பதிவு செய்த நாள்
26
நவ
2019
02:11
கலியுகத்தின் முடிவில் நல்லவர்கள் வாழும் சத்ய யுகம் துவங்கும். அதை வரவேற்கும் விதத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் முக்தி நிலையம் என்னும் சத்ய யுக கோயில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே வளாகத்தில் 108 கோயில்களும், 243 விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள சித்திரகுப்தரை தரிசித்தவருக்கு மரண அவஸ்தை உண்டாகாது. நிம்மதியான இறுதிக்காலம் அமையும். மனித உடம்பில் உள்ள குண்டலினி சக்தியை குறிக்கும் விதத்தில், முக்தி ஸ்தூபி உள்ளது. அருகில் 27 நட்சத்திர தேவதைகளும், அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் உள்ளன.
ஞானமுக்தி விநாயகர், அமிர்தேஷ்வர், ஷீரடி சாய்பாபா, மும்மூர்த்திகள், நான்கு வேதம், பாண்டுரங்கன், ராதா கிருஷ்ணர், ராமர், லட்சுமி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, காளி, சுதர்சனர், ஆண்டாள், சப்த ரிஷிகள், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் கோயில்கள் உள்ளன. இங்கு எமதர்மனுக்கு கோயில் உள்ளது. சாந்த முகத்துடனும், புன்முறுவலுடனும் உள்ள இவரிடம் பாசக்கயிறு இல்லை. சத்ய யுகத்தில் வாழ்பவர்கள் தர்ம சிந்தனையுடன் இருப்பதால் யாரையும் துன்புறுத்தும் தேவை இருக்காது. காரணம் யாரும் பாவச் செயலில் ஈடுபடாததால் அனைவரும் முக்தி என்னும் மோட்சநிலைக்கு தகுதி பெறுவர். எமனுக்கு அருகில் அவரது உதவியாளர் சித்ரகுப்தர் ஏடு, எழுத்தாணியுடன் இருக்கிறார்.
கலைநயத்துடன் வட்ட வடிவில், நவராஜ மண்டலம் என்னும் கோயில் உள்ளது. இதில் கால சக்கரத்தை இயக்கும் கடவுளான காலாதீஸ்வரர் வீற்றிருக்கிறார். சுற்றிலும் உள்ள மண்டபங்களில் 9 கிரகங்கள், 12 ராசி நாயகர்கள், 27 நட்சத்திர தேவதைகள் உள்ளனர் இவர்களை வலம் வருவோருக்கு கிரக தோஷம் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும். கோயில் சார்பாக 50 கிராமங்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்குகின்றனர். பெண்களுக்கு தையல், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக தரப்படுகிறது.
* எப்படி செல்வது?
மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில் 25 கி.மீ., (ராயபாளையம் விலக்கில் கோயில் உள்ளது)
* தொடர்புக்கு: 94430 32619, 98432 42619