உயிரினங்களை படைக்கும் பிரம்மா, காக்கும் மகாவிஷ்ணுவுக்கு இடையே நானே பெரியவன் என்ற போட்டி எழுந்தது. அதை அடக்க எண்ணிய சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றினார். இருவரும் அடி, முடி தேடும்படி அசரீரி கேட்டது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் வானுலகம் சென்றார். சுவாமியின் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்றார் விஷ்ணு. அவர்களால் நெருங்க முடியாமல் போகவே, சிவனே முழுமுதற்கடவுள் என உணர்ந்தனர். அந்த நாளையே திருக்கார்த்திகையாக கொண்டாடுகிறோம். இந்நாளில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றி சிவனை ஒளிப்பிழம்பாக வழிபடுகிறோம்.
தீபம் போல ஜம் ஜம்: கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் விளக்கேற்றுவர். மலையில் ஏற்றப்படும் மகாதீபத்தின் ஜோதி, தாங்கள் ஏற்றிய விளக்குகளிலும் படிவதாக நம்புகின்றனர். அந்த விளக்குகளை வீடுகளுக்கு எடுத்து வருவதால் வாழ்க்கை கார்த்திகை தீபம் போல பிரகாசிக்கும் என்பது நம்பிக்கை.
நெய் விளக்கு நிறையா இருக்கு: திருக்கார்த்திகையில் மண் அகலில் நெய், நல்லெண்ணெய் விட்டும், வாசலில் கோலமிட்டு ஐந்து முக பெரிய விளக்கிலும் ஒளி ஏற்றுவர். பசுவின் உடம்பில் எல்லா தெய்வங்களும், தேவர்களும் வாசம் செய்கின்றனர். அதில் அம்பிகை குடியிருக்கிறாள். விளக்கில் நெய் விட்டு தீபமேற்றியதும் அது சிவமாகிய ஜோதியுடன் கலந்து சிவ சக்தி சொரூபமாகி விடுகிறது. தீபாவளி ஐப்பசி அமாவாசையிலும், திருக்கார்த்திகை கார்த்திகை பவுர்ணமியிலும் கொண்டாடப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறப்பதை தீபாவளியும், முழு நிலவு போல நம் வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்பதை தீபத்திருவிழாவும் உணர்த்துகின்றன.