பதிவு செய்த நாள்
21
ஜூன்
2012
04:06
புராணங்களில் காணப்படும் கதைகள்: (சாம்ப புராணம் எனப்பட்ட சூரியபுராணத்தில் சூரியன் பரம்பொருளாகச் சொல்லப்பட்டுள்ளார். அவரே மும்மூர்த்திகளாக இருந்து உலகைப் படைத்துக் காத்து அழிப்பவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவரிடமிருந்து தான் எல்லாமே தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது. இதர புராணங்களில் சூரியன் பிரதான தேவதையாகக் குறிக்கப்படவில்லை. அவர் சம்பந்தப்பட்ட கதைகளைத் திரட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.)
1. தர்ம தேவதையின் சாபம்
கசியபப் பிரஜாதிபதியின் மனைவி அதிதி. அவள் மிகுந்த பதிவிரதை. கணவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைத் தவறாது பக்தியோடு செய்து வந்தாள். தான் கர்ப்பமுற்றபோதும் கணவருக்குச் செய்து வரும் பணிவிடைகளில் எதையும் அவள் நிறுத்தவில்லை. தர்ம தேவதை அவளைப் பரிசோதிக்க எண்ணம் கொண்டார். ஒருநாள் அதிதி தன் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கும் வேளையில் தர்மதேவதை வேதியராக வேடம் கொண்டு அங்கு வந்து, பவதி பிக்ஷõம் தேஹி என்று கேட்டார். அதிதி கணவருக்கு அன்னம் பரிமாறிவிட்டு வாயிலில் வந்திருக்கும் பிராமணருக்காக அன்னம் எடுத்து வந்தாள். அவள் கர்ப்பிணியானதால் மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்து வந்தாள். அதைக் கண்ட தர்ம தேவதை கோபம் கொண்டார். வயிற்றிலே உருவாகியுள்ள கருவைக் காக்க மெதுவாக நடந்து வந்து என்னைக் காக்கவைத்து அலட்சியப்படுத்தி விட்டாய். அதனால் உன் வயிற்றிலிருக்கும் கரு மிருகமாகட்டும் என்று சாபம் கொடுத்தார். கரு அழியட்டும் என அவர் சாபமிட்டதைக் கேட்டதும் அதிதி தாங்கொணாத சோகத்தை அடைந்தாள். அங்கேயே மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். தர்ம தேவதையும் மறைந்து விட்டார். வெளியே போய் வந்த கசியபர் மனைவி மூர்ச்சித்திருப்பதைக் கண்டதும் அவளைத் தூக்கி ஆசுவாசப்படுத்தி மூர்ச்சை தெளியச் செய்தார். கணவனிடம் நடந்ததைக் கூறிக் கண்ணீர்விட்டாள் அதிதி. பிரியே, வருந்தாதே. ம்ருத அண்டத்திலிருந்து உனக்கு அருமையான குழந்தை பிறப்பான் என்று ஆறுதல் கூறினார் முனிவர். அவ்வாறே ம்ருதமான அண்டத்திலிருந்து அழகிய புத்திரன் தோன்றினான். அவன் மார்த்தாண்டன் என்ற காரணப் பெயரையும் அடைந்தான். அவனே சூரியன்.
2. பற்களை இழந்த பாஸ்கரன்
தக்ஷப்பிரஜாபதி தன் குமாரத்தியான சசிதேவியை ஈசனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தான். மூவுலகமும் கொண்டாடும் பரமேச்வரனைத் தான் மருமகனாக அடைந்திருக்கிறோம் என்று அவன் மிகவும் பெருமைப்பட்டு வந்தான். ஒருசமயம் தக்ஷன் கைலாயம் சென்றிருந்தான். இந்திராதி தேவர்களும், பிரமன் விஷ்ணு முதலானோரும் அவ்வமயம் அங்கே வந்து ஈசனைத் தரிசித்து அவர் அனுக்கிரகத்தை வேண்டி நின்றனர். அத்தனை பேருக்கும் நடுவே மாமன் என்ற முறையில் ஈசன் எழுந்து தன்னை வரவேற்றுக் கவுரவிப்பார் என்று எண்ணினான் தக்ஷன். ஆனால் ஈசனோ அவர் வருகையைக் கண்டும் காணாததுபோல இருந்து விட்டார்.
இது தக்ஷனுக்கும் பெரும் கோபத்தைத் தோற்றுவித்து விட்டது. ஈசன் தன்னைத் தேவர்களுக்கு நடுவே அவமதித்து விட்டதாகவே எண்ணினான். அதை நினைக்க அவனுக்கு ஆத்திரமும் கோபமும் கொதித்து எழுந்தன. தன்னை அவமதித்த ஈசனைப் பழிக்குப்பழி வாங்க எண்ணம் கொண்டான். உடனே ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தில் கலந்து கொள்ளுமாறு எல்லாருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் ஈசனுக்கு மட்டும் அழைப்பு அனுப்பாதிருந்து விட்டான் தக்ஷன். ஈசனைத் தவிர மற்ற தேவர்கள் அனைவரும் யாகத்திலே கலந்து கொள்ள வந்து சேர்ந்தனர். ஈசன் வராததைக் கண்ட நாரதர் கைலாயம் சென்று சசிதேவியைச் சந்தித்து அவன் தந்தை ஏற்பாடு செய்திருக்கும் யாகத்தைப் பற்றியும் அதில் கலந்து கொள்ள தேவர்களும் முனிவர்களும் வந்து குழுமுவதையும் தெரிவித்தார். தந்தை ஏற்பாடு செய்திருக்கும் யாகத்தைப் பற்றி அறிந்ததும் சசிதேவி அதில் தானும் கலந்துகொள்ள விரும்பினாள். கணவனிடம் சென்று தன்னை அதற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டாள். தேவி, இந்த யாகமே என்னை அவமதிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனக்கு அவிர்ப்பாகம் இல்லாது நடத்தப்படும் இந்த யாகம் பூர்த்தியாகாது. மேலும், அழைப்பு அனுப்பாதிருக்கையில் அங்கு செல்வது உசிதமல்ல. வீண் அவமானத்துக்கு உள்ளாக நேரிடும் என்றார். கணவனுடைய வார்த்தைகளை சசிதேவி ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தைக்கு ஆதரவாகப் பேசினாள். அவர் அவசியம் அழைப்பு அனுப்பியிருக்கக் கூடும் என்றும் அது தவறியிருக்கலாமென்றும் வாதாடினாள். இன்னும், பிறந்த வீட்டுக்குச் செல்ல அவர்களிடமிருந்து அனுமதியோ அழைப்போ வரவேண்டும் என்பதில்லையென்றும் எடுத்துச் சொன்னாள்.
தேவியின் உறுதியை மாற்றமுடியாது என்பதைக் கண்ட ஈசன், சிறிது கோபத்தோடு பிரியே, என்னை அழைக்காதிருக்கையில் நான் அங்கு வருவதற்கில்லை. நீ போவதை நான் தடுக்கவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் நீ அவமானத்துக்குள்ளானால் அந்த முகத்தோடு இங்கு வரக்கூடாது என்றார். அப்படி ஏதும் நடந்துவிடாது என்று ஆறுதல் சொல்லி விட்டு தேவி தந்தையின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாள். யாகசாலை ஒரே கோலாகலத்தோடு காணப்பட்டது. எங்குத் திரும்பினாலும் முனிவர்களும் தேவர்களும் கூட்டம் கூட்டமாய் கூடியிருந்தனர். சசிதேவி பரபரப்போடு யாகசாலையினுள் நுழைந்தாள். தன்னைக் கண்டதும் தாயும் தந்தையும் ஆனந்தத்தோடு ஓடிவந்து வரவேற்பார்கள் என்று அவள் உள்ளம் குதித்துக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு நிகழ்ந்ததோ அவள் எதிர்பார்த்தற்கு மாறாக இருந்தது. அவள் வருவதைக் கண்டதும் தக்ஷனுடைய முகம் சுருங்கிவிட்டது. அவளைத் திரும்பிப் பார்க்காமல் தன் காரியங்களில் கவனம் செலுத்தி வந்தான். தந்தையின் அலட்சியத்தைக் கண்டதும் தேவியின் உள்ளம் அவமானத்தால் குன்றிப் போய்விட்டது. கண்கள் சிவக்க அவள் முகத்திலே கோபத்தின் கடுமை ஏறியது. நேராகத் தக்ஷனிடம் சென்றாள். துக்கம் நெஞ்சையடைக்க, அப்பா, நான் ஒரு பெண் இருப்பதை மறந்துவிட்டீர்களா? என்று கேட்டாள். தக்ஷன் நிமிர்ந்து, பெண்ணை அலட்சியமாகப் பார்த்து விட்டுத் தன் காரியங்களில் முனைந்தான். அவன் முகத்தில் ஒருவித வெறுப்பு படர்ந்திருப்பதைக் கண்டாள் சசிதேவி. அவள் நெஞ்சம் குமுறியது. என் கணவர் எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டார்? அதைச் சொல்லுங்கள், அப்பா. மற்றவர்களுக்கு இணையாக இந்த யாகத்தில் கலந்துகொள்ள அழைப்பு அவருக்கில்லாமல் போய்விட்ட தகுதிதான் என்ன? தக்ஷன் வெறுப்போடு அவளைப் பார்த்தான். உன் கணவனுக்கு என்ன தகுதிகள் இருக்கின்றன? முதலில் அவற்றைச் சொல் என்று ஏளனமாகக் கேட்டான்.
அந்த வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த தேவர்கள் கலகல வென்று சிரித்தனர். முக்கியமாக சூரியன் பெருஞ் சிரிப்பு சிரித்தான். சசிதேவியின் எண்சாண் உடம்பும் அவமானத்தால் ஒரு சாணாகக் குறுகியது. கண்கள் குளமாயின. தட்டுத் தடுமாறி அப்...பா!.. என்றாள். தக்ஷன் சீற்றத்துடன் அவள் பக்கம் திரும்பினான். நான் மறுபடியும் கேட்கிறேன். உன் கணவனுக்கு இந்த சாதுக்களுடைய கூட்டத்தில் கலந்து கொள்ள என்ன தகுதி இருக்கிறது? எப்போது பார்த்தாலும் சுடுகாடே சரணமென்று கிடக்கிறான். நல்ல ஆபரணங்கள் இல்லையா? வாசனைத் திரவியங்கள் இல்லாது போய்விட்டனவா? பட்டு வஸ்திரங்கள் கிடைக்கவில்லையா? தலையை விரித்துப்போட்டுக்கொண்டு உடலெங்கும் பாம்புகளையும் சுடுகாட்டிலே கிடக்கும் மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் மாலையாகவும் கங்கணங்களாகவும் அணிந்துகொண்டு போய் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறான். இடுப்பிலே பயங்கரமான புலித்தோல் ஆடை. முகமாவது பார்க்க அழகாக இருக்கிறதா? நெற்றியின் நடுவிலே விகாரமாக ஒரு கண் வேறு. இந்தக் கோலத்தில் இருக்கும் அவன் எவ்வாறு இந்தச் சாதுக்கள் மத்தியிலே இருக்க முடியும்? மறுபடியும் தேவர்கள் கலகலவென்று சிரித்தனர். அவமானத்தால் குறுகிப்போயிருந்த சசிதேவியின் உடல் இப்போது நிமிர்ந்தது. அவள் சீற்றத்தால் பத்திரகாளி போலத் தோன்றினாள். அப்பா, அறியாமையால் ஏதேதோ பேசுகின்றீர்கள். மூவுலகமும் போற்றிக் கொண்டாடும் அவருடைய மகிமையைத் தாங்கள் உணரவில்லையா? என்னைத் திருமணம் செய்து கொடுக்கும் போது இதே வாய்தானே அவரைப் புகழ்ந்து கொண்டாடியது? என்று கேட்டாள். அன்று நான் அறியாமையால் ஏதோ பிதற்றியிருக்கிறேன். இன்று என் சித்தம் தெளிவடைந்து விட்டது. என் தவறை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றான் தக்ஷன் அதே அகம்பாவத்தோடு தேவியின் கண்களில் அக்கினி பறந்தது.
சித்தம் தெளிந்து விட்டதாக மகிழ்ச்சி அடையவேண்டாம். இப்போது தான் உங்கள் சித்தம் குழம்பியிருக்கிறது. அவருக்கு உரிய கவுரவத்தை அளிக்காமல் அலட்சியப்படுத்தி விடலாம் என்று தாங்கள் நினைப்பது ஒருக்காலும் நிறைவேறாது. அவரை ஒதுக்கிச் செய்யப்படும் இந்த யாகமும் பூர்த்தியாகாது. தங்களால் அவமானப்படுத்தப்பட்ட இந்த உடலை இனியும் நான் சுமந்து கொண்டிருக்க விரும்பவில்லை. தங்களுக்கு மகளாகப் பிறந்த தோஷம் நீங்க இப்போதே பரிகாரம் செய்து கொள்வேன் என்று எரிமலை வெடித்துக் கொட்டியது போலப் பேசினாள் சசிதேவி. அக்கினி குண்டத்தின் அருகிலேயே தரையில் அமர்ந்து யோகத்தால் அக்கினியைத் தோற்றுவித்து அந்த யோகாக்கினியில் அவள் தன் உடலைத் துறந்தாள். பின்னர் ஹிமவானுடைய வெகுநாளைய விருப்பத்தை நிறைவேற்ற அவனுக்குப் புத்திரியாக அவதரித்தாள். தக்ஷனுடைய யாகசாலையில் தேவி அவமானமுற்றதும், அவள் யோகத்தால் யோகாக்கினியைத் தோற்றுவித்து அதில் தன் உடலைத் துறந்ததும் ஈசனுக்குத் தெரிந்தது. அவருடைய மேனி கோபத்தால் துடித்தது. பரந்து கிடந்த தலைமயிரைக் கோபத்தோடு ஓங்கி தரையில் அடித்தார். அடுத்த கணம் அந்த இடத்தில் அவருடைய அம்சமாக மிகவும் பரங்கரமான கோபத்தோடு வீரபத்திரன் தோன்றினான். வீரபத்திரா, இப்போதே நீ சிவகணங்களோடு தக்ஷனுடைய யாகசாலைக்குச் செல். தேவியை அவமதித்த அவனுடைய தலையைத் துண்டித்து எறிவதோடு, என்னை அவமதிக்கச் செய்யப்படும் அந்த யாகத்திற்கு வந்திருப்பவர்களையும் சரியான முறையில் தண்டிப்பாயாக என்று உத்தரவிட்டார் ஈசன். ஈசனைப் பணிந்து புறப்பட்ட வீரபத்திரன் சிவகணங்களோடு சென்று தக்ஷனுடைய யாகசாலையைச் சூழ்ந்து கொண்டான்.
பயங்கரமான தோற்றங்களோடு சிவகணங்கள் யாகசாலையில் நுழைந்ததும் எங்கும் ஒரே குழப்பமாகிவிட்டது. பெண்களும் முனிவர்களும் பயந்து நாற்புறமும் ஓடலாயினர். தக்ஷன் கோபத்தோடு தேவர்களை அழைத்து அத்துமீறி நுழையும் சிவகணங்களை விரட்டி அடிக்குமாறு உத்தரவிட்டான். தேவர்கள் கணங்களைத் தாக்க அவர்கள் தேவர்களைத் திருப்பித் தாக்க குழப்பம் பெருஞ் சண்டையாகி விட்டது. சிவகணங்கள் தேவர்களைப் பலவாறு ஹிம்சித்துக் கதற அடித்தனர். முனிவர்களையும் பெண்களையும் கூட அவர்கள் தண்டித்தனர். வீரபத்திரன் சீற்றத்தால் கொதித்தெழுந்து இந்திரன் முதலானோரை அடித்துக் தள்ளினான். சூரியனை நெருங்கி அவன் தலைமயிரைப் பற்றி இழுத்தான். ஈசனை தக்ஷன் நிந்தித்தபோது இந்த வாய் தானே சிரித்தது?... என்று கேட்டபடி ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். அவனுடைய பற்கள் அனைத்தும் பொலபொல வென்று கொட்டின. அக்கினியை ஓட, ஓட விரட்டினான். குபேரனைக் குலை நடுங்கச் செய்தான். செய்தி அறிந்ததும் பிரமன் ஓடி வந்தார். வீரபத்திரனைப் பலவாறு பிரார்த்தனை செய்து கோபத்தை விடுத்து சாந்தம் கொள்ளுமாறு கோரினார். வீரபத்திரனும் நான் முகன் கோரிக்கையை ஏற்று சிவ கணங்களுடன் கைலை திரும்பினான். பிரமதேவன் அங்கே நிகழ்ந்திருந்த பயங்கரத்தைக் கண்டு மனம் வருந்தி ஈசனிடம் சென்று அவரை நமஸ்கரித்தார். பிரபோ, பரமேச்வரா, தேவர்கள் விஷயத்தில் தங்கள் கோபம் சாந்தமாக வேண்டும். தக்ஷன் அறியாமையால் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். இம்முறை தக்ஷன் விஷயத்தில் தாங்கள் கருணை காட்ட வேண்டும். அவன் சிந்தையை மறைத்திருக்கும் மாயை அகன்றிட அருள் புரியுங்கள். தேவர்களுக்குத் தங்களைத் தவிர ரக்ஷகர் யார்? என்று வேண்டினார்.
ஈசனுடைய கோபமும் சாந்தமடைந்தது. பிரமனுடைய கோரிக்கையை ஏற்று அனுக்கிரகம் செய்தார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்ட தேவர்களுடைய துன்பங்களை நீங்கச் செய்தார். அவர்கள் முன்போல விளங்கியவர்களாய் ஈசனைப் பலவாறு துதித்தனர். ஆட்டுக்கிடாவின் தலையைக் கொண்டுவரச் செய்து தக்ஷனுடைய உடலோடு பொருந்தச் செய்தார். அவ்விதம் பொருத்தியதும் தக்ஷன் உயிர் பெற்று எழுந்தான். ஈசனால் தண்டிக்கப்பட்ட அவனுடைய அக்ஞானம் நீங்கிவிட்டது. சகல லோகங்களும் போற்றிக்கொண்டாடும் பரமனைத் துதி செய்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். ஈசனுடைய கோபம் சூரியன் விஷயத்தில் மட்டும் சுலபத்தில் நீங்கவில்லை. இழந்த பற்களை அவனுக்குத் திரும்ப அனுக்கிரகம் செய்யவேயில்லை. (அதன் காரணமாகவே சூரியனுக்குச் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்பட்டிருக்கிறது.)
