பதிவு செய்த நாள்
16
ஜன
2025
11:01
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், 5.30 கோடி ரூபாய் செலவில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடைகள் வாடகைக்கு ஏலம் விடுவதன் வாயிலாகவும், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை வாயிலாகவும், ஆண்டுக்கு பல கோடி ரூபாய், கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராஜகோபுரம் கட்டும் படி, அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு ஏழு நிலை ராஜ கோபுரம் கட்ட, அனுமதி வழங்கியதை அடுத்து, பல ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கின. கல்காரப் பணிகள் முடிந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் நின்றன. தற்போது, ஐந்து கோடியே, 30 லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கி, துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஏழு நிலையில், இரண்டாம் நிலைக்கு கான்கிரீட் போட, அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி பணிகளை துரிதமாக செய்யும்படி, ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி வருகிறார். கோபுரம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவதை அடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் சந்தோசம் அடைந்துள்ளனர்.