பதிவு செய்த நாள்
25
மார்
2020
04:03
வாய் மணக்கும் திருப்புகழ் பாடல்கள் உருவாகக் காரணமான தலம் வயலுார். இங்குள்ள முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடந்தேறும்.
சோழ மன்னர் ஒருவர் வயல்வெளிக்குச் சென்ற போது ஒரே கணுவில் மூன்று கரும்புகள் இருப்பதைக் கண்டார். பூமியைத் தோண்டிய போது அந்த இடத்தில் சுயம்புலிங்கம் இருப்பதைக் கண்டார். அவருக்கு கோயில் எழுப்பி சுவாமிக்கு ஆதிநாதர் என்றும், அம்மனுக்கு ஆதிநாயகி என்றும் பெயர் சூட்டினார். வயல்கள் நிறைந்த ஊர் என்பதால் ‘வயலுார்’ என பெயர் வந்தது.
ஒருமுறை அருணகிரிநாதருக்கு, ‘வயலுாருக்கு வா!’ என அசரீரி கேட்டது. அதை ஏற்று இங்கு வந்த போது முருகன் காட்சி தரவில்லை. ஏமாற்றம் அடைந்ததால் ‘அசரீரி பொய்யோ?’ என உரக்கக் கத்தினார். அப்போது காட்சியளித்த முருகன் வேலினால் அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்’ என எழுதி அருள்புரிந்தார். இதன் பின் இத்தலத்தில் தங்கி 18 திருப்புகழ் பாடல்களைப் பாடினார்.
பக்தரான வாரியார் தரிசிக்க வந்த போது அர்ச்சகருக்கு ஐம்பது காசு காணிக்கை அளித்தார். அன்றிரவு கோயில் நிர்வாகியின் கனவில், ‘என் பக்தனிடம் 50 காசு வாங்கினாயே? அதைக் கொண்டு உன்னால் கோபுரம் கட்ட முடியுமா?’ என கோபித்தார் முருகன். கோயிலில் விசாரித்த நிர்வாகிக்கு முதல்நாள் வாரியார் வந்ததும், ஐம்பது காசு காணிக்கை அளித்த விபரமும் தெரிய வந்தது. நிர்வாகி அதை மணியார்டராக வாரியாருக்கு அனுப்பி வைத்தார். இதன் பின்னர் வாரியார் இத்தலத்தில் திருப்பணி செய்து கும்பாபிேஷகத்தை நடத்தி முடித்தார். ஆதிநாதர் சன்னதிக்குப் பின்புறத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சியளிக்கிறார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவரை தரிசித்தால் தடை நீங்கி நல்ல மணவாழ்க்கை அமையும். கந்தசஷ்டியன்று முருகன்– தெய்வானை, பங்குனி உத்திரத்தன்று முருகன் – வள்ளி திருக்கல்யாணமும் நடக்கும். இரண்டு காலையும் தரையில் ஊன்றி நிற்கும் சதுர தாண்டவ நடராஜர், அருணகிரிநாதருக்கு காட்சியளித்த ‘பொய்யா கணபதி’ சன்னதி இங்குள்ளது.
எப்படி செல்வது: திருச்சியில் இருந்து 11 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகாசி பிரம்மோற்ஸவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்,
நேரம்: காலை 6:00 – 1:00 மணி, பகல் 3.30 – 9:00 மணி.
தொடர்புக்கு: 0431 – 2607 344, 98949 84960
அருகிலுள்ள தலம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 15கி.மீ.,