3. கற்புக்கரசியின் சீற்றம்
கவுசிக முனிவர் மகா தபஸ்வி. அவருடைய பத்தினியான சைப்யை என்பவள் பதிவிரதா தர்மத்தில் மிகச் சிறந்தவள். முன்வினைப் பயன் காரணமாக முனிவர் குஷ்டரோகத்தால் மிகவும் துன்பமுற்றார். சைப்பையோ அதைப்பற்றிச் சிறிதும் மனம் வருந்தவில்லை. கணவனைச் சுந்தர புருஷனாகவே எண்ணி அவருக்குப் பணிவிடைகளில் ஒரு குறைவுமின்றிச் செய்து வந்தாள். மனைவியின் உள்ளத்து உறுதியைப் பரிசோதிக்க விரும்பினார் கவுசிகர். மனைவியை அழைத்துத் தான் பெண் சுகத்தை விரும்புவதாகவும் யாராவது தாசியிடம் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். சைப்பை என்ன செய்வாள்? ரோகியான புருஷனை எந்தப் பெண்தான் நெருங்கச் சம்மதிப்பாள்? கணவருடைய விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும்! மனம் தளராமல் ஒரு தாசியிடம் சென்று கணவருடைய விருப்பத்தைத் தெரிவித்து அதைப் பூர்த்தி செய்யுமாறு மன்றாடினாள். தாசி வெகுநேரம் இணக்கம் தரவில்லை. சைப்யை அவளுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கெஞ்சினாள். முடிவில் ஒரு நிபந்தனையோடு இணக்கம் தெரிவித்தாள் தாசி. சைப்யையின் கணவர் வந்துபோன விஷயம் வெளியில் தெரியக்கூடாதென்றும் ஊர் அடங்கிய பின்னர் நள்ளிரவில் அவரை அழைத்து வருமாறும் சொன்னாள். சைப்யை சந்தோஷமடைந்தாள். கணவனை நீராட்டி வேறு ஆடை உடுத்தச் செய்து ஒரு கூடையிலே உட்காரச் செய்து அந்தக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு தாசி வீட்டுக்குப் புறப்பட்டாள். எங்கும் ஒரே இருட்டு. நாற்சந்தி முனையை அவள் அடைந்தபோது கவுசிகருடைய காலிலே நோயின் காரணமாக வலி ஏற்பட்டது. அவர் காலைத் தூக்கி உதறினார். அந்த இடத்திலே கழுமரம் ஒன்று நாட்டப்பட்டிருந்தது. அன்றைய தினம் மாண்டவ்யர் என்ற முனிவர்மீது திருட்டுக் குற்றம் சுமத்தி அவரைக் கழுவேற்றுமாறு அரசன் உத்தரவிட்டிருந்தான் காவலரும் பிறர் அறிய முனிவரை நாற்சந்தியில் கழுவில் ஏற்றிவிட்டுச் சென்றனர். கழுவிலே ஏற்றப்பட்ட முனிவருக்கு உடனே உயிர் பிரிந்து விடவில்லை. அவர் வேதனையால் துடித்துக் கொண்டிருந்தார். கவுசிகர் காலை உதறியபோது அந்தக் கால் கழுவிலே மாட்டப்பட்டிருந்த முனிவருடைய உடலிலே பட்டுவிட்டது. அதனால் வலி அதிகமாகி மிகவும் துடித்துப் போனார் மாண்டவ்யர். ஞான திருஷ்டியால், குஷ்டத்தால் துன்புறும் கவுசிகரே காலால் உதைத்தார் என்பதை உணர்ந்தார். அவருக்குக் கோபம் தாங்கவில்லை.
கழுவுத் துன்பம் போதாதா? புழுத்த காலால் உதையும் படவேண்டுமா? என்று கேட்ட அவர், சூரியயோதயம் ஆகும்போது சைப்யை மாங்கல்யத்தை இழக்கட்டும் எனச் சபித்தார். முனிவருடைய சாபத்தைக் கேட்ட சைப்யை நிலை குலைந்து அவரை நமஸ்கரித்து, எதிர்பாராது நடந்துவிட்ட தவறை மன்னித்து சாபத்தைத் திரும்பப் பெறுமாறு வேண்டினாள். மாண்டவ்யரோ அதற்குச் சம்மதிக்கவில்லை. பார்த்தாள் சைப்யை. எக்காரணம் கொண்டும் தன் பதியை இழக்க அவள் விரும்பவில்லை. பதிவிரதா தர்மத்துக்குப் பங்கம் வராது இதுநாள்வரை நான் நடந்து வந்திருப்பது ஸத்யமாகில் சூரியன் உதயமாகாமலேயே இருக்கட்டும் என்று பதில் சாபம் கொடுத்தாள். பதிவிரதையின் சாபம் சூரியனைக் கட்டிவிட்டது. அவனால் புறப்பட முடியவில்லை. சூரியன் உதயமாகாததால் பூமியிலே சூழ்ந்திருந்த இருள் அகலவில்லை. பொழுது விடியாததால் மக்கள் தங்களுடைய நித்திய கர்மானுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க முடியவில்லை. யாகம் முதலிய கர்மாக்கள் நடைபெறாது நின்று போயின. அதனால் தேவர்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. பயிர் பச்சைகள் வளரவில்லை. உலகம் முழுவதிலும் அனைவரும் விவரிக்க இயலாத துன்பங்களுக்கு உள்ளானார்கள். தேவர்களால் பதிவிரதையின் கட்டளையை உடைத்தெறிய முடியவில்லை. சூரியனை உதிக்கச் செய்யும் முயற்சிகள் பயன் தரவில்லை. கற்பரசியின் கட்டளை சூரியனைச் செயலிழக்கச் செய்துவிட்டது. முடிவில் தேவர்கள் அத்திரி முனிவருடைய பத்தினி பதிவிரதை அனசூயையிடம் சென்று சரண் அடைந்தனர். தாங்களும் சகல லோகங்களும் படும் துன்பத்தை எடுத்துக் கூறி மற்றொரு பதிவிரதா ஸ்திரீயினால்தான் சூரியனை உதிக்கச் செய்ய முடியும் என்று தெரிவித்தனர். அனசூயை அவர்கள் வேண்டுகோளை ஏற்றுச் சைப்பையிடம் வந்தாள்.
சகோதரி, சூரியன் உதயமாகாததால் சகல லோகங்களுமே நாசமடைந்து விடும்போல் இருக்கிறது. மக்களுடைய நன்மைக்காக நீ உன் சாபத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டினாள். சூரியன் உதயமானால் நான் என் பதியை இழக்க வேண்டி நேரிடுமே. அதற்கு என்ன சொல்கிறாய்? என்று கேட்டாள் சைப்யை. சகோதரி, முனிவர் இட்ட சாபம் காரணமாக உன் கணவர் மரணமடைந்தாலும் அவரை நான் எழுப்பித் தருகிறேன் என்றாள் அனசூயை. அதன் மீது சைப்யை சூரியனை உதயமாகுமாறு உத்தரவிட்டாள். தக தக வென்று பிரகாசத்தோடு சூரியன் கிழக்கிலே உதயமானார். பூமியிலே சூழ்ந்திருந்த இருள் விலகியது. எங்கும் மகிழ்ச்சி நிறைந்தது. அதே சமயம் சைப்யையின் கணவரான கவுசிகர் பிணமாகிக் கிடந்தார். அனசூயை தன் இரு கரங்களையும் கூப்பி கணவரை மனத்திலே தியானித்து வந்தனை செய்தாள். பகவானே, நான் பதிவிரதா தர்மத்துக்குப் பங்கமுறாமல் நடந்து வந்திருக்கிறேன் என்பது உண்மையானால் கவுசிக முனிவர் நோய் முற்றிலும் நீங்கியவராக உயிர்ப்பெற்று எழுந்திருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். இறைவன் பதிவிரதையின் பிரார்த்தனைக்கு இணங்கி முனிவரை உயிர்ப்பெற்று எழச் செய்தார். நோய் முற்றிலும் நீங்கப் பெற்றவராய் முன்னிலும் பிரகாசமான தேஜஸ்ஸோடு முனிவர் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல எழுந்தார். சைப்யை ஆனந்தத்தோடு ஓடிச்சென்று அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். சைப்யை அனசூயை இருவரையும் அனைவரும் பலவாறு கொண்டாடினார்கள்.
4. கற்றதைக் கக்கிய முனிவர்
ஒரு சமயம் மேரு பருவதத்திலே முனிவர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். அந்தக் கூட்டத்துக்கு வருமாறு எல்லோருக்கும் போதிய விவரங்கள் முன்னதாகவே சொல்லப்படிருந்தன. ஆகவே அந்தக் கூட்டத்துக்கு யாராவது வராமல் இருப்பார்களேயானால் ஏழு நாட்களுக்குள் அவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படட்டும் என்ற சாபம் உண்டாக்கியிருந்தார்கள். வைசம்பாயனர் என்ற மகா முனிவர் எதிர்பாராத அசந்தர்ப்பம் ஏற்பட்டதால் அந்தக் கூட்டத்துக்குப் போக முடியவில்லை. ஆகவே முனிவர்கள் விதித்த சாபம் அவரையும் பற்றியது. அவருடைய சகோதரருடைய குழந்தையை அவர் யதேச்சையாகக் காலால் தீண்ட, முனிவர்கள் இட்ட சாபம் அதையே காரணமாக்கிக் கொண்டு விட்டது. அந்தக் குழந்தை இறந்து விட்டான். வைசம்பாயனரை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. முனிவர் தம்முடைய சீடர்கள் அனைவரையும் அழைத்தார். சிஷ்யர்களே, முனிவர்களுடைய கூட்டத்துக்கு நான் செல்லாதிருந்ததால் அவர்கள் இட்ட சாபம் என்னைப் பற்றியுள்ளது. ஆகவே, அந்தத் தோஷம் நீங்குவதற்கான விரதத்தை நீங்கள் செய்யுங்கள். வேறு ஒன்றும் நினைக்காதீர்கள் என்றார். அவருடைய சிஷ்யர்களில் யாக்கியவல்க்கியர் என்பவரும் ஒருவர். அவர் ஆசாரியரை நோக்கி, ஆசாரியரே அற்ப தேஜஸ் உள்ளவர்களான இவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? நான் ஒருவனே விரதம் இருந்து அந்த தோஷத்தைப் போக்குவிக்கிறேன் என்றார். மனத்திலே கபடம் ஏது இல்லாது அவர் அந்த வார்த்தைகளைக் கூறினாலும், வைசம்பாயனருக்கு அவை பெருங்கோபத்தைத் தோற்றுவித்து விட்டன. யாக்கிய வல்க்கியரை நிமிர்ந்து பார்த்தார்.
அடே, நீ பிராமணரை அவமரியாதை செய்துவிட்டாய். உத்தமமான பிராமணர்களைத் தேஜஸ் இல்லாதவர்கள் என்று சொல்லி அவர்களுக்கு அவமதிப்பைப் தந்து விட்டாய். அதனால் எனக்குச் சிஷ்யனாக இருக்கும் தகுதியை நீ இழந்து விட்டாய். ஆகவே என்னிடத்தில் கற்ற வேதங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்றார். யாக்கியவல்கியர் ஆசாரியரை நமஸ்கரித்தார். பூஜிக்கத் தகுந்தவரே, நான் இந்தப் பிராமணர்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அந்த வார்த்தைகளைக் கூறவில்லை. தங்களிடத்தில் உள்ள பக்தியினால் தான் அவ்வாறு சொன்னேன். போகட்டும். தாங்கள் உத்தரவிட்டபடியே தங்களிடமிருந்து கற்ற வேதங்களை நான் விட்டுவிடுகிறேன் என்றார். பின்னர் அவர் தம்முடைய வயிற்றிலிருந்து இரத்தத்தால் பூசப்பட்ட ரூபமுடையவைகளாய் காணப்படும் யஜுர் வேதத்தைக் கக்கினார். ஆசாரிய தேவா, இதோ நீங்கள் கேட்டவாறு எல்லாவற்றையும் கக்கி விட்டேன். இனி நான் என் மனம் போனவாறு போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார். யாக்கியவல்க்கியரால் கக்கப்பட்ட வேதத்தை மற்றவர்கள் ஏற்கலாமென வைசம்பாயனர் சொன்னார். கக்கிய அவற்றை நேரடியாக ஏற்க அந்தப் பிராமணர்கள் விரும்பவில்லை. அவர்கள் தித்திரி என்ற பறவைகளாக மாறி அவற்றைச் சாப்பிட்டார்கள். ஆகவே அவர்களுக்கு தைத்திரியர்கள் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதன் பின்னர் அந்த சிஷ்யர்கள் ஒன்றுகூடி விரதம் இருந்து முனிவரைப் பீடித்த தோஷம் நீங்கச் செய்தனர். அதனால் அந்தச் சிஷ்யர்கள் சரணாத்துவர்யுக்கள் என்று அழைக்கப்படலானார்கள்.
வைசம்பாயனரை விட்டுப் புறப்பட்ட யாக்கிய வல்க்கியர் சூரியனிடமிருந்தே நேரடியாக யசுசுகளைக் கற்க வேண்டும் என முடிவு செய்தார். பிராணாயாமம் முதலியவற்றால் சூரியனை ஆராதித்து அவரைத் தோத்திரம் செய்யலானார். மோக்ஷத்துக்கு மார்க்கமாயும், அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டவராகவும், ரிக்ல யஜுர், சாம வேதங்களின் ரூபமாயும் இருக்கின்ற சூரியனை வணங்குகிறேன். வெய்யிலுக்கும் மழைக்கும் காரணமாக இருப்பதால் அக்கினி சோம ரூபியாகவும் அதன் காரணமாக உலகத்துக்கு ஆதாரமாகவும் வெளிச்சத்தைத் தருபவராகவும் அமிருதத்துக்குக் காரணமாக காந்தியை அளிப்பவராயும் இருக்கும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்கிறேன். கலை, காஷ்டை, நிமிஷம் முதலிய காலத்தைத் தெரிவிக்கும் சொரூபத்தைக் கொண்டவராயும் தியானிக்கத் தக்கவராயும், பிரணவ ரூபியாகவும் பிரபஞ்ச ரூபியாகவும் இருப்பவருக்கு என்னுடைய அனேக வந்தனங்கள். தம்முடைய கிரணங்களினாலே சந்திரனைப் போஷித்துத் தேவதைகளையும் ஸ்வதாமிர்தத்தினாலே பிதுருக்களையும் காத்து, ரக்ஷித்து வருகின்ற திருப்தி ரூபமானவருக்கு நமஸ்காரம் செய்கிறேன். பனி, வெப்பம், மழை ஆகியவற்றை உண்டாக்குபவராயும், முக்காலங்களின் ஸ்வரூபியாகவும் இருக்கின்ற சூரியனுக்கு நமஸ்காரம் செய்கிறேன். இந்த உலகத்தின் இருளைப் போக்கி, ஜகத்துக்கெல்லாம் அதிபதியாகவும், சத்துவகுண சரீரம் உள்ளவராகவும் இருக்கிற அந்தப் பகவானுக்குத் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எந்தத் தேவன் உதயமாகாமல் போனால் ஜனங்கள் சத்கர்மாக்களைச் செய்யத் தகுதி உடையவர்களாய் ஆகமாட்டார்களோ, தண்ணீரும் சுத்தமாக ஆகாதோ, அத்தகைய சூரிய தேவனைப் பணிகிறேன். எந்தத்தேவனது கதிர்களால் ஸ்பரிசிக்கப்பட்டு மனிதன் சத்கர்மாக்களுக்கு யோக்கியன் ஆகின்றானோ, அத்தகைய சுத்திக்குக் காரணமான தேவனைத் தொழுகிறேன். பிரேரகனாயும், உற்பத்தி செய்பவனாயும் அந்தகாரத்தைப் போக்குபவனாயும் இருக்கின்ற தேவனுக்கு என்னுடைய நமஸ்காரங்கள் சேரட்டும். தேவர்களுக்கு ஆதியாய் இருக்கும் ஆதித்த பகவானுக்கு அனேக முறை நமஸ்காரம் செய்கிறேன். எந்தத் தேவனுடைய தேரானது இதமும் ரமணீயமுமான தேஜோமயமாக இருக்கிறதோ, குதிரைகள் ஞான ரூபங்களாயும் அமிர்தங்களாயும் இருந்து தேரை இழுக்கின்றனவோ, உலகங்களுக்கெல்லாம் கண்ணாக இருக்கும் அந்தப் பகவானை நமஸ்கரிக்கிறேன் என்று பலவாறு யாக்கியவல்க்கியர் சூரியனை நமஸ்கரித்துப் பிரார்த்தித்தார்.
அவருடைய ஸ்தோத்திரங்களால் மனம் மகிழ்ந்த சூரியன் அவர் முன்பு குதிரை வடிவில் தோன்றினார். முனிவரே, உம்முடைய ஸ்தோத்திரத்தால் திருப்தியடைந்தவனாக இருக்கிறேன். உமக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றார். யாக்கியவல்க்கியர் சூரியனைப் பிரதக்ஷணம் செய்து நமஸ்கரித்தார். பிரபோ, என் குருவான வைசம்பாயனருக்கும் தெரியாத யஜுர் வேதங்களைத் தாங்கள் எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் முனிவர். சூரியனும் அவர் வேண்டுகோளை ஏற்று அனுக்கிரகம் செய்தார். வைசம்பாயனருக்கும் தெரியாத அயாத யாமங்கள் என்ற யசுசுகளை முனிவருக்கு உபதேசம் செய்தார். அந்தச் சாகைகளை அத்தியயனம் செய்தவர்களுக்கு வாஜிகள் அல்லது வாஜசனேயர் என்ற பெயர் ஏற்படலாயிற்று. சூரியன் குதிரை வடிவில் அவற்றை உபதேசம் செய்ததால் அந்தப் பெயர் உண்டாயிற்று. அதை முனிவர் காணவசாகை முதலான பதினைந்து சாகைகளாகப் பிரித்து உபதேசம் செய்தார்.
5. மந்திரம் தந்த மதலை
யது குலத்திலே சூரன் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு வசுதேவன், தேவபாகன், சேவசிரவன், அஷ்டகன், ககுச் சக்கிரன், வச்சதாரகன், சிருஞ்சயன், சியமன், சமிகன், கண்டூஷன் என்ற பத்து குமாரர்களும், பிருதை, சுருததேவை, சுருதகீர்த்தி, சுருதசிரவை, ராஜாதிதேவி என்னும் ஐந்து பெண்களும் பிறந்தனர். வசுதேவனுடைய புத்திரரே வாசுதேவரான கிருஷ்ணன். சூரனுக்குக் குந்தி என்றொரு அரசன் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். அவனுக்குத் புத்திர பாக்கியம் கிடையாது. ஆகவே, சூரனுடைய பெண்களுள் ஒருத்தியான பிருக்தையை எடுத்துச் சென்று தன் அரண்மனையில் வளர்த்து வந்தான். குந்தியின் அரண்மனையில் வளர்ந்து வந்த காரணத்தால் குந்தி என்றே பிருதை அழைக்கப்பட்டு வந்தாள். ஒரு சமயம் சூரனுடைய அரண்மனைக்குத் துர்வாச முனிவர் விஜயம் செய்தார். மகரிஷியை வரவேற்று உபசரித்த அவன் அவரைத் தம் அரண்மனையில் சிறிது காலம் தங்கிச் செல்ல வேண்டுமென்று வேண்டினான். அவரும் அதற்கு இசைந்து அங்கே தங்கினார். சூரன் மகரிஷியின் பணிவிடைகளுக்கு குந்தியையே நியமித்தான். அவளும் ஆர்வத்தோடு முனிவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள்.
