சொல்லிடில் எல்லை யில்லை சுவையிலாப் பேதை வாழ்வு நல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தேன் அல்லேன் மல்லிகை மாட நீடு மருங்கொடு நெருங்கி எங்கும் அல்லிவண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைஒன்று இல்லாக் குரம்பைவாய்க் குடியிருந்து குலத்தினால் வாழ மாட்டேன் விரும்பியே கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும் அரும்புவாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
மணமென மகிழ்வர் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம் பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் பணையிடைச் சோலை தோறும் பைம்பொழில் விளாகத்து எங்கள் அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
தாழ்வெனும் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்குஒன்று ஈயகில்லார் ஆழ்குழிப் பட்ட போது அலக்கணில் ஒருவர்க்கு ஆவர் யாழ்முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே.
உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம்மேல் வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் கரியமால் அயனும் தேடிக் கழலிணைக் காண மாட்டா அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே.