மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவமும், அதைத் தொடர்ந்து ராபத்து உற்சவம் நடைபெறும்.
20ம் தேதி காலை 9:15 மணிக்கு திருமொழி திருநாள் என்னும் பகல் பத்து உற்சவம் துவங்கியது. நேற்று அதிகாலை, மூலவருக்கு கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனம் நடந்தது. கால சந்தி பூஜை முடிந்து அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடைசூழ, மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்து, ரங்க மண்டபத்தை அடைந்தார். அங்கு நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகிய உற்சவ மூர்த்திகள், பெருமாள் முன் எழுந்தருளி பரிவட்ட , சடாரி மற்றும் மாலை மரியாதை பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோயில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோருக்கு பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது. அவர்கள் திவ்ய பிரபந்தத்தில் உள்ள பெருமாள் திருமொழி மற்றும் திருமொழி பாசுரங்களை சேவித்தனர். பின்பு மஹா தீபாராதனை நடந்தது. திருவாராதனம் உபநிஷத் அஷ்டோத்திரம் நாமாவளியை அர்ச்சகர் திருவேங்கடம் சேவித்தார். இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். @block_B@ @subboxhd@சொர்க்கவாசல் திறப்பு@@subboxhd@@ 30ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி என்னும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்று இரவு திருவாய்மொழித் திருநாள் ராப்பத்து உற்சவம் துவங்க உள்ளது. ஜனவரி 6ம் தேதி குதிரை வாகனத்தில் திருமங்கை மன்னன் வேடுபரியும், எட்டாம் தேதி திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை உற்சவம் பூர்த்தியும் நடைபெற உள்ளது.