குந்தி செய்து வந்த பணிவிடைகளால் சந்தோஷமடைந்த முனிவர் அவளுக்கு ஏதாகிலும் அனுகூலம் செய்ய வேண்டும் என்று எண்ணினார். அரண்மனையை விட்டுப் புறப்படும் முன்பு அவளைத் தனிமையில் அழைத்தார். குழந்தாய், என் விஷயத்தில் செய்துவந்த பணிவிடைகளால் நான் சந்தோஷம் அடைந்துள்ளேன். அரிய மந்திரங்கள் ஐந்து உனக்கு உபதேசம் செய்கிறேன். சூரியன், தருமன், இந்திரன், வாயு, அசுவினி தேவர்கள் ஆகியோருடைய மந்திரத்தை உனக்கு உபதேசம் செய்கிறேன். அந்த மந்திரங்களை ஜபித்து எப்போது நீ தியானிக்கிறாயோ அப்போது அவர்கள் உன் முன்பு தோன்றி உனக்கு அனுகூலம் செய்வார்கள். என்று கூறி, அந்த அற்புத மந்திரங்கள் ஐந்தையும் உபதேசம் செய்தார். துர்வாசர் புறப்பட்டுச் சென்ற பிறகு குந்திக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. முனிவர் உண்மையாகவே மந்திர உபதேசம் செய்தாரா? அல்லது விளையாட்டாக ஏதோ சில மந்திரங்களைச் சொல்லி விட்டுச் சென்றாரா? என்ற சந்தேகம் தோன்றியது. முனிவர் உபதேசித்த மந்திரத்தைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்று எண்ணினான். எவரும் இல்லாத தனியிடம் ஒன்றை அடைந்து குந்தி முதலாவதாக உபதேசிக்கப்பட்ட சூரிய மந்திரத்தை உச்சரித்தாள். அடுத்த கணம் அவள் முன்பு தேவ புருஷன் ஒருவன் தோன்றினான். பெண்ணே, சற்று முன்பு நீ உச்சரித்த மந்திரத்துக்கு அதிபதியான சூரியன் நானே. மந்திரத்தின் பலனை இப்போதே நீ அடைவாய். என் அமிசத்தால் உனக்கொரு குழந்தை பிறப்பான் என்று அனுக்கிரகம் செய்தான் சூரியன். சூரியன் அனுக்கிரகம் செய்தவாறே குந்திக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தேஜுடன் பிரகாசிக்கும் குழந்தையைக் கண்டதும் குத்தி வெலவெலத்துப் போய்விட்டாள். கல்யாணம் ஆவதற்கு முன்பு குழந்தையா? விளையாட்டாக அவள் செய்த காரியம் எவ்வளவு விபரீதத்தில் கொண்டுபோய் விட்டது. கண்களில் நீர்மல்க சூரியனை நமஸ்கரித்தாள்.
கண்களில் நீர்மல்க சூரியனை நமஸ்கரித்தாள். சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். துர்வாச முனிவர் உபதேசித்துச் சென்ற மந்திரங்கள் பலிக்குமா என்பதை விளையாட்டாகப் பரிசோதித்துவிட்டேன். திருமணம் ஆகாமலேயே குழந்தையை அடைந்து விட்ட என்னை அபவாதம் சூழுமே. இப்போது நான் என்ன செய்வேன்? என்று கதறினாள். பெண்ணே, கவலைப்படாதே. குழந்தையை நீ அடைந்து விட்டாலும் உன் கன்னித்தன்மை மாறாதிருக்க நான் அருள் செய்கிறேன், என்று அனுக்கிரகம் செய்து மறைந்தான் சூரியன். இருந்தபோதிலும் குந்தி நடுங்கினாள். குழந்தை விஷயம் யாருக்காகிலும் தெரிந்து விடக்கூடாதே என்று பயந்தாள். ஆகவே ஒரு பெட்டியில் தன் புடவையை வைத்து அதன்மேல் குழந்தையைக் கிடத்தி மூடி ஆற்றின் பிரவாகத்திலே யாரும் அறியாமல் விட்டுவிட்டாள். ஆற்றிலே விடப்பட்ட பெட்டி குழந்தையோடு மிதந்து சென்றது. துரியோதனனுடைய தேர்ப்பாகன் அவ்வமயம் ஆற்றுக்குக் குளிக்க வந்தான். படித்துறையில் நீராட இறங்கிய அவன், பிரவாகத்திலே மிதந்து வந்த பெட்டியைக் கண்டு அதைப் பற்றிக் கரைக்குக் கொண்டு வந்து திறந்து பார்த்தான். அதனுள் அழகிய ஆண் குழந்தை ஒன்றைக் கண்டதும் அவன் பேராச்சரியம் அடைந்தான். அவனுக்கு வெகு காலமாகக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவன் நாள்தோறும் ஆண்டவனைத் தன் குறை தீர்க்கும்படி வேண்டி வந்தான். அவன் குறை தீர்க்க ஆண்டவனே அந்தக் குழந்தையை அனுப்பி வைத்திருக்கிறார் என்று எண்ணி ஆனந்தமடைந்தவனாக வீட்டுக்கு எடுத்துச் சென்றான். காதுகளிலே குண்டலங்களோடு குழந்தை கிடைத்ததால் கர்ணன் என்றே பெயரிட்டு மிகவும் அன்புடன் வளர்த்து வரலானார்கள்.
6. சூரியன் சொன்ன சதுர்த்தசி விரதம்
சதா நீகன் என்றொரு அரசன் இருந்தான். அவன் சிறந்த தர்மவான். நாள்தோறும் அதிதிகளை இன்முகத்தோடு வரவேற்று அவர்களைப் பூஜித்து ஸ்வர்ணம், வஸ்திரம் முதலானவற்றைத் தானம் கொடுத்து அறுசுவை அன்னமும் அளித்துத் திருப்தி செய்து வந்தான். அவனுக்கு ஓர் உத்தம புத்திரன் பிறந்தான். இவ்வாறு வெகுகாலம் ஆனந்தமாக அதிதி பூஜை செய்து வந்த அரசன், தன் காலம் முடிந்ததும் இப்பூவுலக வாழ்வை நீத்தான். சதாநீகனுக்குப் பிறகு அவன்மகன் அரசனாக முடி சூட்டப்பட்டான். அவனும் தந்தையைப்போலவே திறமையோடு ஆட்சி புரிந்து வந்தான். அவன் கீர்த்தி எட்டுத் திக்குகளிலும் பரவியது. சத்துருக்கள் பயமின்றி அவன் நாட்டைப் பரிபாலித்து வந்தான். ஒரு விஷயத்தில் மட்டும் அவன் மிகவும் பிடிவாதமாக இருந்தான். தந்தையைப் போலத் தானங்கள் செய்யாமல், அந்த வழக்கத்தை அறவே நிறுத்தி விட்டான். அரசனால் அளிக்கப்பட்ட தானங்களை மட்டுமே கொண்டு வாழ்ந்து வந்த வேதியர்கள் அரசனுடைய இந்த முடிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஜீவனத்தைப் பற்றிய கவலை இல்லாது இருந்து வந்தவர்களுக்கு இப்போது பெருங் கவலையாகி விட்டது. நித்திய கர்மானுஷ்டானங்களை அவர்களால் நிம்மதியோடு கவனிக்க முடியவில்லை. ஆகவே, அவர்கள் ஒன்று சேர்ந்து அரசனிடம் சென்று தங்கள் கஷ்டங்களை எடுத்துக் கூறினர். அவர்கள் சொன்னவற்றைக் கேட்ட அரசன் அவர்களைப் பார்த்துக் கேட்டார். எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது. இப்பிறவியில் சத்புருஷர்களுக்கு ஒருவன் சொர்ணம், வஸ்திரம் முதலானவற்றைத் தானம் செய்வானேயாகில் அவன் விண்ணுலகில் சுகபோகங்களோடு வாழ்ந்து மறுபடியும் உத்தம குலத்தில் பிறந்து மேன்மையுடன் வாழ்ந்து வருவான் என்று சொல்லப்படுகிறது. என் தந்தை எத்தனை தான தருமங்களைச் செய்து வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் இப்போது எந்த லோகத்தில் எவ்வாறு இருந்து வருகிறார் என்பதை எனக்குக் கூற முடியுமா? இந்தச் சந்தேகத்தை உங்களால் தீர்க்க முடியுமானால் என் தந்தை செய்வது போலவே நானும் தான தருமங்களைச் செய்து வருவேன்.
அரசனுடைய வார்த்தைகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? வாடிய முகத்தோடு திரும்பினர். சாஸ்திரங்களில் சிறந்த அறிஞர்களையெல்லாம் அவர்கள் சந்தித்து அரசனுடைய சந்தேகம் பற்றி விசாரித்தார்கள். அவர்களாலும் அதற்குத் தகுந்த வழி சொல்ல முடியவில்லை. அரசனுடைய சந்தேகம் தீர்க்கவே முடியாது என்பதைக் கண்ட வேதியர்கள் நிலைகுலைந்து விட்டார்கள். அவர்கள் சோகவசப்பட்டவர்களாய் நித்திய கர்மாக்களை விட்டுவிட்டனர். வேதியர்கள் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள யாகம் முதலான கர்மாக்களைச் செய்து வந்தால் தான் தேவர்களுக்குப் பிரீதி ஏற்படும். அவர்களுக்குப் பிரீதி ஏற்பட்டால் தான் லோகம் ÷க்ஷமமாயிருக்க அருள் புரிவார்கள். பூவுலகிலே கர்மாக்கள் செய்யப்படாதிருக்கும் நிலை தோன்றியிருப்பதைக் கண்டு சூரியன் மிகவும் வேதனை அடைந்தான். ஒரு பிராமணனாக வேடன் கொண்டு வேதியர்கள் இருக்குமிடம் வந்தான். அவர்களைச் சந்தித்து அவர்களுடைய சோகத்துக்கான காரணத்தைக் கேட்டான். அவர்களும் வேதியனாக வந்த சூரியனிடம் தங்கள் துன்பங்களை எடுத்துச் சொன்னார்கள். சூரியன் அவர்களைப் பார்த்து, பெரியோர்களே உங்கள் வார்த்தையைக் கேட்டதும் என் மனத்திலே ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. சாஸ்திரங்களில் சிறந்து விளங்கும் உங்களுக்குத் தெரியாதது இருக்காது. இருப்பினும் எனக்கு நினைவு வந்ததால் சொல்கிறேன். தானம் கொடுப்பதால் நீங்கள் மட்டும் வாழ்ந்து விடவில்லை. அதன் பலனால் நாடே நன்மை அடைகின்றது. உலகம் ÷க்ஷமம் அடையும் பொருட்டே உங்களுக்கு நித்திய கர்மாக்கள் விதிக்கப்பட்டுள்ளன. அரசன் தானம் அளிக்காவிடில் அவன் இறந்து விட்டதாகவே எண்ணுங்கள். தானம் எதையும் விரும்பாது அவற்றின் உதவி இன்றி நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்து வருபவரே சிரேஷ்டமானவர். அவரை அடைந்து பூஜித்து உபசரித்தால் நீங்கள் சகல போகங்களையும் அடைவீர்கள் என்றான்.
அவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்களும் மனம் சாந்தி அடைந்தவர்களாய், அத்தகைய உத்தம புருஷரைத் தேடிப் புறப்பட்டார்கள். நான்கு திசைகளிலும் பல இடங்களுக்கும் சென்று தேடி வருகையில் ஓரிடத்தில் தவம் செய்து கொண்டிருந்த பார்க்கவ முனிவரைக் கண்டனர். அவர்கள் சென்ற சமயம் முனிவர் நிஷ்டையிலிருந்தார். ஆகவே அவர் கண் திறக்கட்டும் என அங்கேயே காத்திருந்தனர். உச்சிவேளைவரை நிஷ்டையிலிருந்த முனிவர், சூரியன் மேற்குத் திசையிலே இறங்கத் தொடங்கியதும் கண் விழித்தார். தம் எதிரிலே வேதியர்கள் சிலர் அமர்ந்திருப்பது கண்டு இன்முகத்தோடு அவர்களை வரவேற்றார். வேதியர்களும் தாங்கள் புறப்பட்டு வந்த காரியம் பற்றியும், அவரைக் கண்டதால் அவரைப் பணிந்து ஆசிபெறும் பொருட்டுக் காத்திருப்பதையும் தெரிவித்தார். அவர்களுடைய நிலைகண்டு முனிவர் மனம் வேதனையடைந்தது. அன்பர்களே, வருத்தப்படாதீர்கள். இங்கே நீங்கள் தங்கி ஒரு கவலையுமின்றி நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்து வாருங்கள். இப்போதைய அரசனுடைய தந்தை எங்கிருக்கிறார் என்பதை நான் என் தபோ பலத்தால் அறிந்து வருகிறேன் என்று ஆறுதல் கூறினார். வேதியர்கள் பின்னாலேயே அவர்கள் அறியா வண்ணம் சூரியனும் தொடர்ந்து வந்து நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தான். பார்க்கவ முனிவர் பிராமணர்களுக்கு ஆறுதல் கூறித் தம் ஆசிரமத்தில் அவர்களைத் தங்கச் செய்துவிட்டுப் புறப்பட்டபோது அவனும் அவரோடு சேர்ந்து கொண்டான். முன்போல வேதியனாக உருவம் கொண்டு அவரை நெருங்கி, மகரிஷே, யோக பலத்தால் தாங்கள் செல்லும் காரியத்தை நான் அறிவேன். தங்களுக்கு என்னால் வழிகாட்ட முடியும் என்றான். யாரோ மகான் என்று கருதி பார்க்கவரும் அந்தப் பிராமணருடைய உதவியை மறுக்காது ஏற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும் பூவுலகை விட்டுச் சிறிது தூரம் சென்றதும், ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் பார்க்கவரை நெருங்கி, மகரிஷே, எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? எனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டுத்தான் தாங்கள் செல்ல வேண்டும். இல்லையேல் நான் அனுமதிக்கமாட்டேன் என்றான்.
அந்த மனிதனை முனிவர் முன்பின் பார்த்ததில்லை. வியப்போடு அவனை நோக்கி, ஐயா, நீர் யார் என்பதையே நான் அறியேன். அப்படியிருக்க உமக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் எவ்வாறு ஏற்பட்டிருக்கும்? என் அறிவுக்கு எட்டிய வரையில் உமக்கு நான் ஏதும் பாக்கி வைத்திருப்பதாகத் தெரியவில்லை என்றார். மகரிஷே, நன்றாகச் சொன்னீர்கள். இந்த ஜன்மத்தில் ஏதும் பாக்கியில்லை என்றால் ஆகிவிடுமோ? சென்ற பிறவியில் நான் பவுராணிகராக இருந்தேன். அப்போது ஒரு நாள் என் கதா பிரவசனத்துக்குத் தாங்கள் வந்தீர்கள். கதை முடிந்ததும் தாங்கள் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டீர்கள். பவுராணிகருக்கு ஏதாகிலும் கொடுக்க வேண்டாமா என்று கேட்டதற்கு வீட்டுக்குச் சென்று பணம் எடுத்து வருவதாகக் கூறினீர்கள். வீடு சென்றவர் மறுபடியும் கதைக்கு வரவில்லை என்றான் அவன். ஐயா, அப்படி ஏதும் நிகழ்ந்ததாகவே எனக்கு நினைவில்லை. உமது கூற்றுப்படியே இருப்பினும் பூவுலகில் அதனைத் தீர்த்துக் கொள்வோம் என்றார் மகரிஷி. அதற்கு நான் இணங்கமாட்டேன். நீர் திரும்பி வரும் வரை என்னால் காத்திருக்கவும் முடியாது. உம்முடைய புண்ணியத்தில் பாதியை எனக்குத் தந்து விடுங்கள். அப்போதுதான் மேலே செல்ல அனுமதிப்பேன் என்றான் அவன். முனிவர் பலவாறு எடுத்துச் சொல்லியும் அந்த மனிதன் பிடிவாதம் பிடித்தான். வேதியனாக வந்த சூரியன் அவ்விருவருக்குமிடையே சமரசம் செய்து வைப்பதாக முன் வந்தான். முனிவருக்குச் சாதகமாகப் பேசுவது போலப் பேசி முடிவில் அவருடைய புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைத் தந்துவிடுமாறு சொன்னான். தாம் புறப்பட்டு வந்த காரியம் தடைப்பட்டுப் போகிறதே என்று வருந்தி, பார்க்கவர் அந்தச் சமரசத்துக்கு இணங்கினார். அவருடைய புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டு அந்த மனிதன் அப்பால் சென்றான்.
அவர்கள் இருவரும் மேலும் சிறிது தூரம் சென்றிருப்பார்கள். இன்னொரு மனிதன் எதிர்ப்பட்டு முனிவரை வழிமறித்தான். அவன் முன்பிறவியில் முனிவருடைய பசுக்களை மேய்த்து வந்த விதத்தில் பணம் கொடுக்காமலிருப்பதாகக் கூறிப் புண்ணியத்தில் பாதியைத் தருமாறு கேட்டான். முனிவர் அவன் வார்த்தைகளை மறுக்கவே, முன்போல் சூரியன் அவர்கள் தகராறைத் தீர்த்து வைப்பதாகக் கூறி முனிவருடைய புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கை அவனிடம் இழக்கச் செய்தான். மறுபடியும் அவர்கள் கொஞ்ச தூரம் போயிருப்பார்கள். மூன்றாவது முறையாக ஒரு மனிதன் வந்து முனிவரை வழிமறித்தான். அவன் ஒரு நெசவாளி. முனிவருக்கு வஸ்திரங்கள் தந்ததில் பணம் பாக்கியிருப்பதாகவும், புண்ணியம் அனைத்தையும் தரவேண்டும் என்றும் கேட்டான். இம்முறையும் சூரியன் அவர்கள் தகராறைத் தீர்த்து வைத்தான். வஸ்திரங்கள் வாங்கி பணம் கொடுக்காதிருந்துவிட்டால் அது பெரும் பாவம் ஆகும். ஆகவே முனிவர் தம்முடைய புண்ணியம் அனைத்தையுமே அவனிடம் இழக்கும்படியாகி விட்டது. பார்க்கவர் தாம் பெற்றிருந்த புண்ணியம் அனைத்தையும் இழந்துவிட்டதால் அவரால் மேலே செல்ல முடியவில்லை. என்ன செய்வார்? வேதியனாக வந்த சூரியன் அவரைப் பார்த்து, மகரிஷே, நான் அழைத்துச் செல்கிறேன். என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.
பார்க்கவர் சூரியனுடைய கையைப் பிடித்துக்கொள்ள அவரை அவன் அழைத்துச் சென்றான். அவர்கள் நேராக யமலோகத்தை அடைந்தார்கள். மகரிஷி தர்மராஜனை நமஸ்கரித்துத் தாம் வந்திருக்கும் காரியத்தைத் தெரிவித்தார். தர்மராஜனும் அவர்களைச் சதாநீக ராஜன் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றான். நரகத்தில் ஓரிடத்தில் சதா நீகன் நரகவேதனைப் பட்டு வந்தான். ஒரு பாத்திரத்திலே அரசனைத் தள்ளி அடுப்பிலேற்றி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர். அவன் படும்வேதனையைக் கண்டு முனிவருடைய உள்ளம் வருந்தியது. ஹே ராஜன், உம்முடைய நிலையைக் காண்கையில் என்மனம் படும் வேதனையை எவ்வாறு எடுத்துரைப்பேன்? நீங்கள் செய்த தான தருமங்களுக்கு ஒரு கணக்கு உண்டா? எத்தனையோ புண்ணியங்களைச் செய்துள்ள உங்களுக்கு இத்துன்பம் வரக் காரணமென்ன ? என்று கேட்டார். மகரிஷே தாங்கள் கூறியபடி நான் செய்த தான தருமங்களுக்கு ஒரு கணக்கில்லை என்பது உண்மையே. இருப்பினும் எந்தச் சொத்தை நான் தானம் செய்தேனோ அவை அனைத்தும் குடிமக்களிடமிருந்து கொடூரமான முறையில் அவர்களை வருத்தி வாங்கியது அன்றோ. அதனால் தான் இத்தண்டனையை நான் அனுபவித்து வருகிறேன். தயவு செய்து என் மகனைக் கண்டு இப்பெரும் துன்பத்திலிருந்து நான் விடுபட உகந்த காரியங்களை மேற்கொள்ளுமாறு சொல்லுங்கள் என்று கண்ணீர் விட்டான். பார்க்கவர் தம்முடன் வந்திருந்த வேதியரைப் பார்த்து நமஸ்கரித்து அவருடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார். ஐயா, தங்களைத் தேவபுருஷராகவே நான் எண்ணுகிறேன். ஏனெனின் சத்புருஷர்களின் சம்பந்தம் ஏற்படும்போது தான் ஒருவனுடைய மனம் தர்ம காரியங்களில் திரும்பும் என்று சொல்வார்கள். நான் செய்த புண்ணியம் அனைத்தையும் இழந்து தவித்து நின்றபோது தாங்கள் என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள், இது சாதாரண புருஷனால் ஆகக்கூடிய காரியம் அன்று. தாங்கள் யார் என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கோரினார்.
