பதிவு செய்த நாள்
16
ஜன
2025
11:01
திருவொற்றியூர்; திருவொற்றியூர், காலடிப்பேட்டை – கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம், திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி சேவை, அதிகாலை நடக்கும். நிறைவாக போகி பண்டிகையன்று இரவு, ஆண்டாள் திருக்கல்யாண உற்வசம் நடக்கும். இந்நிகழ்வில் பங்கேற்கும் மணமாகாத இளைஞர்களுக்கு, திருமணம் விரைவில் கைக்கூடும் என்பது ஐதீகம். அதன்படி, சன்னதி முன், மைய மண்டபத்தில், உற்சவர் ஸ்ரீதேவி – பூதேவி சமேதரான பவள வண்ண பெருமாள், மணகோலத்தில் எழுந்தருளினார். ஆண்டாள் நாச்சியார் கோலம் பூண்டார். பின், ஹோமம் வளர்க்கப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்கப்பட்டன. தொடர்ந்து, ஆண்டாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்நிகழ்வில், திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதமாக முகூர்த்த தேங்காய் வழங்கப்பட்டது. இந்த முகூர்த்த தேங்காயை பெற்று வீட்டில் வைத்து பூஜை செய்தால், விரைவில் திருமண வரன் கைகூடுவது இத்தலத்தின் சிறப்பாகும்.