ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பனில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் சிம்ம தீர்த்த குளத்தை புதுப்பித்து மகா பூஜை, தீபாராதனை நடத்தினர்.
ராமாயண வரலாற்றில், சீதையை மீட்க ஸ்ரீராமர், வானர் சேனையுடன் ராமேஸ்வரம் வந்தபோது பாம்பனில் உள்ள நீர்நிலையில் சிவபூஜை செய்து வழிபட்டு, புனித நீராடினார். அப்போது சிவன் சிங்கம் உருவத்தில் காட்சியளித்தார். அதனால் இத்தீர்த்தம் சிம்ம தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. எந்த ஒரு காரியம், பயணத்தை துவங்குவதற்கு முன் இங்கு நீராடி தரிசித்தால், வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். பழமையான இத்தீர்த்தம் குளத்தை மணல் மூடி கிடந்ததால், இதனை விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் மராமத்து செய்து சுற்றுச்சுவர் அமைத்து புதுப்பித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இத்தீர்த்த குளம் முன்பு பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதியம்மா தலைமையில் பக்தர்கள் மகா பூஜை, தீபாராதனை நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.