முனிவர் கோரியதை மறுக்க முடியாது சூரியன் தன்னுடைய சுயரூபத்தை அவருக்குக் காட்டினான். பார்க்கவர் பெரிதும் மகிழ்ந்து சூரியனை நமஸ்கரித்துப் பலவாறு தோத்திரம் செய்தார். பாஸ்கரா, தங்களைத் தரிசித்த பின்னர் சதாநீக ராஜனுக்கு மட்டுமல்ல, அவன் நாட்டு பிராமணோத்தமர்களுக்கும் நல்ல வழி காண முடியும் என்ற நம்பிக்கை என்னுள் உறுதியாகப் பற்றி நிற்கிறது. அல்ப விவகாரங்களில் ஆசை வைத்துத் துன்புறுவோர் கடைத்தேறவும் அசக்தத்தால் தர்மங்களைச் செய்யாது இருப்பவர்களையும் உத்தாரணம் செய்யக்கூடியதுமான விரதம் இருக்குமானால் அதைச் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். சூரியன் மிக மகிழ்ந்து, முனிவரே, தருமத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்பவன் அந்தத் தருமத்தைச் செய்த பலனை அடைகிறான். உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகத் தருமத்தைச் சொல்ல வேண்டும். நீர் கேட்டபடி ஓர் அரிய விரதம் ஒன்றிருக்கிறது. அதைக் கூறுகிறேன், கேளுங்கள் என்று சொன்னார். சித்திரை மாதம் பரமசிவனுக்கு மிகவும் விருப்பமானது. ஆகவே அந்த மாதத்தில் தேவர்களும் பரம பிரீதியுடன் இருப்பார்கள். பகவான் அந்த மாதத்தில் பாலரூபத்தோடு தேவியுடன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருப்பார். சித்திரை மாதத்தில் வரும் சதுர்த்தசி அன்று தீபதானம் செய்வதானது சகலமான தேவர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாகும். பூர்வ பக்ஷத்திலோ அமர பக்ஷத்திலோ சதுர்த்தசி அன்று விரதமிருந்து பகவானை ஆராதித்து தீபதானம் செய்யவேண்டும். அவ்வாறு செய்பவர்கள் எல்லாவிதப் பாபங்களிலிருந்தும் விடுபட்டுப் புனிதத் தன்மையை அடைவார்கள்.
சூரியனால் தெரிவிக்கப்பட்ட சதுர்த்தசி விரதத்தைக் கேட்ட பார்க்கவ முனிவர் உடனே பூலோகம் திரும்பினார். ஆசிரமத்திலே அவருடைய வருகைக்காகப் பிராமணர்கள் காத்திருந்தனர். மகரிஷியைக் கண்டதும் அவர்கள் ஆவலோடு ஓடி வந்து வரவேற்று உபசரித்தார்கள். பார்க்கவர் தாம் சென்று வந்த விவரங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறினார். பிராமண சிரேஷ்டர்களே, இப்போதே அரசனிடம் சென்று சதாநீக ராஜன் பட்டுவரும் அவதியை எடுத்துக் கூறி அதைத் துடைக்க சூரியனால் சொல்லப்பட்ட சதுர்த்தசி விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு சொல்லுங்கள். தந்தையின் பாவம் தீருவதோடு உங்களுக்குப் பயன் ஏற்படும் வகையில் அவன் நடந்துகொள்வான் என்றார் மகரிஷி. அவர்கள் தாங்கள் மட்டும் செல்ல விரும்பவில்லை. தங்களோடு மகரிஷியும் வரவேண்டும் என அழைத்தனர். பார்க்கவ முனிவரும் அதற்குச் சம்மதித்து அவர்களுடன் புறப்பட்டு அரண்மனையை அடைந்தார். முனிவருடைய திருவாக்கின் மூலம் விபரத்தை அறிந்தபோது அரசன் மனம் நெகிழ்ந்து விட்டது. அப்போதே பக்கத்திலுள்ள புண்ணிய ÷க்ஷத்திரம் ஒன்றுக்குப் புறப்பட்டான். அங்கே தன் செலவில் ஒரு தடாகம் எடுப்பித்து அதன் கரையில் அமர்ந்து பக்தியுடன் சிவனை ஆராதித்து சதுர்த்தசி விரதம் இருந்தான். வேதியர்களுக்கும் பண்டிதர்களுக்கும் ஏராளமான பொன்னும், மணியும் தானமாகத் தந்ததோடு தீப தானங்கள் பல வழங்கினான். அனேக பசுக்களையும் கன்றுகளோடு தானம் அளித்தான். பக்தியுடன் அவன் மேற்கொண்ட அக்காரியங்களால் நரகத்திலே வேதனை அடைந்து வந்த சதா நீக ராஜன் அத் துன்பங்களிலிருந்து நீங்கிச் சொர்க்க லோகத்தை அடைந்து மகிழ்ந்திருந்தான்.
7. ஆதித்தன் தந்த அக்ஷய பாத்திரம்
சூதாட்டத்திலே சகுனியிடம் அனைத்தையும் இழந்து நின்றார் யுதிஷ்டிரர். அவரை ஏமாற்றிச் சொத்து அனைத்தையும் ஆட்டத்தில் இழக்கச் செய்து விட்டான் சகுனி. பாண்டவர் ஐவரும் தங்கள் மனைவி திரவுபதியுடன் வனத்திலே பன்னிரண்டு ஆண்டுகள் வாசம்புரிய வேண்டும் என்றும், அதன் பின்னர் ஓர் ஆண்டுக் காலம் அவர்கள் அக்ஞாத வாசம் புரிய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தான் துரியோதனன். நிபந்தனைப் பிரகாரம் அவர்கள் நடந்துவிட்டால் இழந்த சொத்து அனைத்தையும் திரும்பத் தந்து விடுவதாகக் கூறினான் அவன். வனத்திலே பன்னிரண்டு ஆண்டுக் காலம் தனியாக வசித்து அவர்கள் மீண்டு வருவது ஏது என்று மனப்பால் குடித்தான் துரியோதனன். அவ்வாறு பன்னிரண்டு ஆண்டுக் காலத்தையும் வெற்றியாக முடித்துக் கொண்டாலும் அக்ஞாத வாச காலத்தில் அவர்கள் மறைந்திருக்கும் இடத்தை எவ்வகையிலும் கண்டுபிடித்து விட முடியும் என்று நினைத்தான். ஆகவே, எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து கைப்பற்றிய சொத்தைத் திரும்பத் தர வேண்டியிருக்காதல்லவா! நல்லவர்களான பாண்டவர்கள் திரவுபதியுடன் தருமத்துக்குக் கட்டுப்பட்டுத் தலை குனிந்து வனத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்களுடன் சவுனகர், சவுமியர் மற்றும் அனேக முனிவர்களும், பிராமணர்களும் அவர்களுடைய பத்தினிகளும் புறப்பட்டனர். தங்களைத் தொடர்ந்து வரவேண்டாமென்று தருமர் கேட்டுக் கொண்டதை அவர்கள் ஏற்கவில்லை. நட்பின் மிகுதியால் அவர்கள் வருகிறார்கள் என்றும் இரவுப் பொழுது நெருங்கியதும் அவர்கள் திரும்பி விடுவார்கள் என்றும் அவர் எதிர் பார்த்தார். கங்கைக் கரையை அடைந்த பாண்டவர்கள் அங்கே இருந்த பிரமாணம் என்ற ஆலமரத்தடியில் தங்கினர். அவர்களுடன் வந்தவர்களும் அங்கேயே தங்கி விட்டனர். பாண்டவர்கள் அன்றிரவுப் பொழுதுக்கு ஆகாரமாக வெறும் நீரைப் பருகியே கழித்தனர். பொழுது புலர்ந்தது. உடன் வந்த வேதியர்கள் திரும்பாது தங்கியிருப்பது தருமருக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. அவர்களை நோக்கிக் கையெடுத்து கும்பிட்டார்.
பெரியோர்களே, நீங்கள் வேதங்களில் கரை கண்டவர்கள். உங்களுக்கு நான் புத்தி கூற வேண்டியதில்லை. நாடு, நகரம், செல்வம் எல்லாவற்றையும் நாங்கள் துறந்து காய், கனி, இலைகளை ஆகாரமாகக் கொண்டு துன்பத்துடன் காட்டை நோக்கிக் செல்கிறோம். காடு துன்பம் நிறைந்தது. விலங்குகளும் அரக்கர்களும் வாசம் புரியும் இடம். அந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல. நீங்கள் தயவு செய்து திரும்பி விடுங்கள் என்று கோரினார். தரும புத்திரரே, உங்களுக்கு நாங்கள் பாரமாக இருந்து ஒருபோதும் துன்பம் தரமாட்டோம். எங்களுக்கு வேண்டிய காய், கனி, கிழங்குகளை நாங்களே தேடிக் கொள்வோம். எங்களால் ஒரு சிறு துன்பமும் உங்களுக்கு நேராது. உங்கள் நன்மைக்காக உங்கள் அருகில் இருந்து ஜபம் முதலான செய்து வருவோம். மற்றச் சமயங்களில் மனத்துக்கு இனிய கதைகளைப் பேசி நாம் பொழுது போக்குவோம் என்றனர் வேதியர். என்ன செய்வார் தரும புத்திரர்? சொல்ல முடியாதவாறு மனத்துக்குள்ளாகவே குமைந்தார். அவருடைய சங்கடமான நிலையை அறிந்தார் சவுன முனிவர். யுதிஷ்டிரே, காய்ச்சிய இரும்பைத் தோய்ப்பதனால் குடத்தில் உள்ள நீர் வெப்பத்தை அடைவது போல மனத்துன்பத்தினால் உடம்பு வெப்பத்தை அடைகின்றது. ஆசை எல்லாத் துன்பங்களையும் தருகின்றது. நெருப்புள்ள இடத்தில் பனி நெருங்காது. அதுபோல ஞானமுள்ள இடத்தில் துன்பம் அணுகாது என்றார். மகரிஷே, நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னைச் சுற்றியுள்ள இந்த அந்தணர்களைக் காக்கும் பொறுப்பு என்னுடையது ஆகின்றது அல்லவா? தனக்காகச் சமைக்கக்கூடாது, பிறருக்குத் தந்து மீதியையே புசிக்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்ல வில்லையா? என்று வேதனையோடு கேட்டார் தரும புத்திரர். தவுமியர் என்ற முனிவர் யுதிஷ்டிரரை அழைத்து அவருக்கு ஆதித்த மந்திரத்தை உபதேசம் செய்தார். தரும, கழுத்தளவு நீரில் நின்று இம்மந்திரத்தை பக்தியுடன் ஜபித்து வா. சூரியனுடைய அனுக்கிரகம் கிட்டும் என்றார்.
தருமரும் அவ்வாறே கழுத்தளவு நீரில் நின்று சூரியனைக் குறித்துப் பக்தியுடன் ஜபம் செய்தார். சூரியன் அவர் ஜபத்தால் மகிழ்ந்து அவர் முன்பு தோன்றி ஒரு பாத்திரத்தை அளித்தான். யுதிஷ்டிரா, இதைப் பெற்றுக் கொள். இது ஓர் அட்சய பாத்திரம். எல்லோருக்கும் வேண்டிய அளவு உணவு தரும். உன் மனோபீஷ்டங்கள் யாவும் நிறைவேறும். பதினான்காம் ஆண்டில் நீங்கள் உங்கள் அரசைத் திரும்ப அடைவீர்கள் என்று அனுக்கிரகித்து மறைந்தார். தருமர் அந்தப் பாத்திரத்தை எடுத்து வந்து திரவுபதியிடம் கொடுத்தார். பக்தியோடு அதைப் பெற்றுக் கொண்ட திரவுபதி அதில் நால்வகை உணவுகளை எடுத்து அனைவருக்கும் பரிமாறினாள். எடுக்க எடுக்கக் குறையாது, பாத்திரத்தில் உணவு நிறைந்திருந்தது. முடிவில் யுதிஷ்டிரர் உணவு அருந்திய பின் திரெவுபதி உணவு சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டதும் அந்தப் பாத்திரம் வற்றி விட்டது. அதுமுதல் பாண்டவர்கள் சூரியனால் அளிக்கப்பட்ட அட்சய பாத்திரத்தைக் கொண்டு நாள்தோறும் அனைவருக்கும் உணவு அளித்து தாங்களும் வயிறாரச் சாப்பிட்டு வந்தனர்.
8. கற்பின் சக்தி
ஒரு சமயம் வசிஷ்ட மகரிஷியின் மனைவியான அருந்ததியின் கற்புத் தன்மையை இந்திரன், அக்கினி, சூரியன் மூவரும் பரிசோதிக்க எண்ணம் கொண்டார்கள். நீர் கொண்டு வரக் குடத்தோடு தடாகத்துக்குப் புறப்பட்டாள் அருந்ததி. தடாகக் கரையிலே மூவரும் அவள் முன்பு தோன்றினர். அவர்களைக் கண்டதும் தேவ புருஷர்கள் என்பதை அருந்ததி உணர்ந்து விட்டாள். அவர்களை வலம் வந்து நமஸ்கரித்தாள். பிறகு அவர்களை நோக்கிக் கைகூப்பியவளாய், பரம புருஷர்களே, நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கும் காரணம் என்ன? என்று கேட்டாள். அம்மையே, உன்னிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கான பதிலைத் தெரிந்து செல்லவே வந்துள்ளோம் என்றனர் மூவரும். மிக்க சந்தோஷம். நீங்கள் பர்ணசாலைக்குச் சென்று தங்கியிருங்கள். அதற்குள் நீர் கொண்டு வந்து விடுகிறேன் என்றாள் அருந்ததி. நீரூக்காக நீ சிரமப்பட வேண்டாம், பெண்ணே, இப்போது குடத்தில் நீர் நிறையச் செய்து விடுகிறோம் என்றார்கள் அவர்கள். அவர்கள் கோரிக்கைக்கு இணங்கிக் குடத்தை அவர்கள் முன்பு தரையில் வைத்தாள். பிறப்பினால் பிராம்மணனிடத்தில் எனக்குப் பயமில்லாதிருப்பதும், தவம், பிரம்மசரியம், அக்கினி ஹோத்ரம் முதலான அனுஷ்டானங்களால் என் பதவியை ஒருவன் அடையலாம் என்பதும் சத்தியமானால் இந்தக் குடத்தில் கால் பங்கு ஜலம் நிரம்பட்டும் என்றான் இந்திரன். அடுத்த க்ஷணம் குடத்தில் கால் பங்கு நீர் நிரம்பியிருந்தது. யாகம், பிதுர்சிராத்தம் ஆகியவற்றால் நான் அடையும் திருப்தியைவிட, அதிதிக்கு அன்னமளிப்பதால் நான் அதிக அளவு திருப்தி அடைகிறேன் என்பது சத்தியமானால் குடத்திலே இன்னொரு கால் பங்கு நீர் நிறையட்டும் என்றான் அக்கினி.
அவ்வாறே குடத்தில் ஒரு பாதிவரை நீர் நிரம்பியது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வேதியர் செய்யும் அர்க்கியப் பிரதானம் அஸ்திராங்களாக மாறி மந்தேகர்கள் எனப்படும் அரக்கர்களை விரட்டுவது சத்தியமானால் குடத்தில் கால்பங்கு நீர் நிறையட்டும் என்றான் சூரியன். குடத்தின் முக்கால் பங்குவரை நீர் நிறைந்தது. அருந்ததிக்கு நிலைமை புரிந்து விட்டது. தன்னைப் பரிசோதிக்கவே அம்மூவரும் வந்திருக்கிறார்கள் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். குடத்திலே நீர் நிறையச் செய்வதாகக் கூறியஅவர்கள் ஒவ்வொரு வரும் தங்கள் பங்குக்குக் கால் பகுதி மட்டுமே குடத்தில் நீர் நிறையும்படி செய்துள்ளார்கள். மீதமுள்ள கால் பகுதியை அவள் தன் பதிவிரதா சக்தியால் நிரப்பிக்காட்ட வேண்டும். அம்மூவருடைய பேச்சிலிருந்து அவர்கள் இந்திரன், அக்கினி, சூரியன் என்பதையும் அவள் நன்கு அறிந்து கொண்டாள். அவர்களை நோக்கி மறுபடியும் நமஸ்கரித்து விட்டு மனத்திலே பதியைத் தியானித்தாள். பின்னர் பணிவோடு கூறினாள். இரகசியமாக இருக்கக்கூடிய சூழ்நிலையும் பிற புருஷர்களோடு சகவாசமும் கிடைக்கும் வரையில் பெண்கள் பதிவிரதைகளாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களை மிகுந்த கவனத்தோடு பாதுகாக்க வேண்டும் என்பது சத்தியமானால் குடம் நீர் நிறைந்ததாக ஆகட்டும். அவள் சொல்லி முடித்ததும் நீர் நிறைந்து வழிந்தது. அதைக் கண்டதும் இந்திரன், அக்கினி, சூரியன் மூவரும் மகிழ்ந்தனர். அவர்கள் எண்ணி வந்த காரியம் பூர்த்தியாகி விடவே அவர்கள் மூவரும் அருந்ததியைப் பலவாறு புகழ்ந்து கொண்டாடி விட்டுச் சென்றனர்.
9. அமிருதம் அருந்த வந்த அசுரன்
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி யுத்தங்கள் நிகழ்ந்து வந்ததால் தேவர்கள் மிகவும் களைத்து விட்டனர். அவர்கள் அசுரர்களுடைய தாக்குதல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதே பெரும் கஷ்டமாக இருந்தது. தேவர்கள் ஒன்றுகூடிப் பிரமதேவனிடம் சென்று சரணடைந்து அசுரர்களால் தாங்கள் பட்டுவரும் துன்பங்களிலிருந்து விமோசனம் அளிக்குமாறு வேண்டினர். பிருமதேவன் அவர்களை நாராயணனிடம் சென்று கேட்குமாறு சொன்னார். அவ்வாறே தேவர்கள் வைகுந்தம் சென்று நாராயணனிடம் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லிக் கண்ணீர் விட்டனர். ஹே ஆபத்பாந்தவா, தாங்களும் எங்களைக் கைவிட்டு விடுவீர்களானால் நாங்கள் அசுரர்களால் அழிக்கப்படுவது நிச்சயம் என்றனர். தேவர்களே, கவலை வேண்டாம். மரணமே இல்லாதிருக்க ஒரு வழி இருக்கிறது. பாற்கடலின் அடியில் உள்ள அமிருதத்தை வெளியே எடுத்து, அதைப் பருகி விட்டால் அசுரர்களால் ஒருபோதும் அழிவு என்பது இல்லை என்றார் நாராயணன். அந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அளவற்ற ஆவலோடு, ஹே பிரபோ, அமிருதத்தைக் கொண்டு வருவது எவ்வாறு? வழி சொல்லுங்கள் என்று கேட்டனர். மந்தர மலையைக் கொண்டு வந்து பாற்கடலிலே நிறுத்தி அதனால் கடலைக் கடந்தால் அமிருதத்தை வெளிப்படுத்தலாம் என்றார் நாராயணன். அது நடக்கக் கூடிய காரியமா? தேவர்கள் எவ்வாறு கடைவது? அவர்களுக்குச் சாத்தியமான காரியம் அல்லவே.
