. இத்தகைய சிறப்புடைய இக்கோவிலில் மந்திர பீடேஸ்வரியாக மங்களாம்பிகை அம்மன் இறைவனின் இடது பாகத்தில் சன்னதி கொண்டுள்ளார். கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்வதற்காக மகாமககுளத்தில் புனித நீராடி ஈசனையும், அன்னையையும் தரிசித்து பேறுபெற்றதாக ஐதீகம். மகாமக குளத்தில் ஈசனின் தேவியாக எழுந்தருளியுள்ள மலைமகளான மங்களாம்பிகை எனும் மந்திரபீடேஸ்வரிக்கு அலைமகளும், கலைமகளும் சாமரம் வீச ஆண்டுதோறும் பங்குனிஉத்திர பெருவிழாவை யொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மங்களாம்பிகை பவனிவந்து அருள்பாலிக்கும் தெப்பத்திருவிழா கண்டருளும் நிகழ்ச்சி நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. குளத்தின் 4 கரைகளுக்கும் மங்களாம்பிகை மற்றும் அலைமகளும், கலைமகளும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் அங்கேயே தெப்பம் நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றிரவு 7மணிஅளவில் மின் விளக்கு அலங்காரத்தில் மீண்டும் தெப்ப உலா நடந்தது.