கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதி அழகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் திருகோவில் குண்டம் திருவிழாவை ஒட்டி நடந்த, திருத்தேரில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோத்தகிரி கடை வீதியில் எழுந்தருளியுள்ள அழகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில், வருடாந்திர திருவிழா, கடந்த, 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு, ஆராதனை, அபிஷேகம், மலர் அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை, பூ குண்டம் நடந்தது. அதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மாலையில் அம்மனின் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.