தேவர்களே, அசுரர்களிடம் சென்று விஷயத்தைக் கூறி, சாகாதிருக்க அமிருதம் கடைந்தெடுக்க அழையுங்கள். அவர்கள் தட்டாது வருவார்கள். இருவருமாக மந்திர மலையை மத்தாக வைத்துப் பாற்கடலைக் கடைந்தீர்களானால் அமிருதம் வெளிப்படும். அதன் பின்னர் அமிருதத்தை நீங்கள் மட்டுமே பருக நான் தகுந்த உபாயத்தைக் கடைப்பிடித்து அசுரர்களை ஏமாறச் செய்வேன் என்றார். தேவர்கள் அசுரர்களிடம் சென்று சாகாமலிருக்க அமிருதம் பருக வேண்டுமென்றும், அதை அடையப் பாற்கடலைக் கடைய வருமாறும் அழைத்தனர். மரணமில்லாத வாழ்வை யார்தான் விரும்பமாட்டார்கள்? அசுரர்கள் தேவர்களிடம் தாங்கள் கொண்டிருந்த பகையை விடுத்துப் பாற்கடலைக் கடைய முன்வந்தனர். மந்தரமலையைப் பெயர்த்து வந்து நடுக்கடலிலே நிறுத்தினர். வாசுகி என்ற சர்ப்பத்தை வேண்டி அதைக் கயிறாக உபயோகித்தனர். வாசுகியை மந்தர மலையைச் சுற்றி, தலைப்பாகத்தில் அசுரர்களும் வால்புறத்தில் தேவர்களும் இருந்து இழுத்துக் கடைய ஆரம்பித்தனர். வாசுகியால் வலி தாள முடியவில்லை. பெரு மூச்சோடு விஷத்தைக் கக்கினான். அது கடலிலே எழுந்த ஆலகாலம் என்ற விஷத்தோடு கலந்தது. விஷத்தின் கொடுமை தாங்கமுடியாது தேவர்களும் அசுரர்களும் கடைவதைப் பாதியிலேயே விட்டு விட்டு ஓடினர். ஆலகாலவிஷம் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. அதன் வெப்பத்தைத் தாங்கமுடியாது சகல ஜீவ ராசிகளும் தவித்தன. விஷ்ணுவின் உடல் கரியநிறத்தை அடைந்தது. அவரால் அந்த விஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அனைவரும் கைலாயம் சென்று ஈசனிடம் தஞ்சமடைந்தனர். ஈசன் ஆலகால விஷத்தைத் தம்முடைய உள்ளங்கையில் கிரகித்து வாயிலேபோட்டு விழுங்கித் தொண்டையிலே நிறுத்தி விட்டார். விஷத்தின் கொடுமையால் அந்தப்பகுதி கறுத்து விட்டது. அதன் காரணமாக ஈசனுக்கு நீலகண்டன் என்றும், ஸ்ரீகண்டன் என்றும் பெயர்கள் வழங்கலாயிற்று.
விஷத்தால் எழுந்த அபாயம் நீங்கியதும் தேவாசுரர்கள் மறுபடியும் கடலைக் கடைய ஆரம்பித்தனர். நீரிலே மலை உறுதியாக நிற்காது அடிக்கடி சாய்ந்தது. அதைக் கண்ட நாராயணன் ஆமையாக ரூபம் கொண்டு நீரினுள் மூழ்கிச் சென்று மலையின் அடிப்பகுதியை அடைந்து அந்த மலையைத் தமது முதுகிலே சுமந்து தாங்கிக் கொண்டார். தேவர்களும் அசுரர்களும் உற்சாகத்தோடு மாறி மாறி இழுத்துக் கடைந்தனர். கடலிலிருந்து கோடி சூரியப்பிரகாசத்தோடு மகாலக்ஷ்மி சர்வாலங்கார பூஷிதையாகத் தோன்றினாள். அவளை நாராயணன் ஏற்றுக் கொண்டார். பின்னர் தன்வந்தரி வெளிப்பட்டார். அவரே அனைவருக்கும் வைத்தியராக ஆனார். பின்னர் கல்பகத்தரு, உச்சை சிரவசு என்ற வெள்ளையானை, காமதேனு வெளிப்பட்டன. அவற்றை இந்திரன் தனக்கென எடுத்துக் கொண்டான். கவுஸ்துபமணி வெளிப்பட்டபோது அது மகாவிஷ்ணுவுக்குச் சொந்தமாகியது. இவ்வாறாகக் கடலிலிருந்து தோன்றிய பொருள்களை ஒவ்வொன்றாக இந்திரன் தங்களுக்கென எடுத்துக் கொண்டான். அமிருதத்தைத் தாங்கள் கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற எண்ணத்தில் அசுரர்கள் ஆட்சேபம் தெரிவிக்காது இருந்து வந்தனர். முடிவில் அமிருத கலசம் வெளிப்பட்டது. அப்போது அதன் துளிகள் சில நாற்புறமும் சிந்தின. அவற்றிலிருந்து ரூபலாவண்யமுள்ள அப்சரசுகள் அனேகர் தோன்றினர். அப்சரசுகளைத் தாங்கள் அடைய வேண்டும் என்று தேவர்கள் பரபரப்போடு முந்தும் வேளையில் அசுரர்கள் அமிருத கலசத்தைக் கைப்பற்றிக்கொண்டு ஓடிவிட்டனர்.
முக்கியமான சமயத்தில் தாங்கள் ஏமாந்து விட்டதை எடுத்துக் கூறி நாராயணனிடம் கதறினர் தேவர்கள். அப்போதே விஷ்ணு மாயையின் உதவியால் சவுந்தரிய தேவதையாக உருக்கொண்டு அசுரர்களைத் தேடிச் சென்றார். அசுரர்களுக்கிடையே அமிருதம் சாப்பிடுவது பற்றி பலத்த போட்டி இருந்தது. அவர்கள் யார் முதலில் சாப்பிடுவது என்பது பற்றி சர்ச்சையிட்டுக் கொண்டிருந்தனர். விஷ்ணுவின் பெண் வேடத்தைக் கண்டதும் அசுரர்களுடைய மனம் அவருடைய அழகினால் ஈர்க்கப்பட்டது. அவளையே ஆவலோடு பார்த்தனர். அமிருதம் வெளிப்பட உழைத்த தேவர்களுக்கும் அமிருதத்தில் பங்கு தருவதுதான் நியாயம் என்றும், அவர்களுக்கு முதலில் துளித் துளி கொடுத்துவிட்டு அசுரர்களுக்கு முழுவதையும் பாங்கிட்டுத் தருவதாக மோகினியாக வந்திருந்த விஷ்ணு கூறினார். அழகிலே மயங்கி அறிவிழந்திருந்த அசுரர்கள் அதற்கு இணங்கி அமிருதத்தை அவரிடம் தந்தனர். விஷ்ணு அனைவரையும் வரிசையாக அமரச் செய்து முதலில் தேவர்களுக்கு அமிருதம் அளித்து வந்தார். தேவர்களுக்குக் கொடுத்த பின்னர் முழுவதையும் தங்களுக்குப் பங்கிடப் போவதாக எண்ணிக் காத்திருந்தனர் அசுரர்கள். ஸிம்ஹிகா என்ற அரக்கியின் பிள்ளை தேவர்களுக்கு முதலில் அமிருதம் பங்கிடும் விஷயத்தில் சந்தேகம் கொண்டான். மற்றவர்கள் ஏமாந்துபோனாலும் தான் மட்டுமாவது அமிருதம் சாப்பிட வேண்டுமென்று எண்ணிய அவர் தேவர்களைப்போல வேடம் கொண்டு அவர்கள் கூட்டத்தில் கலந்து சூரிய சந்திரர் அருகே வரிசையில் இடம் பிடித்துக் கொண்டு விட்டான். அசுரனுடைய வேஷத்தை அறிந்து கொண்ட சூரியனும் சந்திரனும் நாராயணனிடம் அதை எடுத்துக் கூறி விட்டனர். கோபம் கொண்ட நாரணன் அமிருதகலசத்தின் முடிவால் கோபத்துடன் அசுரனுடைய தலையைத் துண்டித்து எறிந்தார். அந்தத் தட்டிலே அமிருதம் படிந்திருந்ததாலும், தலை துண்டிக்கப்பட்டபோது அதன் சம்பந்தமும் ஏற்பட்டதாலும் அசுரன் உயிர் இழக்கவில்லை. அமிருத சம்பந்தம் ஏற்பட்டதால் தலைப்பகுதி ராகுவாகவும் உடல் பகுதி கேதுவாகவும் மாறி நவக்கிரகங்கள் வரிசையில் சேர்ந்தனர். சூரியனும், சந்திரனும் தன்னைக் காட்டிக் கொடுத்ததால் கோபம் கொண்ட ஸிம்ஹிகா புத்திரன் ராகுவாக அமாவாசை அன்று சூரியனையும், கேதுவாக பவுர்ணமியன்று சந்திரனையும், சிலகாலங்களில் மறைந்து அவர்களுடைய பிரகாசத்துக்குக் களங்கம் விளைவிக்கின்றனர்.
10. மீன் வயிற்றிலே பிறந்த மகன்
ஒரு சமயம் உலகில் தர்ம காரியங்கள் சரிவர நடக்காது அழிந்து போகக்கூடிய நிலை ஏற்பட்டது. அவ்வமயம் பிரமதேவன் சூரியனை அழைத்துப் பூலோகம் சென்று சில காலம் இருந்து தர்மங்களைக் காப்பாற்றி, அவை சரிவர நடந்துவர ஏற்பாடு செய்யுமாறு சொன்னார். அவ்விதமே சூரியனும் பூவுலகிலே வந்து தோன்றினான். அயோத்தி நகரிலே ஆண்டு வந்த அரசனுக்குக் குமாரனாகப் பிறந்தான் சூரியன். உபரிசிரவசு என்ற பெயர் கொண்ட அவன் தந்தைக்குப்பின் அரசனாகி நாட்டிலே நசித்துவிடக் கூடிய தர்மங்களை நிலைநிறுத்தினான். முன்போல அவைமுறை பிறழாது நடந்துவரும்படி செய்தான். அடிக்கடி இரதத்திலேறித் தன் நாடு முழுமையும் சுற்றிப் பார்த்துத் திரும்புவான். ஒரு சமயம் உபரிசிரவசு நாட்டின் பலபகுதிகளையும் சுற்றிப் பார்த்து வந்தான். அப்போது வசந்த ருது, உலகமே பூரண இன்பத்தில் திளைத்திருந்தது. அதன் எதிரொலி அவனிடமும் தெரிந்தது. அருகில் மனைவி இல்லையே என்ற ஏக்கம் அவன் மனத்திலே தோன்றியது. அதன் காரணமாக அந்த க்ஷணமே அவன் தேஜஸ் வெளிப்பட்டு விட்டது. அதை வீணாக்க அரசன் விரும்பவில்லை. அகன்ற இலை ஒன்றைப் பறித்துத் தொன்னையாகத் தைத்து அதில் விழச் செய்தான். அதை எவ்வாறு அரண்மனையிலிருக்கும் தன் மனைவியிடம் சேர்ப்பது என்பதைச் சிந்தித்தான். அவனோடு சேனகம் என்றொரு வகைப் பறவையும் இரதத்தில் வந்திருந்தது, அது அரசன் முன்பு வந்து, அரசே, என்னிடம் தாருங்கள். நான் அரண்மனையிலிருக்கும் அரசியிடம் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன் என்றது. அரசனும் தொன்னையை அதனிடம் கொடுத்தான். பறவை அதைத் தன் அலகினால் கொத்தித் தூக்கிக் கொண்டு அயோத்தி நோக்கிப் பறந்து செல்லலாயிற்று.
யமுனை நதியின்மீது சேனகம் பறந்து செல்லும் போது அதை மற்றொரு பறவை பார்த்தது. அதன் அலகிலே பிடித்திருந்த தொன்னையே மாமிசம் என்று எண்ணிவிட்டது போலும். அதைக் கைப்பற்ற எண்ணிப் பறந்து வந்து தாக்கியது. இரண்டு பறவைகளுக்குமிடையே நடந்த போராட்டத்தில், சேனகத்தின் அலகில் இருந்த தொன்னை நழுவி ஆற்றிலே விழுந்துவிட்டது. அவ்வழியே வந்த பெண் மீன் ஒன்று தொன்னையிலிருந்த தேஜஸ்ஸை விழுங்கி விட்டது. அந்த மீன் பூர்வத்தில் கிரிகை என்ற ஓர் அப்சரஸ், பிரமனுடைய சாபம் காரணமாக அவள் யமுனையாற்றிலே மீனாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சில நாட்களுக்கெல்லாம் கிரிகையான அந்த மீன் கருவுற்றது. அது தளதளவென்று நல்ல செழிப்போடு நதியிலே சஞ்சரித்து வந்தது. ஒருநாள் நதியிலே மீன் பிடித்துக் கொண்டிருந்த செம்படவன் ஒருவன் வலை வீசவே, அதில் கிரிகை அகப்பட்டுக் கொண்டாள். அளவில் பெரிதாகவும் தளதள வென்று பொன்னிறத்தோடு ஜொலித்துக் கொண்டும் இருந்த அந்த மீனை அவன் ஆவலோடு வீட்டுக்கு எடுத்துச்சென்று அறுத்தான். அதன் வயிற்றிலே ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் இருந்தனர். புதையல் கிடைத்தால் அதில் சரிபாதி அரசனைச் சேர வேண்டும் என்பது விதி. அவ்வாறே பெண் குழந்தையைத் தான் வைத்துக்கொண்டு ஆண் குழந்தையை எடுத்துச் சென்று அரசனிடம் கொடுத்தான் அவன்.
ராஜகலையோடு விளங்கிய அந்தக் குழந்தையைக் கண்டதும் அரசனுக்கு அவனையுமறியாமல் அதனிடம் ஒருவித வாஞ்சை உண்டாயிற்று. இரத்தபாசம் அல்லவா? மீனவனை அழைத்து அக்குழந்தை அவனுக்கு கிடைத்த விதத்தைத் தெரிவிக்குமாறு கேட்டான். யமுனையிலே மீன் பிடிக்கையில் பெரிய மீன் சிக்கியதையும் அதை அறுத்தபோது அதன் வயிற்றில் குழந்தை இருந்ததையும் தெரிவித்தான். அக்குமாரன் தன் மைந்தனே என்பது அரசனுக்கு நன்கு விளங்கிவிட்டது. அவனை மிகவும் அன்போடு அரண்மனையில் வளர்த்து வந்து தனக்குப் பின் அரசனாக முடி சூட்டினான். மீனவன் அந்தப் பெண் குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தான். அவள் கிரிஜாவென்றும் சத்தியவதி என்றும் அழைக்கப்பட்டு வந்தாள். அந்தச் செம்படவன் யமுனையைக் கடக்கப் படகு ஓட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தான். சத்தியவதி பெரியவளானதும் தந்தையின் வேலையில் பங்கு கொண்டு அவருக்கு உதவி செய்து வந்தாள். ஒரு நாள் அவள் மட்டும் தனியாகப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தாள். அப்போது பராசர முனிவர் அங்கு வர, சத்யவதி அவரை அக்கரைக்குத் தன் படகிலே ஏற்றிச் சென்றாள். அவள் அழகிலே மனதை இழந்த பராசரர் அவளைத் தன் விருப்பத்திற்கு இணங்கச் செய்தார். அவர்களுக்கு வேதவியாசர் புத்திரராக அவதரித்தார். பலவாறாக இருந்து வந்த வேதங்களை ஒன்று திரட்டி ஒழுங்குபடுத்தி நான்காகப் பிரித்தும், சாதாரண மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ள அவற்றின் சாரமாகப் பதினெட்டுப் புராணங்களையும் இயற்ற பகவானே வேத வியாசராக அவதரித்தார்.
11. அரக்கரை அழிக்கப் புறப்பட்ட அற்புத இரதம்
தாருகாசூரனுக்கு மூன்று குமாரர்கள் வித்தியன் மாலி. தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற அம்மூவரும் தங்கள் தந்தை முருகப் பெருமானால் வதைக்கப்பட்டதற்காக தேவர்களைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தனர். மூவரும் பிரமதேவனைக் குறித்துத் தவம் மேற்கொண்டனர். கணக்கற்ற வருடங்கள் உடலைப் பல விதங்களிலும் வருத்திக் கொண்டு, காற்றையே உணவாகக் கொண்டு அவர்கள் கடுமையாகத் தவம் செய்தனர். அவர்களிடமிருந்து வெளிப்பட்ட யோகாக்கினி சகல லோகங்களையும் தகிக்க ஆரம்பித்தது. பிரமன் அவர்கள் முன்பு தோன்றி, அசுரகுமாரர்களே, நீங்கள் வேண்டுவது யாது? என்று கேட்டார். பிரபோ, எங்களுக்கு யாராலும் மரணம் சம்பவிக்காதிருக்க வரம் தரவேண்டும் என்று கோரினர். அசுர குமாரர்களே, நீங்கள் கேட்பது விசித்திரமாக இருக்கின்றது. உலகிலே பிறப்பு என்று இருக்குமாகில் மரணம் என்பது இருந்தே ஆக வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. ஆகவே வேறு வரம் கேளுங்கள், தருகிறேன் என்றார் நான்முகன். பிரபோ, மரணமில்லாதிருக்க அருளுமாறு நாங்கள் கேட்டதைத் தாங்கள் தர இயலாதென்றால் இந்த வரத்தைக் கோருகிறோம். தேவர்களால் எங்களை ஜயிக்க முடியாத அளவு வலிமையைத் தரவேண்டும். சகல வசதிகளோடு கூடியதும் நினைத்த மாத்திரத்திலே வானிலே எழுந்து எழுந்து செல்லக் கூடியதுமான பொன், வெள்ளி, இரும்பாலான பட்டணங்களை எங்களுக்கு அனுக்கிரகிக்க வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் மூன்று பட்டணங்களும் ஒன்று சேரவேண்டும். அந்தச் சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றை ஒருங்கே அழிக்கக்கூடிய சக்தி உள்ள ஒருவரால் தான் நாங்கள் கொல்லப்படவேண்டும் என்று வரங்களைக் கேட்டனர் அசுரகுமாரர்கள் மூவரும்.
அவர்கள் கேட்ட வரத்தை அளித்து, நான்முகன் தேவதச்சனான மயனை அழைத்து அசுரகுமாரர்கள் மூவருக்கும் பொன், வெள்ளி, இரும்பாலான பட்டணங்களை அவர்கள் விரும்புவதுபோல சகல வசதிகளுடன் செய்து தருமாறு உத்தரவிட்டார். அவ்விதமே பட்டணங்கள் மூன்றும் தயாராக, தாரகாக்ஷன் பொன்னாலான பட்டணத்தையும், கமலாக்ஷன் வெள்ளியிலான பட்டணத்தையும், வித்தியுமன்மாலி இரும்பாலான பட்டணத்தையும் கைக்கொண்டு மகிழ்ந்து இருந்து வரலானார்கள். பொன்னாலான காஞ்சனபுரி சுவர்க்கத்திலும் வெள்ளியிலான இரசிதபுரி வானவீதியிலும், இரும்பாலான, ஆயசபுரி பூமியிலும் சஞ்சரிக்கும் சக்தி பெற்றிருந்தன. அபரிமித பராக்கிரமத்தை அடைந்த அசுரர் மூவரும் தேவர்களைப் பழிவாங்கத் தொடங்கினர். அவர்களை விரட்டி அடித்து அவர்களுக்குச் சொந்தமான பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அது மட்டுமல்ல. அவர்களுக்கு மேலும் பலவித இன்னல்களை அவர்கள் விளைவித்து வந்தனர். வித்தியுன்மாலி நினைத்த மாத்திரத்தில் தன் பட்டணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் திடீரென இறங்கச் செய்வான். அதனடியில் சிக்கிக் கொண்டு மக்களும் மற்ற ஜீவராசிகளும் உயிரை இழந்தனர். எந்தச் சமயத்தில் தங்கள் மீது அசுரனுடைய பட்டணம் இறங்குமோ என்று மக்கள் நடுங்கி வந்தனர். அதனால் அவர்களால் நித்திய கர்மானுஷ்டானங்களைச் சரிவரச் செய்ய முடியவில்லை. தர்ம காரியங்கள் நின்று போயின.
