பதிவு செய்த நாள்
03
ஜூலை
2020
05:07
காஞ்சிபுரம் மாவட்டம் எலுமியங்கோட்டூரில் தெய்வநாயகேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் கோயில் உள்ளது. தேவமங்கையான ரம்பா வழிபட்ட இந்த லிங்கத்தை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. குச்சியால் ஆடை, மாலைகளை அணிவிப்பது வித்தியாசமானது.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் மூவர் இருந்தனர். பறக்கும் கோட்டைகளை அமைத்து, அவற்றில் பறந்து தேவர்களைத் தாக்கினர். வருந்திய தேவர்கள் சிவனிடம் முறையிட அவரும் தேரில் புறப்பட்டார். ஆனால் முதல் கடவுளான விநாயகரை வழிபடுவதற்கு மறந்தார். எந்த செயலில் ஈடுபட்டாலும் முதலில் விநாயகரை வழிபடுவது நம் மரபு. மரபை மீறியதால் தேரின் அச்சு முறிந்தது. மரமல்லிகை காடாக இருந்த இத்தலத்தின் வழியாகச் சென்ற தேர் நிலை குலைந்தது. அதை தாங்கிப் பிடித்தார் மகாவிஷ்ணு. அப்போது சிவன் தடுமாறவே அவரது கழுத்தில் கிடந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று தோன்றியது. பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு ‘தெய்வ நாயகேஸ்வரர்’ எனப் பெயரிட்டனர். இந்த லிங்கம் புனிதமானது என்பதால் பூஜையின் போது கூட அர்ச்சகர்கள் யாரும் தொடுவதில்லை. குச்சியின் உதவியுடன் சுவாமிக்கு ஆடை, மாலைகள் அணிவிக்கின்றனர்.
தேவகன்னியரான ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் அழகுடன் திகழ தேவகுரு பிரகஸ்பதியிடம் ஆலோசித்தனர். சிவபூஜை செய்யும்படி அவர் தெரிவித்தார். அவர்கள் இங்கு சிவபூஜைக்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினர். அதில் நீராடி விட்டு, 16 பட்டை சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிவனருளால் பேரழகு மங்கையராக மாறினர். அரம்பையருக்கு அருள் செய்ததால் சுவாமிக்கு ‘ரம்பேஸ்வரர்’ என்றும், தலத்திற்கு ‘ரம்பையங் கோட்டூர்’ என்றும் பெயர் வந்தது. தற்போது ‘எலுமியங்கோட்டூர்’ எனப்படுகிறது. கோயிலின் நுழைவு வாயில் அருகே 16 பட்டையுடன் கூடிய ரம்பாபுரிநாதர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
தேவமங்கையர் வழிபட்ட போது சிவன் யோக தட்சிணாமூர்த்தியாக காட்சியளித்து, “நீங்கள் மூவரும் என்றென்றும் இளமை, பொலிவுடன் விளங்குக” என வரமளித்தார். வலக்கையை மார்பில் வைத்த நிலையில் கோஷ்டத்தில் இருக்கும் இவரை வழிபட்டால் இளமையும், பொலிவும் உண்டாகும். சிவத்தலங்களை தரிசித்த ஞான சம்பந்தர் இத்தலத்தின் வழியாக வந்த போது பசுவாகத் தோன்றி சிவன் வழிமறித்தார். தான் கோயில் கொண்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டவே, சம்பந்தரும் பதிகம் பாடினார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் ஏப். 2 - 7 , செப். 5 - 11 வரை மூலவர் மீது சூரிய ஒளி படர்கிறது.
எப்படி செல்வது:
* காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., * சென்னையிலிருந்து 60 கி.மீ.,
சென்னை-- அரக்கோணம் சாலையிலுள்ள கூவம் கிராமத்தில் இருந்து 6 கி.மீ., எலுமியங்கோட்டூர்.