பதிவு செய்த நாள்
04
நவ
2019
04:11
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி, வள்ளி, தெய்வானை திருகல்யாணத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும் முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம், வத்திராயிருப்பு பகுதி கோயில்களில் முருகன் திருக்கல்யாண உற்ஸவம் வெகுசிறப்புடன் நடந்தது.
* மம்சாபுரம் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில், நேற்று காலை 10:30 மணிக்குமேல் கந்தசஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. திருமண வைபவம் நடந்தபின், ஊஞ்சலில் எழுந்தருளிய சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருக்கல்யாண விருந்து நடந்தது. விழாவில் அறநிலையத்துறை ஆய்வாளர் பாண்டியன், கோயில் தலைவர் துரைச்சாமி, செயலர் வைரமுத்து.சிவராம், வெங்கடேஷ், பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், எஸ்.ஐ., ரமேஷ்பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில், திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. அதிகாலையில் மூலவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அப்போது பக்தர்களின் சஷ்டி பாராயணம் நடந்தது. பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை எழுந்தருளினர். அப்போது சுவாமிக்கு பூணுால் அணிவித்து, கையில் காப்பு கட்டப்பட்டது. சிவாச்சார்யர்கள் மந்திரம் ஒலிக்க, முருகன் தேவியர் இருவருடனும் மாலை மாற்றி, தாலி அணிவித்தார். பக்தர்கள் அட்சதை துாவி வணங்கினர். திருமண விருந்து நடந்தது. விழாவில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், கந்தசஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் வெகுசிறப்புடன் நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு மூலவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து, வெள்ளியங்கி சாற்றப்பட்டது.பின்னர் கொலுமண்டலத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை எழுந்தருளினர். அப்போது ரகுபட்டர் திருமண வைபவத்தை நடத்தினார்.விழாவில் தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் ஜவகர் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.