பூவுலகில் யாகம் முதலான கர்மாக்கள் நின்றுபோய் விடவே தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கிடைப்பது குறைந்துவிட்டது. அதனால் அவர்கள் வலிமை குன்றியவர்களானார்கள். எந்த நேரத்திலும் வானிலே சஞ்சரிக்கும் அசுர பட்டணங்களால் தங்களுக்கு ஆபத்து நேருமோ என அவர்களும் பயந்து வந்தனர். தேவர்கள் ஒன்றுகூடிப் பிரமதேவனிடம் சென்று முறையிடவே அவர் நாராயணனிடம் அவர்களை அழைத்துச் சென்றார். பன்னக சயனன் அவர்களை அன்புடன் வரவேற்று ஆறுதல் வார்த்தைகள் பல கூறினார். பின்னர் அவர்களோடு சேர்ந்து சிவலிங்கத்திலே பரமேச்வரனைத் தியானித்து வழிப்பட்டார். பூஜையின் முடிவில் இறைவன் அனுக்கிரகத்தால் சிவலிங்கத்திலிருந்து அனேக பூத கணங்கள் தோன்றி அவரை நமஸ்கரித்துத் தங்களுக்கிடும் பணியாதெனக் கேட்டன. அப்போதே புறப்பட்டுச் சென்று முப்புரங்களையும் அசுரர்களோடு அழித்துத் திரும்புமாறு கூறினார் நாராயணன். அவர் கட்டளையைக் கேட்ட பூதகணங்கள் முக வாட்டமுற்றவையாய் அங்கேயே நின்றன. ஏன் நிற்கிறீர்கள்? உடனே புறப்பட்டுச் சென்று அவர்களை அழித்து தேவர்களுடைய கஷ்டத்தை நீங்குங்கள் என்றார் நாராயணன். பிரபோ, ஒரு விஷயத்தைத் தாங்கள் கவனிக்கவில்லை போல் தோன்றுகிறது. அசுர குமாரர்கள் மூவரும் ஈசனிடம் அத்தியந்த பக்தி கொண்டு அவரை வழிபட்டு வருகின்றவர்கள். சிவபூஜையின் பலனே அவர்கள் செய்து வரும் பாபங்களை அருகே நெருங்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளது. அவ்விதமிருக்க நாங்கள் எவ்வாறு அவர்களை நெருங்குவோம்? என்று பணிவோடு பூதகணங்கள் கூறின.
ஈசனுடைய அனுக்கிரகம் உள்ள வரை அசுரர்களை ஒன்றும் செய்ய முடியாதென்பதைக் கண்ட நாராயணன் பூத கணங்களை அனுப்பி விட்டுச் சிந்தையிலாழ்ந்தார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவர் ஒரு வழி கண்டார். மானஸீகமாக ஒரு புருஷனைத் தோற்றுவித்து அவனுக்கு நான்கு சிஷ்யர்களையும் நியமித்தார். பின்னர் நாரத முனிவரை அழைத்தார். நாரதா, இதோ இருக்கும் புருஷன் என்னால் உண்டாக்கப்பட்டவன். சிஷ்யர்களோடு அவனை அழைத்துக் கொண்டு சென்று அசுர குமாரர்களிடம் அறிமுகம் செய்து வை. நாஸ்திக வாதத்தை அவர்களுக்குப் போதித்து சிவ பூஜை செய்வதை விடுத்து சிவாபராதிகளாகுமாறு செய்வான் என்றார். நாரதர் அந்த மாயா புருஷனையும் அவன் சிஷ்யர்களையும் அழைத்துக் கொண்டு வித்தியுன்மாலியின் இருப்பிடத்தை அடைந்தார். மகரிஷியைக் கண்டதும் அசுரன் ஆவலோடு எழுந்து வந்து அவரை வரவேற்று உபசாரங்கள் பல செய்து கவுரவித்தான். மகரிஷே, அடியேன் திருமாளிகைகளில் தங்கள் பாததுளிபட்டது பற்றி நான் மிகவும் பெருமை அடைகின்றேன். ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்டான் வித்தியுன்மாலி. அசுர சிரேஷ்டா, முக்கிய விஷயமில்லாது உன்னிடம் வருவேனா? நான் பல இடங்களுக்கும் சென்று விட்டுத் திரும்புகையில் இந்தப் புருஷரைக் கண்டேன். இவருடைய உபதேசம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. தர்மங்களை எடுத்துக் கூறுவதில் இவரைப் போன்ற அறிவாளியை இதுவரை நான் கண்டதில்லை. உனக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் என்று அழைத்து வந்தேன். ஏதோ உன்னிடமுள்ள அன்பு என்னை இங்கு வரச் செய்தது? என்று தேனொழுகப் பேசினார் நாரதர். அசுரன் அவர் வார்த்தைகளை உண்மையாகவே எண்ணிவிட்டான்.
மகரிஷே, என்னிடம்தான் தங்களுக்கு எத்தனை பாசம்! தங்கள் உள்ளத்தைக் கவர்ந்த தருமோபதேசத்தை நானும் கேட்க விரும்புகிறேன் என்று கூறியவன் அங்கே அமர்ந்திருந்த மாயா புருஷனையும் நமஸ்கரித்து அவருடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். விஷ்ணுவால் தோற்றுவிக்கப்பட்ட மாயா புருஷன் அசுரன் கொஞ்சமும் சந்தேகிக்காத வகையில் அவனுக்கு நாஸ்திகத்தை எடுத்துக் கூறினான். தன்னுடைய வாதத்துக்கு ஆதாரமாக அவன் வேதங்களில் சொல்லப்பட்ட வாக்கியங்களையே குயுக்தியாக அர்த்தம் கூறி விளக்கினான். அசுரன் அவன் உபதேசங்களை வேதவாக்காகக் கொள்ளத் தொடங்கினான். அப்புருஷன் மேலும் சில காலம் தன் பட்டணத்தில் தங்கி மக்களையும் நல்வழிப்படுத்த வேண்டுமென்று கோரினான். வந்த காரியம் சுலபத்தில் நிறைவேறிவிடவே நாரதர் மாயா புருஷனை அவன் சிஷ்யர்களோடு அசுரனுடைய அரண்மனையிலேயே விட்டு விட்டு புறப்பட்டார். குறுகிய காலத்துக்குள்ளாக மாயாபுருஷன் அசுரர் மூவரையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் நாஸ்திகர்களாக ஆக்கிவிட்டான். அவர்கள் சிவ பூஜை செய்வதை விட்டனர். நித்தியகர்மாக்களைக் கைவிட்டனர். பார்வைக்குத் தெரியாத பகவானை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. மதுவும் மாதருமே அவர்கள் சிந்தையில் குடி கொண்டிருக்கும் விஷயங்களாயின. தரும வழியைவிட்டு அதர்ம வழியில் அவர்கள் நடக்கத் தொடங்கியதோடு தங்களோடு இருந்தவர்களையும் அவ்வாறே செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தினர். அதன் காரணமாக அவர்களுடைய புண்ணியம் குறையலாயிற்று. சிவ பூஜையைக் கைவிட்டதால் ஈசனுடைய கோபத்துக்கும் அவர்கள் உள்ளானார்கள். இவ்விதமாக அசுரர் மூவரையும் அதர்ம வழியில் மாயாபுருஷன் செலுத்தி விட்டது அறிந்த விஷ்ணு, தேவர்களை அழைத்துக் கொண்டு கைலாசத்துக்குச் சென்றார். ஈசனைப் பார்த்துப் போற்றி, அசுரர்களால் தேவர்கள் பட்டுவரும் துன்பங்களை நாராயணன் எடுத்துரைத்தார். சிவ பூஜையைக் கைவிட்டு சிவாபராதிகளாக அசுரர்கள் மாறி விட்டதையும் தெரிவித்தார்.
தேவர்கள் இறைவன் திருப்பாதங்களில் வணங்கி சர்வேசா, அசுரரை அழிப்பவர் எங்களில் யாருமில்லை. முப்புரங்களையும் ஒன்று சேர்த்து அவ்விதம் அவை சேர்ந்திருக்கும் குறுகிய காலத்துகுள்ளாகவே பாணத்தால் அவற்றை ஒருங்கே அழிக்கவல்லவர் தாங்களே. அசுரர்களுக்கு அழிவைத் தந்து எங்களை ரக்ஷிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தனர். இறைவன் அவர்களைக் கருணையோடு நோக்கி, உங்கள் துன்பங்களை நான் அறிவேன். அசுரர்களை அழிக்க இப்போதே புறப்படுகின்றேன். ஓர் அழகிய இரதத்தை உருவாக்கிக்கொண்டு வாருங்கள் என்றார். ஆனந்தத்தால் மனம் நிறைந்த தேவர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர். இறைவன் போருக்குச் செல்ல அற்புத இரதத்தை உருவாக்க வேண்டாமா? தேவர்கள் தங்களையே அத்திருப்பணியில் அர்ப்பணித்துக் கொண்டனர். பிரமன், விஷ்ணு இருவருடைய ஆசியும் பெற்று விசுவகர்மா அந்த அழகிய இரதத்தை உருவாக்குவதில் முனைந்தான். சூரியன் இரதத்துக்கு ஒரு சக்கரமானான். மற்றொரு சக்கரமாக சந்திரன் முன் வந்தான். உதயகிரியும் அஸ்தகிரியும் இரதத்துக்கு இருசுகளாயின. மந்திர பர்வதம் இரதத் தட்டாகியது. ஆகாயம் மேல் மகுடமாகியது. தேவர்கள் இரதத்தின் அலங்காரப் பொருள்களானார்கள். நக்ஷத்திரங்கள் திரைச் சீலைகளாகத் தொங்கின. விந்திய பர்வதம் குடையாகியது. வேதங்கள் நான்கும் குதிரைகளாயின. பிரணவம் குதிரைகளை ஒட்டும் சாட்டையாகியது. பிரமதேவன் இரத சாரதியாக ஏறி அமர்ந்தார். மேரு பர்வதம் வில்லாக வளைந்தது. வாசுகி அந்த வில்லுக்கு நாண் கயிறாகியது. சரஸ்வதி வில்லின் நுனியிலே கலகல வென்று ஒலிக்கும் சிறு மணிகளானாள். விஷ்ணு வில்லிலே பூட்டப்பட்ட பாணமானார்.
அற்புதமாக இரதம் தயாரானதும் தேவர்கள் அதை ஓட்டி வந்து ஈசன் முன்பு நிறுத்தி யுத்தத்துக்குப் புறப்படுமாறு வேண்டினர். மலர்ந்த முகத்தோடு பகவான் வில்லைப் பெற்றுக் கொண்டு தேவியுடன் இரதத்தில் ஏறி அமர்ந்தார். முனிவர்கள் வேத கோஷங்கள் எழுப்பிக் கொண்டு உடன் வர, இரதம் அசுர பட்டணத்தை நோக்கிப் புறப்பட்டது. கங்கை முதலான புண்ணிய நதிகள் பார்வதி பரமேச்வரருக்குச் சாமரம் வீசினர். தேவர்கள் யுத்தத்துக்கு வருகின்றனர் என்ற செய்தி கேட்டு அசுரர் மூவரும் பெரும் சீற்றம் கொண்டனர். தொடை நடுங்கிப் பதுங்கியிருந்த தேவர்களுக்கு எவ்விதம் தைரியம் வந்தது எனக் கோபித்து எழுந்தனர். அசுரப் படைகள் உடனே திரண்டன. பற்பலவித வாத்தியங்களைக் காது செவிடுபட முழங்கியபடி அசுர வீரர்கள் யுத்தத்துக்கு வந்தனர். அசுர வீரர்களைக் கண்டதும் ஈசன் ஹுங்காரம் செய்து வில்லின் நாணைச் சுண்டினார். அதனால் எழுந்த சப்தம் சகல லோகங்களையும் கிடுகிடுக்கச் செய்தது. காந்தம் இரும்பை ஆகர்ஷிப்பதுபோல, சப்தத்தின் காரணமாக மூன்று புரங்களும் வானிலே ஒன்றாக எழுந்தன. அதைக் கண்ட பிரமன், சர்வேசா, இதுதான் தகுந்த சமயம் என்றார். ஈசன் கலகலவென்று நகைத்து நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து பாய்ந்த தீச்சுடர் முப்புரங்களையும் எரியச் செய்தது. வில்லிலே பூட்டியிருந்த பாணத்தை எய்ய, அது முப்புரங்களையும் அசுரர்களோடு முற்றிலும் நாசமாக்கி விட்டுத் திரும்பியது. அசுரர்கள் அழிவு கண்டு தேவர்கள் பயம் நீங்கியவர்களாய் ஈசனைப் பலவாறு கொண்டாடி, அவர் அருளைப் பிரார்த்தித்தனர். இறைவனும் அவர்கள் பிரார்த்தனையை மகிழ்ச்சியுடன் ஏற்று அனுக்கிரகம் செய்துவிட்டு தேவியுடன் கைலாசம் திரும்பினார்.
12. சுகரை வழி மறித்த சூரியன்
சுகர் பரந்தமானிடம் அளவற்ற பக்தி கொண்டு அவரைத் தியானித்து வந்தார். ஆசிரமத்திலே இருந்து வந்த அவர் இப்பூவுலக வாழ்வை விடுத்து பகவானுடைய சமீபத்தை அடைந்து என்றும் மகிழ்ந்திருக்க விரும்பினார். ஆகவே, தனது தவச் சக்தியின் மூலம் நேராக வானிலே எழுந்தார். உயரச் சென்று கொண்டிருந்த சுகர் சூரிய மண்டலத்தை அடைந்தபோது, மேற்கொண்டு செல்ல முடியாது சூரியன் முனிவரைத் தடுத்து நிறுத்திவிட்டான். முனிசிரேஷ்டரே, தாங்கள் மேற்கொண்டுள்ள முடிவு சரியல்லவே! தங்கள் முன்னோர்கள் இன்னமும் பூலோகத்தில் வாழ்ந்திருக்கத் தாங்கள் மட்டும் எவ்வாறு சாயுஜ்யத்தை அடைய முடியும்? சாஸ்திரப்படி தாங்கள் அதற்கு அருகதையற்றவர் என்று சொல்லலாம் என்றான் சூரியன். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் முனிவருக்குக் கோபம் வந்து விட்டது. நான் அருகதையற்றவன் எனக் கூறினாயே, பாஸ்கரா! எந்த விதத்தில் நான் அருகதையற்றவன் என்று கூற முடியுமா? என்று கேட்டார். சாஸ்திரத்தில் வர்ணாசிரம தருமங்கள் விவரிக்கப்பட்டிருப்பது தங்களுக்குத் தெரியாததல்லவே, மகரிஷே! நான் எடுத்துச் சொல்ல வேண்டுமா? தாங்கள் இன்னமும் கிருகஸ்தாச்ரமத்தை ஏற்கவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். வேதாத்தியயனம் செய்து சாஸ்திரங்களைக் கற்றதன் மூலம் ஞானிகளுக்கும் பகவானுக்கும் சேவை செய்தீர்கள். இனி நீங்கள் மணம் புரிந்துகொண்டு உத்தம குமாரனைப் பெற்று உங்கள் முன்னோர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். உங்களுக்குப் பிற்பாடு, நீங்கள் விட்டுச் செல்லும் நற்கருமங்களைச் செய்து வர புத்திரன் அவசியமல்லவா? அதன் பின்னரே தாங்கள் பிரமஞானியாக முடியும். அதன் முடிவில் தாங்கள் சாயுஜ்யத்தை அடையலாம் என்று தெரிவித்தான் சூரியன்.
முனிவரோ சூரியனுடைய வார்த்தைகளை ஏற்கவில்லை. அவனோடு வாதாடினார். தன் வாதத்துக்குச் சாஸ்திரங்களையே எடுத்துக் காட்டினார். பாஸ்கரா! சகல வேதங்களும் உன்னைப் போற்றுகின்றன. ஒவ்வொரு கர்மாவையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். உனக்குத் தெரியாதது இருக்க முடியாது. நான் சொல்வதைக் கேள். மனிதனின் பிறப்பு எப்படி? கரு உருவில் தாயின் கர்ப்பத்தில் புகுந்த அவன் பத்து மாதங்களில் பூரண வளர்ச்சியுற்று பூவுலகிலே வந்து பிறக்கிறான். காலத்தின் போக்கிலே அவன் வளர்ச்சியுறுகிறான். இப்பூத உடல் அழிவுத்தன்மை உடையது என்பதை உணரும்போது சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வர்ணாஸ்ரம தருமங்கள் பிரகாரம் தன் கர்மாக்களைச் செய்து முடித்து பின்னர் ஞான மார்க்கத்தையும், வைராக்கியத்தையும் கைக்கொள்ளுகிறான். ஞானியாக ஆவதற்கோ, வைராக்கியம் பெறுவதற்கோ ஒருவன் வேதங்களில் சொல்லப்படும் நான்குவித ஆசிரமங்களையும் கடைப்பிடித்து அதற்குத்தன்னை அருகதையுடையவனாக்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அவன் மனம் பக்குவமடைகிறது என்று சொல்வது உண்மைதான். ஆனால் என்னைப்போன்ற முனிவர்களுக்கு அந்த விதி தேவையே இல்லை. வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே இருக்கக்கூடியது என்பதை உணர்ந்த நாங்கள் சம்சார சாகரமான அவ்வாழ்க்கையை ஒதுக்கி விடுகிறோம்... ... அப்போது சூரியன் குறுக்கிட்டு முனிவரைக் கேட்டான். மகரிஷே, தாங்கள் சொல்லுவது விசித்திரமாக இருக்கிறது. பூவுலகிலே பிறக்கும் மானிடனுக்குத்தானே பிரமதேவன் இந்நான்குவித ஆசாரங்களை விதித்திருக்கிறான். தாங்கள் அவை தேவையற்றது எனக் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.
