ஸ்ரீராமநவமி நடக்கவிருந்த நேரத்தில் காந்தியவாதி ஒருவர் மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். தீவிர ராம பக்தரான காந்திஜி ‘ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்’ என்னும் பஜனைப் பாடலைத் தான் செல்லும் இடத்தில் எல்லாம் பாடி மக்களுக்கு ராம பக்தி, சுதந்திர உணர்வை ஊட்டியவர். மகாசுவாமிகளுக்கு காந்திஜி மீது மதிப்பு இருந்தது என்பதெல்லாம் நாம் அனைவரும் அறிந்த செய்தி.
இதையெல்லாம் சிந்தித்தபடி மகாசுவாமிகளை வணங்கிய காந்தியவாதி, ஸ்ரீராமநவமியை எப்படி கொண்டாட வேண்டும் என சுவாமிகளிடம் கேட்டார். ‘‘ஸ்ரீராம நவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கம்ப ராமாயணத்தில் ராமவதாரத்தை விவரிக்கும் பாடல்களைப் படிக்க வேண்டும். இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் விரதமிருப்பது அவசியம். எல்லா ஊர்களிலும் உள்ள பெருமாள் கோயிலிலோ அல்லது பஜனை மடத்திலோ ஒன்றாக கூடி ராம நாமத்தை ஐந்து நிமிடம் ஜபிக்க வேண்டும். அதன் பின், ‘ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்’ என்னும் 13 எழுத்துக்கள் கொண்ட மந்திரத்தை ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதைப் பின்பற்றிச் சொல்லியபடி ஊரைச் சுற்ற வேண்டும். முடிவாக பத்து நிமிடம் பஜனை பாடல்களைப் பாடி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். மறுநாள் காலையில் மீண்டும் அதே இடத்தில் கூடி, கம்ப ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யலாம். அதன்பின் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது நல்லது. பட்டாபிேஷகத்தின் போது ராமனின் தலையில் வைத்த கிரீடத்தை, தங்களின் மீது வைத்ததாக எண்ணி எண்ணி மூவுலகமும் மகிழ்ந்ததாக கம்பராமாயணம் சொல்கிறது. மக்களின் மனதில் தெய்வ பக்தி, நன்னடத்தை வேரூன்றி வளரவேண்டும் என ஸ்ரீராமரை பிரார்த்திக்க வேண்டும்’’ என்றார். சுவாமிகளிடம் குங்குமப் பிரசாதம் பெற்ற அவர் ‘காந்திஜி கண்ட ராம ராஜ்ஜியம் உருவாக இதுவே வழி’ என்ற நம்பிக்கையுடன் விடை பெற்றார்.