பதிவு செய்த நாள்
04
நவ
2019
04:11
தேனி: தேனி மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. ஏராளாமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.
* தேனி பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில், உற்ஸவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மஹாகணபதி ஹோமம், மங்கல நாணுக்கு பூஜை செய்து, வள்ளி தெய்வசேனாவுக்கு முருகன் மங்கல நாண் கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாண தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் நேற்று காலை விஷேச அபிஷேகங்கள், திருச்செந்துார் சுப்ரமணியர் பச்சை சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது. பாலப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாணம் தரிசனம் பார்த்துச் சென்றனர்.
* தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நேற்று காலை மாப்பிள்ளை சீர் அழைத்தல், மஹா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. மங்கல் நாண் பூஜை செய்து ஸ்ரீவள்ளி குஞ்சரி வடிவழகர் உற்ஸவ மூர்த்திகள் மணக்கோலத்தில் எழுத்தருளினர். மாங்கல்ய தாரணம், கட்டியம் வாசித்தல், சிறப்பு தீபாராதனை, ஆலய உள்பிரகார உற்சவ உலா நடந்தது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரினம் செய்தனர்.
கம்பம்: கந்தசஷ்டி விழாவில் காலை கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் வெண்பட்டுடுத்தி முருகப் பெருமான் எழுந்தருளினார். வள்ளி தெய்வானை பச்சை, மஞ்சள் நிற பட்டு சேலை அணிந்து மணக்கோலத்தில் இருந்தனர். காலை 10:10 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க முருகன், வள்ளி தெய்வானை கழுத்தில் மங்கல நாணை சூட்டினார். சிறப்பு அபிேஷக ஆராதனைகளில் பக்தர்கள் பங்கேற்றனர். கோாயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. வேலப்பர் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில்களிலும் முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பல இடங்களில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
* பெரியகுளம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா ஏழு நாட்கள் நடந்தது. நேற்று பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு கெட்டி மேளத்துடன் திருக்கல்யணாம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏராளமான புதுமணத்தம்பதிகள் கோயிலில் ‘தாலி பெருக்கி’ கட்டிக்கொண்டனர். பக்தர்களுக்கு கல்யாண விருந்தினை, வழக்கறிஞர் அம்பாசங்கர் வழங்கினார்.ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு செய்திருந்தனர்.
பெரியகுளம் ஞானம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கல்யாண விருந்து வழங்கப்பட்டது.போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. நேற்று காலை தேவசேனா சுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருளாசி பெற்றனர்.அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் அண்ணாத்துரை செய்திருந்தார்.