சுகர் அப்போதும் தம் வாதத்தைத் தொடர்ந்தார். ஆதித்தியா! என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்,கேள். ஒரு சமயம் தகப்பனாரிடம் நான் சாஸ்திர பாடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பலவிதமான தர்மங்களை விவரித்துச் சொல்லி வந்தார். அப்போது எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. என் தந்தையிடமே அதைப்பற்றிக் கேட்டேன். தந்தையே, தர்மங்களை நன்கு அறிந்தவன் கூட இந்நான்கு ஆசிரமங்களையும் கடைப்பிடிக்க வேண்டுமா? அவற்றை ஒதுக்கிவிட்டு அவன் ஞான மார்க்கத்தை அடைய முயற்சிக்கலாமல்லவா என்று கேட்டேன். என் தந்தைக்கு நான் கேட்ட கேள்வி பெரு மகிழ்ச்சியைத் தந்தது போலும். குழந்தாய், மிதிலாபதியான ஜனகராஜனிடம் சென்று உன் சந்தேகத்தைக் கேள். அவர் உனக்கு விளக்கிக் கூறுவார் என்றார். அவ்வாறே நானும் ஜனக ராஜனிடம் சென்று என் சந்தேகத்தைக் கூறித் தெளிவுபடுத்துமாறு கேட்டேன். அவர் சொன்னார். நான்குவித ஆசிரமங்களை விதித்திருப்பதே ஒருவன் மனம் பக்குவமடைந்து ஞான மார்க்கத்தை ஏற்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். எவனொருவன் ஆரம்பத்திலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து மனப்பக்குவம் அடைந்துவிடுகிறானோ, அவனுக்கு இந்த ஆசிரமங்கள் தேவையே இல்லை இவ்வாறு ஜனகர் தெரிவித்தார். ஆகவே அவர் வார்த்தையைக் கொண்டு, அழிந்து விடக்கூடிய இச்சம்சார வாழ்க்கையை வெறுத்து ஞான மார்க்கத்தை அடையும் முயற்சியை நான் கைக் கொண்டேன். சுகருடைய வார்த்தைகளைக் கேட்டு சூரியன் கலகல வென்று நகைத்தான். முனிவரே, ஜனக ராஜனுடைய வார்த்தைகளை மேற் கோள்காட்டுகிறீரே. அவர் அந்த விதியைக் கடைப்பிடித்தாரா? அவருக்கும் பிள்ளைகளும் பெண்களும் பிறந்திருக்கின்றனரே? விஷ்ணுவிடமிருந்து பிரமதேவன் உண்டானார். பிரமனிடமிருந்து வசிஷ்டரும், அவரிடமிருந்து சக்தி மகரிஷியும் பிறந்தனர். சக்தியின் குமாரரே வியாசருடைய தந்தையாகிய பராசரர். தாங்கள் வியாசருடைய புத்திரர், பிரம ஞானிகளான தங்கள் மூதாதையர்களாகிய அவர்களே சாஸ்திரங்களுக்கு மாறாக நடந்து கொள்ளாதிருக்கும் போது, தாங்கள் மட்டும் விதிவிலக்கு கோருவது சரியல்ல. உங்களுடைய முன்னோர்கள் இன்னமும் பூலோகத்திலே வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் பூலோகத்தை விட்டுப் போய்விட்டால் அவர்களுக்குச் சேவை செய்ய யார் இருக்கிறார்கள்? ஆகவே தங்கள் சந்ததியாக ஒரு புத்திரனைத் தோற்றுவித்துப் பின்னரே சாயுஜ்யத்தை அடைய எண்ணுவதுதான் ஏற்றதாகும்.
அவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர், எவ்விதத்திலும் சூரியன் தம்மைப்போக அனுமதிக்கமாட்டான் என்பதைக் கண்டார். சிறிது நேரம் யோசித்த அவர், தம்முடைய தபோபலத்தால் மனத்தாலே குமாரனைத் தோற்றுவித்தார். அவனைச் சூரியன் முன்பு நிறுத்தினார். பாஸ்கரா, இதோ உன் கோரிக்கைப்படி எனக்குப்பின் என் மூதாதையர்களுக்குச் சேவை செய்ய ஒரு குமாரனைத் தோற்றுவித்தாகி விட்டது. இனி உனக்கு என்ன ஆ÷க்ஷபமிருக்கிறது? என்று கேட்டார். முனிவரின் அறிவாற்றலையும் அவரது யோக சக்தியையும் கண்ட ஆதித்தியன் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டான். சுகரால் தோற்றுவிக்கப்பட்ட குமாரன் தந்தையை வணங்கி, தந்தையே, தாங்கள் என்னைத் தோற்றுவித்ததன் நோக்கம் என்ன? எனக்குக் காத்திருக்கும் பணிகள் எவையெவை? என்று கேட்டான். குழந்தாய், பூலோகத்துக்குச் சென்று காசியிலே கங்கைக் கரையில் இருக்கும் என் தந்தைக்குப் பணிவிடை செய்து அவர் ஆசிபெற்று வாழ்ந்து வா என்றார் சுகர். சாயாசுகரும் தந்தையைப் பலமுறை வணங்கி அவருடைய ஆசிபெற்றுக் காசிக்குப் புறப்பட்டுச் சென்றான். குமாரன் புறப்பட்டுச் சென்றதும், சுகர் மறுபடியும் சூரியனைப் பார்த்து மேலுலகம் செல்ல அனுமதிக்குமாறு கேட்டார். முனிசிரேஷ்டரே, தங்கள் அறிவாற்றல் என்னைத் திகைக்க வைத்துவிட்டது. அதை மேலும் கொஞ்சம் கேட்டு ஆனந்திக்க விரும்புகிறேன். என் உருவில் அடங்கியுள்ள தத்துவத்தைக் கூறுங்கள் என்றான் சூரியன். சுகர் ஆதித்தியனை வணங்கி, பாஸ்கரா, உன் பெருமையை அளவிட்டுக் கூறமுடியுமா? அதற்கு நான் அருகதை உள்ளவனா? ஏதோ எனக்கு எட்டிய வரையில் சொல்கிறேன் என்று கூறலானார்.
பரப்பிரும்மஸ்வருபியான நாராயணனிடமிருந்து ஓம் என்ற பிரணவம் உண்டாயிற்று. அதனின்று ஆகாசம் தோன்றியது. ஆகாசத்திலிருந்து வாயு தோன்றியது. வாயுவும் ஆகாசமும் ஒன்றோடு ஒன்று கலந்தபோது அதி உன்னதமான ஒளிக்கிரணம் உண்டாயிற்று. அதனின்று அக்கினி தோன்றியது. உலகமெங்கும் வியாபித்த அக்கினி எங்கும் ஜொலித்தது. அதன் ஒளிக்கிரணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு சக்தி தோன்றியது. அதன் காரணமாகப் பயங்கரப் பிரளயம் ஏற்பட்டது. பகவான் எங்கும் பரவி நின்ற கடலையே தம்முடைய வாசஸ்தலமாகக் கொண்டார். காலக்கிரமத்தில் பிரளய வெள்ளத்திலிருந்து தங்க நிற ஒளியைக் கொண்ட கிரணம் தோன்றியது. இது அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தது. அதுவே சூரியனாயிற்று. அதன் கிரணங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தி கொண்டிருந்தன. உலகிலே உள்ள அசையும் பொருள் அசையாப் பொருள் அனைத்துக்கும் அது மிகவும் அத்தியாவசியமானது. அதன் சக்தியால் தான் மனிதன் உயிர் வாழ்கிறான். அவன் உடலிலே புகுந்த சக்தி பலவகைகளிலும் உருமாறி இரத்தமாக அவன் உடலில் ஓடுகிறது. அந்தச் சக்தியே கருவாகப் பெண்ணின் கர்ப்பத்தில் புகுந்து வளர்ச்சி அடைந்து உருப்பெற்று மீண்டும் பிறக்கிறது. உலகிலே ஜனித்த மனிதன் பூர்வ ஜன்மத்தில் அவன் செய்த கர்மங்களுக்கேற்ப சுக துக்கங்களை அனுபவிக்கிறான். அவனுடைய அந்திமக் காலத்தில் அந்தச் சக்தியானது அவனுடைய உடலை விட்டுப் புறப்பட்டு மறுபடியும் ஒளிக் கிரணங்களின் வழியாக சூரியனையே அடைகிறது. சுகர் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் சூரியன் பெரு மகிழ்ச்சிக்குள்ளானான். முனிசிரேஷ்டரே, தங்களை நான் எவ்வாறு புகழ்வது என்பது தெரியவில்லை. தங்கள் முயற்சி பரிபூரண வெற்றி பெற்றது. தாங்கள் மேலே செல்லலாம் என்று பணிந்து வழி விட்டான்.
13. பழம் எனப் பாய்ந்த பாலன்
அஞ்சனா தேவியின் புத்திரன் ஆஞ்சநேயன். மகேசுவரன் திருவருளால் வாயுதேவன் மூலம் பிறந்தவன். வாயு புத்திரன் என்றும் அவனை அழைப்பார்கள். குழந்தை ஆஞ்சநேயன் தொட்டிலே படுத்துக் கிடந்தான். அவன் தாயார் அப்போது தான் அதில் கிடத்தி விட்டுச் சென்றாள். தனியாகக் கிடக்கும் குழந்தை சும்மா படுத்திருக்குமா? பக்கவாட்டிலே திரும்பியது. கிழக்கே வானிலே தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்த சூரியனைக் கண்டான் குழந்தை. அதை ஏதோ பழம் என எண்ணி விட்டான். அந்தப் பழத்தைப் பறித்து வர அடுத்த க்ஷணம் தொட்டிலிலிருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்தான். அன்று அமாவாசை தினம். சூரியனைப் பீடிக்க ராகு வந்து கொண்டிருந்தான். கன வேகமாகத் தன்னைத் தாண்டி சூரியனை நோக்கிப் பாய்ந்து செல்லும் குழந்தையைக் கண்டதும் அவன் திடுக்கிட்டு இந்திரனைத் தியானித்து உதவிக்கு அழைத்தான். ஆஞ்சநேயனோ எதையும் லட்சியம் செய்யாமல் சூரியனை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். தேவர்கள் தவித்தனர். அவன் போக்கை மாற்ற வேண்டுமே? இந்திரன் வஜ்ஜிராயுதத்தை ஏவ, மிக வேகமாக விரைந்து சென்று ஆஞ்சனேயனுடைய தாடையில் தாக்கியது. அம்மா...! என்று அலறிக்கொண்டே பூமியில் வந்து விழுந்த ஆஞ்சநேயன் மூர்ச்சித்துக் கிடந்தான். அலறிக் கொண்டு ஓடி வந்த அஞ்சனாதேவி குமாரன் இறந்து விட்டான் என்றே நினைத்து விட்டாள். மூர்ச்சையுற்ற அவன் உடலைத் தன் மடிமீது எடுத்துக் கிடத்திக் கொண்டு கதறினாள். நான் எத்தனை பாடுபட்டு இந்தப்பிள்ளையை அடைந்தேன் என்பதை நீங்கள் உணர்வீர்களா? கணப் பொழுதில் தன் குமாரனைக் கொன்று விட்டீர்களே. இது நியாயம் தானா? என்று தேவர்களை நோக்கிக் கண்ணீர் விட்டுக் கதறினாள்.
வாயுதேவன் குமாரனுக்கு நேர்ந்த விபத்தைக் கண்டு பெரிதும் விசனமுற்றான். குழந்தையான ஆஞ்சநேயனை இந்திரன் கொஞ்சமும் இரக்கமின்றி அடித்து வீழ்த்திவிட்டானே என்று வருந்தினான். அந்தச் சோகத்தில் அவன் அசையாது தன்னை ஸ்தம்பனம் செய்து கொண்டு விட்டான். வாயுதேவன் அசைந்தாலல்லவா உலகம் பிழைக்கும்? மக்கள் மூச்சுவிட முடியாது திணறினார்கள். முனிவர்கள் பிரம தேவனைத் துதித்தனர். பிரமன், விஷ்ணு, ருத்திரன் மூவரும் அங்கே ஓடி வந்தனர். பிரமன் அஞ்சனையின் முன்பு வந்து, பெண்ணே, வருந்தாதே. உன் குமாரன் இறக்கவில்லை. அவனுக்கு எதுவும் அபாயகரமானதாக நேர்ந்து விடவில்லை. மூர்ச்சையடைந்திருக்கிறான். விரைவில் எழுந்துவிடுவான். இறைவன் திருவருளால் பிறந்திருக்கும் உன் குமாரனுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்து விடாது. சூரியனை அவன் நெருங்குவதால் எத்தனையோ இன்னல்கள் நிகழக்கூடும் என்றே இந்திரன் அவன் முயற்சியைத் தடுத்திருக்கிறான். ஆஞ்சநேயனுக்கு மரணம் என்பதே கிடையாது. ஸ்ரீமன் நாராயணனுக்குப் பரம பக்தனாகி அழியாப் புகழை அடையப் போகிறான். எந்த வித அஸ்திரங்களாலும் அவனுக்கு ஊறு நேரிடாது என நான் வரம் தருகிறேன் என்றார். விஷ்ணுவும் ருத்திரனும் பிரமனுடைய வார்த்தையை ஆமோதித்தனர். வாயுதேவன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சலன நிலையை அடைந்தான். உலகத்தார் நிம்மதி அடைந்தனர். ஆஞ்சநேயன் உறக்கத்திலிருந்து எழுவது போல எழுந்தான். தேவர்கள் அவனைப் பலவாறு கொண்டாடித் தங்கள் ஆசிகளையும் வழங்கினர். அஞ்சனாதேவி அளவற்ற மகிழ்ச்சியோடு குமாரனை அணைத்து உச்சி முகர்ந்து மகிழ்ந்தாள்.
14. குளக் கரையிலே பேரழகி
அரக்கரச்சு என்ற வானர ராஜன் இருந்தான். அவன் ஒரு சமயம் தனிமையில் இமாலய சாரலில் சஞ்சரித்து வந்தான். அவ்வாறு வரும்போது ஓரிடத்தில் அழகிய தடாகம் ஒன்றைக் கண்டான். அதன் தெளிந்த நீரும் சூழ்நிலையும் வானர ராஜனை அதில் இறங்கி ஆனந்தமாக நீராடத் தூண்டியது. அவனும் தடாகத்திலே இறங்கி மனம் களிக்க நீராடினான். நீராடி முடிந்ததும் கரையேறிய வானர ராஜனுக்கு ஒரு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பிரதேசத்தில் சாபம் ஒன்று நிலவி வருவதை அவன் அறிந்திருக்கவில்லை. அத்தடாகத்தில் இறங்கி நீராடும் ஆண்மகன் பெண்வடிவை அடையட்டும் என ஒரு சாபம் விதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாபம் காரணமாக அரக்கரச்சு பெண்ணாக மாறியிருந்தான். எதிர்பாராத விதமாகத் தனக்கு ஏற்பட்ட மாறுதலைக் கண்டு திடுக்கிட்டான். வானர ராஜன், அவன் என்ன செய்வான்? குளக்கரையில் அமர்ந்து ஓ வென்று கதறி அழுதான். அந்தப் பெரும் துக்கத்திலிருந்து தன்னை மீட்டு ரக்ஷிக்குமாறு தெய்வங்களுடைய பெயரை எல்லாம் சொல்லி அழைத்துக் கதறினான். அப்போது அவ்வழியே சந்திரன் வந்தான். குளக்கரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பேரழகியை கண்டதும் அருகில் வந்து அவன் படுந்துயரத்துக்கான காரணத்தைக் கேட்டான். அரக்கரச்சு தனக்கு நேர்ந்த பால்மாற்றத்தைத் தெரிவித்து அழுதான். சந்திரன் பெண் வடிவிலிருந்த அவனைத் தேற்றிப் பலவாறு ஆறுதல்கள் கூறினான். இருப்பினும் அந்த அழகிய பெண் வடிவம் சந்திரனுடைய மனத்தைப் பேதலிக்கச் செய்து விட்டது. ஆசையை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் காரணமாக அவ்விருவருக்கும் புத்திரனாக வாலி தோன்றினான். சந்திரன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சூரியன் அங்கே வந்தான். பெண் வடிவிலிருக்கும் அரக்கரச்சுவைக் கண்டான். ஸ்ரீமந் நாராயணன் இராவண வதம் செய்ய பூவுலகிலே தசரதருக்குப் புத்திரராக அவதரிக்கப் போகிறார் என்றும், தேவர்களும் தங்கள் அம்சங்களாக வானரராகப் பூமியில் தோன்றி இராவண வதத்தில் ஸ்ரீராமனுக்கு உதவ வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. தன் அம்சமாகப் புத்திரனைத் தோற்றுவிக்க அந்தப் பேரழகியே ஏற்றவள் என்று அவளோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்தான். சூரியனுடைய அம்சமாக சுக்கிரீவன் அவர்களுக்குப் புத்திரனாகத் தோன்றினான். அரக்கரச்சுவுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கேட்ட சூரியன் மனம் வருந்தி நான்முகனைக் குறித்துத் தவம் செய்து அவர் அருளால் மீண்டும் ஆண்வடிவைப் பெறுமாறு உபதேசித்து விட்டுச் சென்றான். அவ்விதமே வானர ராஜன் அரக்கரச்சு பெண் வடிவோடு நான்முகனைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். அவன் தவத்துக்கு மெச்சி பிரமனும் தரிசனம் தந்து அவன் பெண் வடிவை ஆண் வடிவமாக மாற்றி அருளினார். அதன் பின்னர் அவன் தன் குமாரர்கள் இருவரோடும் கிஷ்கிந்தை திரும்பி மகிழ்ந்து இருந்து வந்தான். தனக்கு அந்திமக்காலம் நெருங்கியதும் வாலியை வானர ராஜனாக முடி சூட்டினான் அரக்கரச்சு.
15. சர்ப்பராஜன் கண்ட சூரியலோகம்
ஒரு சமயம் இந்திரனுடைய சபைக்கு நாரதர் வந்தார். தேவராஜன் அவரை வரவேற்று அர்க்கியம் முதலான கொடுத்துப் பூஜித்தான். பின்னர் அவருடன் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் மகரிஷியைக் பார்த்துக் கேட்டான். மகரிஷே, தாங்கள் பூலோகம் சென்றுவிட்டு வருகிறீர்களே. அங்கு ஏதாகிலும் அதிசயம் கண்டீர்களா? அவ்விதம் ஏதாகிலும் அற்புதத்தைப் பார்த்திருந்தால் எனக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டான் இந்திரன். தேவராஜா, கங்கா தீரத்திலே பத்மநகரம் என்றொரு பட்டணம் இருக்கிறது. அங்கே நான் ஒரு அற்புதத்தைக் கண்டேன். அதைச் சொல்கிறேன், கேள் என்று கூறினார் நாரதர். பத்மநகரத்தில் பிருகு என்ற பெயருடைய அந்தணன் ஒருவன் இருந்தான். நியம நிஷ்டைகளில் அவன் கொஞ்சமும் தவறாது நடந்து வந்தான். அவன் அனேக தரும சாஸ்திரங்களைப் படித்தவன். ஒரு குறைவுமின்றி மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்திவந்த அவனை எல்லோரும் கொண்டாடினார்கள். ஒருசமயம் அவன் இருப்பிடத்துக்கு சவுனகர் என்ற முனிவர் வந்தார். பிருகு சவுனகரை சந்தோஷத்தோடு வரவேற்று கால் அலம்பி மலர் கொண்டு பூஜித்துக் கவுரவித்தான். அவன் பூஜையில் மகிழ்ந்த முனிவர் அவர் வேண்டுகோளின்படி அன்றைய தினம் அவன் கிருகத்திலே தங்கி போசனம் செய்தார். சாப்பாட்டிற்குப் பின்னர் பிருகு முனிவரை ஒரு கட்டிலில் படுக்கச் சொல்லி அருகில் நின்று விசிறியால் விசிறிக் கொண்டிருந்தான். அப்போது அவன் முனிவரைப் பார்த்து ஒரு விஷயம் கேட்டான். ஹே முனிசிரேஷ்டரே, அடியேன் எத்தனையோ தர்ம சாஸ்திரங்களைப் படித்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தருமத்தை விசேஷமாக எடுத்துக் கூறுகின்றன. இந்தச் சாஸ்திரங்கள் கூறும் தருமங்களில் சிறந்தது எது? அதை அறிய விரும்புகிறேன். இவ்வாறு கேட்ட அந்தணனைப் பார்த்து, முனிவர் கனிவோடு தெரிவித்தார்.
