சேதுக்கரை: ராமநாதபுரம் சேதுக்கரையில் உள்ள சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் எதிரே கடலுக்குள் பக்தர்கள் புனித நீராடும் இடத்தின் அருகில் ஏராளமான சுவாமி சிலைகள் நின்ற நிலையிலும், சாய்ந்த நிலைகளிலும் நுõறு அடி துõரத்தில் அடுத்தடுத்து புதைந்து கிடக்கின்றன. இங்கு கிடந்த ஒரு ஆஞ்சநேயர் சிலையை வெளியூர் பக்தர்கள் கடற்கரை அருகிலேயே நிறுவி, வழிபட்டுச் சென்றனர். இதை இங்கு வரும் பக்தர்களும் தவறாமல் வழிபடுகின்றனர். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் புனித நீராடிய பக்தர்கள் காலில் தட்டுப்பட்ட ஜெயவீர ஆஞ்சநேயர் சிலை தான் கடற் கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள புதுக்குடியிருப்பு ஆற்று பகுதியிலும் ஏராளமான சிலைகள் கிடக்கின்றன. சேதுக்கரை அருகே கோரைக்குட்டம் கிராமத்தில் உள்ள கொட்டகுடி ஆற்றுப் படுகையில், தலை முதல் இடுப்பு பகுதி வரை சேதமுற்ற நிலையில் சமண மதத்தை தோற்றுவித்த மகாவீரர் (தீர்த்தங்கரர்) சிலை ஒன்று கடலுக்குள் மூழ்கி கிடக்கிறது. 3 அடி உயரத்தில் கால்களை மடக்கி மகாவீரர் யோகாசன நிலையில் அமர்ந்திருப்பது போல் அச்சிலை உள்ளது. அதன் முன் மற்றும் பின்பக்கத்தில் அழிந்த நிலையில் பிராமி எழுத்துக்கள் உள்ளன. அச்சிலை சேதுக் கரைக்கு எப்படி வந்தது என்ற விவரம் யாருக்கும் தெரிய வில்லை.
இதுகுறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் வே.ராஜகுரு கூறுகையில், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் அனுமந்தக்குடி என்ற ஊரில் வாழ்ந்த சமணர்கள் பற்றிய குறிப்பு அங்குள்ள செப்பேட்டில் உள்ளது. பெரியபட்டினம் கடல் பகுதியில் தொல்லியல்துறைக்கு சில சிற்பங்களும் செம்பு பொருட்களும் சமண மற்றும் புத்த மத தடயங்களாக கிடைத்துள்ளது. பின்னாளில், முழு வடிவம் பெறாத சிலைகளை வழிபடுவது ஆகம விதிப்படி நல்லதல்ல; அவற்றை நீர்நிலைகளில் இடுவது மரபாக வந்ததால், உடைந்த மகாவீரர் சிலையும் சேதுக்கரை கடலில் விடப்பட்டிருக்க வேண்டும். இச்சிலையை கைப்பற்றி தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால், இன்னும் பல அரிய தகவல்களை நாம் பெறலாம், என்றார்.