குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க உள்ளது.
குன்றத்துாரில், 12ம் நுாற்றாண்டில் பிறந்தவர் சேக்கிழார். இவர், 63 சைவ நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பெரியபுராணம் எனும் காப்பியத்தை இயற்றியவர். குன்றத்துாரில், சேக்கிழார் வாழ்ந்த இடத்தில், பிற்காலத்தில் அவருக்கு கோவில் அமைக்கப்பட்டது. இங்கு, தினமும் ஏராளமானோர் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும், மாசி மாதம் 17ம் தேதியிருந்து 21ம் தேதி வரையில், 5 நாட்கள் சேக்கிழார் மீது சூரிய ஒளி விழுவது, இக்கோவிலின் சிறப்பு. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், உபயதாரர்கள் நிதி 3.35 லட்சம் ரூபாயில், அண்மையில் புனரமைக்கப்பட்டது. மேலும், கோவில் அருகில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பசுக்கள் காப்பகம் மற்றும் 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சொற்பொழிவு மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், சேக்கிழார் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பசுக்கள் காப்பகம், சொற்பொழிவு மண்டபம் திறப்பு விழா, பிப்., 11ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.