பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியுள்ளதை வாசிப்போமோ! ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான், வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர் ‘கேநோபநிஷத்’ பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச் செலுத்த அருள்புரிய வேண்டும்.
பணம் தான் குறி என்ற நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின் அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும். வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன ஆதிசங்கரர், “உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால் ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும், அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்,” என்று முடித்திருக்கிறார். ‘‘ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள் ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள் வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால் தான்,” என்கிறார். பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், “வித்வானாக(கல்விமானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,” என்கிறார்.படிப்பாளியைப் பார்த்தவுடன், “முகத்திலேயே என்ன அறிவுக்களை, என்ன தேஜஸ்!” என்று சொல்கிறோம். அம்பிகையின் கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.