மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்; லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்



 மயிலம்; மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்  நடந்தது.


மயிலத்தில் பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோயிலில் கடந்த  2ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள்வழிபாடுகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து உற்சவர் தங்க மயில், யானை, குதிரை, நாக வாகனம் போன்றவற்றில் கிரிவல காட்சி நடந்தது. நேற்று 9ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடந்தது. இன்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 5:45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் வடம் பிடித்து துவக்கிவைத்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர். முதலில் விநாயகர் தேரும் தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சமேத சுப்பரமணியர் சுவாமி தேரடி வீதியில் வலம் வந்தார். அப்போது தேரடியில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைந்த மணிலா, கம்பு, மிளகாய், உளுந்து உள்ளிட்ட தானியங்களை தேரடியில் வீசி நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.


பின்னர் தேர் காலை 7.10 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து தேரில் வலம் வந்த உற்சவருக்கு மகா தீபாரதனை நடந்தது. பின் மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பல்வேறு  ஊர்களிலிருந்த வந்திருந்த முருக பக்தர்கள் நேற்று  பன்னீர், பால், புஷ்ப காவடிகள் எடுத்து நெர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் மூன்றாம் பிரகாரத்தில் பெண்கள், குழந்தைகள் என பலர் அங்கபிரதட்சணம் செய்தனர். சென்னை, புதுவை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் அன்னதானம் வழங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.  விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். விழாவில் முன்னாள் அமைச்சர் செஞ்சி  மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், சேதுநாதன், ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி தாளாளர் பழனியப்பன் உள்ளிட்ட பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்