ஹே விப்ரா, ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றனர். சிலர் சத்தியமே மேலான தர்மம் எனச் சொல்கிறார்கள். வேறு சிலர் பிறரிடம் தயை காட்டுவதே சிறந்ததாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் உபசரித்தலுக்கு ஒப்பானது கிடையாது எனத் தெரிவிக்கின்றனர். இந்தவாறாக ஒவ்வொருவர் ஒவ்வொரு தருமத்தைச் சிறந்ததாக உரைக்கின்றனர். ஆகவே, என்னால் இந்தத் தர்மம்தான் மேலானது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இருப்பினும் ஒரு விஷயம் சொல்கிறேன். நைமிசாரண்ணிய வனத்திற்குப் பக்கத்தில் கோமதி நதி ஓடுகிறது. அதன் கரையிலே பத்மதடாகம் என்றொரு பட்டணம் இருக்கிறது. அப்பட்டணத்திலே பத்மன் என்ற சர்ப்பராஜன் ஆட்சிசெய்து வருகிறான். அவன் மகா நீதிவான். சகல சாஸ்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவன். மகத்தான முனிவர்களையும் பூஜித்து அனுகிரகம் பெற்றவன். அவன் பெருமை சாதாரண வார்த்தைகளுக்குட்பட்டதல்ல. எத்தனையோ மகான்கள் அவனிடமிருந்து தர்மத்தை அறிந்திருக்கிறார்கள். சர்ப்பரூபத்தில் இருக்கிறானே எனச் சிந்திக்க வேண்டாம். அவனிடம் சென்று கேட்பாயானால் உன் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பான். இவ்வாறு சவுனகர் கூறினார். முனிவர் சொன்னபடியே பிருகு சர்ப்ப ராஜனைப் பார்க்கப் புறப்பட்டான். கோமதி நதிக்கரையிலிருக்கும் பத்ம தடாகம் என்ற ஊரை அடைந்தான். அங்கே பத்மனுடைய இருப்பிடத்தை விசாரித்துக் கொண்டு சென்றான். பிருகு சென்ற சமயம் பத்மன் அரண்மனையில் இல்லை. அவன் மனைவியான தருமசீலி என்பவள் பிருகுவை வரவேற்று உபசரித்து உள்ளே அழைத்துச் சென்று ஆசனம் கொடுத்து, வந்த காரியம் என்னவென வினவினாள். அம்மணி, நான் ஓர் அந்தணன். கங்காதீரத்திலுள்ள பத்ம நகரத்தில் வசிப்பவன். தர்ம சாஸ்திரத்திலே எனக்குச் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை உங்கள் கணவரிடத்தில் தீர்த்துக் கொண்டு போகலாமெனப் புறப்பட்டு வந்தேன் என்று பதிலளித்தான் பிருகு. சுவாமி, தாங்கள் வந்த காரியம் நிறைவேறி சந்தோஷத்தோடு ஊர் திரும்பலாம். தற்போது என் கணவர் ஊரிலில்லை. அவருடைய நண்பரான சூரிய பகவானைப் பார்த்து வரச் சென்றிருக்கிறார். அவர் வந்துசேர இன்னும் எட்டு நாட்கள் பிடிக்கும் என்றாள் தருமசீலி.
ஓ, அப்படியா? மிகவும் சந்தோஷம், அம்மணி. உங்கள் கணவர் திரும்பட்டும். அப்புறம் வந்து நான் என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறேன். அதுவரை நான் ஊருக்கு வெளியே இருக்கிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் பிருகு. ஊருக்கு வெளியே பத்மராஜன் வரும் வழியில் தங்கி அவன் வரவுக்காகக் காத்திருந்தான் பிருகு. அந்தச் சமயத்தில் அவன் ஆகாரம் ஏதும் உட்கொள்ளாது உபவாசம் இருந்து வந்தான். அதைப்பற்றிக் கேள்விப்பட்ட தரும சீலி மனம் வருந்தி அவன் இருப்பிடம் வந்தாள். அவன் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து கண்களில் நீர் வழியக் கூறினாள். சுவாமி, தாங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள்? எங்கள் இல்லற தர்மத்துக்குப் பங்கம் வந்துவிடக் காரணமாகி விட்டதே. தாங்கள் இவ்வாறு உபவாசம் இருக்கலாமா? என் கிருகத்தில் உங்களுக்கு உபசாரம் செய்வதில் குறை இருக்கலாம் என்று வந்து விட்டீர்களா? சுவாமி, என் மீது தயை கூர்ந்து என்னுடன் புறப்பட்டு வர வேண்டும். இல்லையேல் அதிதி உபசாரத்தில் நான் அலட்சியமாக இருந்து விட்டதாக என் கணவர் கோபம் கொள்வார். அரண்மனையில் இருப்பதற்குத் தங்களுக்கு விருப்பமில்லாவிடில் இங்கேயே தங்கி இருங்கள். நான் தினமும் தங்களுக்குத் தேவையான உணவை எடுத்து வந்து இங்கேயே பரிமாறுகிறேன் என்று மன்றாடினாள் அந்த உத்தமி. பிருகு, அரசியின் உபசரணையில் ஆச்சரியம் கொண்டு, அம்மா உத்தமியே, உன் உபசரிப்பிலே நான் எள்ளளவும் குறை காணவில்லை. தருமநெறிக்கு மாறாகவும் நீ நடக்கவில்லை. உன் கணவர் இல்லாதபோது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறே நீ நடந்து கொண்டிருக்கிறாய். உன் கணவரைச் சந்தித்துப் பேச வந்திருப்பதாக நான் தெரிவித்தபோது அவர் வருவதற்கு எட்டு நாட்கள் ஆகுமென்று கூறினாய். அப்போதே உன் கணவர் வரும்வரை நான் உபவாசமிருப்பது என்று சங்கல்பித்துக் கொண்டேன். உன்மீது கோபப்பட்டோ உன் உபசரிப்பிலே குறை கண்டோ நான் உபவாசம் இருக்கவில்லை. நானே விரும்பி ஏற்றுக் கொண்டது இது. ஆகவே, என்னை வற்புறுத்த வேண்டாம். எட்டு நாட்கள் பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். உன் கணவர் வர மேலும் தாமதமானால் ஒன்பதாம் நாள் முதல் நீ அளிக்கும் அன்னத்தை நான் தடை சொல்லாது ஏற்பேன். என் விஷயத்தில் உன் தருமநெறி மாறுபடவேயில்லை. மகிழ்ச்சியோடு திரும்பிச் செல் என்றான்.
அந்தணனை வற்புறுத்த முடியாது என்பதை உணர்ந்த தருமசீலி அரண்மனை திரும்பினாள். பிருகுவும் எட்டு நாட்களுக்கு உபவாசமிருந்து சர்ப்பராஜன் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். எட்டு நாட்கள் சென்றன. சர்ப்ப ராஜன் திரும்பி வந்தான். தருமசீலி கணவனை எதிர்கொண்டு அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர்த்தி அருந்துவதற்குக் குளிர்ந்த பானம் கொடுத்து சிரம பரிகாரம் செய்து கொள்ளச் செய்தாள். அவன் பக்கத்திலேயே நின்று சாமரம் கொண்டு விசிறினாள். பிரியே, நான் இல்லாத போது ஏதாகிலும் விசேஷம் நிகழ்ந்ததா? யாராவது அதிதி வந்தார்களா? அவர்களுக்கு ஒரு குறைவுமில்லாமல் பார்த்துக் கொண்டாயா? என்று விசாரித்தான் பத்மன். சுவாமி, பிருகு என்னும் பெயரையுடைய அந்தணர் ஒருவர் வந்தார். கங்கைக் கரையிலுள்ள பத்ம நகரத்தில் வசிப்பவராம். தர்ம சாஸ்திரத்திலே ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் அதைத் தங்களிடம் தெளிவுபடுத்திக் கொண்டு செல்லலாம் என வந்திருப்பதாகவும் கூறினார். நீங்கள் ஊரில் இல்லை என்பதை அறிந்ததும் திரும்பி வர எவ்வளவு நாட்கள் ஆகுமென்று கேட்டார். எட்டு நாட்கள் ஆகலாம் எனப் பதில் அளித்தேன். நீங்கள் திரும்பி வந்த பிறகு வருவதாகச் சொல்லி விட்டு அவர் புறப்பட்டுச் சென்று ஊருக்கு வெளியே ஓரிடத்தில் தங்கியிருக்கிறார். தாங்கள் வரும் வரை உபவாசமிருப்பதாகச் சங்கல்பித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி உணவு ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். நான் எவ்வளவோ மன்றாடியும் அவர் இணங்க மறுத்து விட்டார் என்றாள் தருமசீலி. அதைக் கேட்டதும் பத்மன் பரபரப்போடு எழுந்திருந்தான். ஆஹா பிரியே, அந்த உத்தமர் எங்கே இருக்கிறார்? பட்டினியோடு கிடக்கும் அவரைப் பார்த்த பின்னரே மற்ற காரியங்களைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லி அவளோடு புறப்பட்டான். மனைவியுடன் சென்ற பத்மன் பிருகு தங்கியிருக்கும் இடத்தை அடைந்து அவனை நமஸ்கரித்தான். உத்தமரே, பத்மன் வந்துவிட்டேன். என்னைப் பார்க்கும் வரை உபவாசம் இருப்பதாகச் சங்கல்பித்துக் கொண்டது கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். என் மனம் சொல்லொணா வேதனைப்படுகிறது. சுவாமி, தாங்கள் என்னைப் பார்க்க வந்த காரணம் என்ன? அதைச் சொல்லுங்கள். அதை முதலில் கவனித்த பிறகே மற்றக் காரியங்களை கவனிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன் என்று பணிவோடு கூறினான். பத்மனைக் கண்டதும் பிருகு அளவற்ற ஆனந்தம் கொண்டான். தர்மத்தில் சிறந்து விளங்கும் ஹே பத்மராஜன், நான் வந்த காரியத்தைப் பின்னர் கவனிப்போம். முதலில் இதைச் சொல்லுங்கள். தாங்கள் ஆதித்தியனைப் பார்த்து வரப் போயிருப்பதாக அரசியார் கூறினார்கள். சூரிய மண்டலத்திலே என்ன பார்த்தீர்கள்? அங்கு நீங்கள் சென்ற சமயம் என்னென்ன நிகழ்ந்தன? அவற்றை அறிய விரும்புகிறேன் அதைக் கூறுங்கள் என்றான் பிருகு. அதைக் கேட்ட பத்மன் பரவசமடைந்தவனாய் இரு கரங்களையும் கூப்பி மனத்திலே பகவானைத் தியானித்தான். பின்னர் கண்களில் ஆனந்த பாஷபம் பெருக சொல்லத் தொடங்கினான்.
சுவாமி, அந்தத் திவ்விய காட்சியை எவ்வாறு எடுத்துரைப்பேன்? மங்கல ஒலிகள் ஒரு பக்கம் முழங்குகின்றன. மற்றொரு பக்கம் வேத கோஷங்கள் மனத்தைப் பரவசப்படுத்துகின்றன. அப்சரஸ் பெண்கள் கண்ணுக்கினிய நர்த்தனம் செய்கிறார்கள். நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு பக்கம் சூரிய பகவானைத் தோத்திரங்களால் மகிழ்விக்கிறார்கள். ஆயிரம் கிரணங்களோடு ஜகஜ்ஜோதியாய் சாயா, சுவர்ச்சலா தேவிகளுடன் சூரியபகவான் நவரத்தின சிங்காசனத்தில் கொலு வீற்றிருக்கிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ஒன்றைச் சக்கரத்தேரிலே அவர் ஏறி அருணன் சாரத்தியம் செய்ய மேரு பர்வதத்தைப் பிரதட்சிணம் செய்து வந்து இப்பூமண்டலத்திலுள்ளோருடைய வாழ்நாளை அளிக்கிறார். அவருடைய கிருபையால்தான் மழை பெய்கிறது; பயிர்கள் விளைகின்றன. வருஷம், மாதம், வாரம், திதி. நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகிய இவை அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன. மும்மூர்த்திகளும் அப்பெருமானுடைய ஒளிப்பிரவாகத்தில் உட்கலந்திருக்கிறார்கள். இந்தவாறாகச் சூரிய பகவான் கொலு வீற்றிருக்கையில் ஒரு மகாபுருஷன் அங்கு வந்தான். அவன் பிரகாசம் தேவர்களுடைய பிரகாசத்தையும் மங்கச் செய்தது. சபையினுள் நுழைந்த அந்த மகாபுருஷன் சூரியனைச் சமீபித்து வணங்கி தோத்திரங்களால் துதித்தான். நாங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தப் புண்ணியவான் ஜோதியாகி சூரியனுடைய மேனியில் கலந்து மறைந்து போனான். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆதித்தனை நெருங்கி, மகாபுருஷா, இந்த அதிசயத்தை என்னவென்று உரைப்பேன்? இப்போது தங்கள் ஜோதியில் கலந்த இந்த உத்தமப் புருஷன் யார்? தெரிவிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தேன். சூரியனும் என்மீது கருணை கொண்டவராய்ச் சொல்லத் தொடங்கினார்.
பத்மா, இப்போது என்னுடன் கலந்த புண்ணிய புருஷன் பூலோகத்திலே ஓர் அந்தணனாக இருந்தவன். தரும நெறிக்குப் புறம்பாக நடக்காதவன். எந்தக் கர்மாவையும் பலனை உத்தேசிக்காது செய்து வந்தவன். அதுதான் உலகிலே சிறந்த தருமமாகும். பயனை உத்தேசிக்காது கர்மாக்களைச் செய்து வந்ததால் பூலோக வாழ்வு முடிந்ததும் என்னை வந்து அடைந்தான். இதைவிட உத்தம லோகம் அவனுக்கு இல்லை. தரும ஆசையுடனும் பற்றுதலுடனும் செய்யப்படும் தருமங்கள் பிறவித் துன்பத்துக்குக் காரணமானவை. இவ்வாறு சூரியன் எடுத்துச் சொன்னார். இப்போது நினைத்தாலும் என் மனக்கண்ணிலே அந்த அற்புதக் காட்சி தெளிவாகத் தெரிகிறது. பத்மராஜன் சூரிய லோகத்தில் தான் கண்ட அற்புதக் காட்சியை விவரித்தபோது பிருகுவின் மனம் தெளிவடைந்தது. எந்தச் சந்தேகத்தை பத்மராஜனிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டுமென்று வந்தானோ அந்தச் சந்தேகம் தானே தெளிவாகிவிட்டது. பிருகு பத்மராஜனை நமஸ்கரித்தான். ஹே ராஜன், எத்தனையோ தருமங்கள் இருந்த போதிலும் உத்தமமான தருமம் எது என்பதை அறிய விரும்பினேன். சவுனக முனிவர் என் இல்லத்திற்கு வந்தபோது அவரிடம் கேட்டேன். அவர் தங்களிடம் சென்று என் சந்தேகத்தைக் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு சொன்னார். அதற்காகவே இங்கு வந்தேன். தங்களைக் கேட்காமலேயே என் சந்தேகம் தீர்ந்து விட்டது. பிரதிபலனைக் கோராது செய்யும் எந்த தருமமும் சிறந்ததே என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் புறப்பட்டுச் செல்ல அனுமதி தரவேண்டும் என்று பிரார்த்தித்தான். ஹே பிராமணோத்தமா, இத்தனை நாட்களாக உபவாசம் இருந்தீர்கள். பட்டினியோடு தாங்கள் திரும்பிச் செல்ல நான் எவ்வாறு அனுமதி கொடுப்பேன்? என் கிருகத்துக்கு வந்துவிட்டு எந்த அதிதியும் பட்டினியோடு திரும்பலாகாது. அரண்மனை வந்து என்னோடு தங்கியிருந்து சாப்பிட்ட பின்னரே ஊர் திரும்ப வேண்டும் என்று வேண்டினான் சர்ப்பராஜன். பிருகுவும் அந்தக் கோரிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்று அவனோடு அரண்மனைக்குச் சென்றான். அங்கே தருமசீலியும் பத்மனும் பிருகுவைப் பெரிதும் உபசாரத்தால் திளைக்க வைத்தார்கள். அறுசுவை உணவு அளித்தார்கள். சாமரம் கொண்டு வீசி களைப்பாறச் செய்தனர். பிருகு விடை பெற்றுப் புறப்பட்ட போது இருவரும் அவனை அரண்மனை வாயில்வரை கொண்டு வந்து வழிவிட்டுச் சென்றனர். பத்ம தடாகத்திலிருந்து புறப்பட்ட பிருகு நேராக சவுனகருடைய ஆசிரமத்தை அடைந்தான். அவரை நமஸ்கரித்து பத்ம தடாகத்திலே நிகழ்ந்ததை எடுத்துச் சொல்லி தன்னுடைய சந்தேகம் தெளிவாகி விட்டதையும் கூறினான். முனிவர் அவனைப் பாராட்டி ஆசிகள் பல கூறி அனுப்பி வைத்தார். பிருகுவின் விருத்தாந்தத்தைக் கூறிய நாரதர் இந்திரா, இப்போது கேட்டாயா, கோமதி நதி தீரத்திலே நான் கண்ட அற்புதத்தை ! என்றார். இந்திரன் மேனி சிலிர்க்க, மகரிஷே தாங்கள் கூறியதைக் கேட்கும்போது என் தேகம் புளகாங்கிதம் அடைகிறது! என்று பாராட்டினான்.
16. காகவாகனனுடைய கனிந்த பார்வை
அளவற்ற பராக்கிரமங்களைப் பெற்ற இராவணன் தேவர்களைக் கதற அடித்து, அவன் விரும்பியவாறு அவன் இட்ட வேலைகளைச் செய்யுமாறு கொடுமைப்படுத்தினான். இராவணனுடைய கொடுமைகளைத் தாங்கமாட்டாது தேவர்கள் அவனுடைய உத்தரவுகளுக்குப் பணிந்து நடந்து வந்தனர். நவக்கிரகங்களும் இராவணன் உத்தரவுகளுக்குப் பணிந்து நடந்தனர். வருணன் தன் விருப்பம்போல் மழை பெய்ய முடியாது. இராவணன் எப்போது செல்கிறானோ அப்போதுதான் மழை பெய்யலாம். அதேபோல வாயுவும் இராவணன் விருப்பு வெறுப்புக்கேற்பத்தான் வீச முடியும். சூரியன் கொஞ்சமும் உக்கிரமாகக் காய முடியாது. மற்ற கிரகங்களும் இராவணன் உத்தரவுகளுக்கு உட்பட்டே நடந்து வந்தனர். அதுமட்டுமல்ல. தினமும் சபையிலே இராவணன் வந்து சிங்காதனத்திலே அமரும்போது நவக்கிரகங்கள் அவன் சிங்காதனத்துக்கு ஒன்பது படிகளாகப் படுத்திருக்க வேண்டும். அவர்கள் முதுகிலே கால் வைத்து ஏறிச் சென்றே இராவணன் ஆசனத்தில் அமருவான். அந்தக் கொடுமையை எதிர்க்கவும் சக்தியின்றி இந்திரன் முதலானோர் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தனர். நாரத முனிவரும் அந்தக் கொடுமையைக் கண்டு மனம் வருந்தினார். இராவணனுடைய அக்கிரமங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் எவ்வாறு அதை நிறைவேற்றுவது? இராவணன் செய்த தவங்களும் தருமங்களும் அவன் பெற்ற அளவற்ற வரங்களும் அவனுக்கு எவ்விதத் தீங்கும் வராது காத்து வந்தன.
வெகுகாலம் யோசித்து நாரதர் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். அடுத்த முறை இராவணனைக் காண அவன் சபைக்குச் செல்லும்போது அத்திட்டத்தை நிறைவேற்றுவது எனத் தீர்மானித்தார். இராவணனுக்குச் சந்தேகம் ஏற்படாது காரியத்தை முடிக்க வேண்டுமே! அன்றையத் தினம் நாரதர் இராவணனுடைய சபைக்கு வந்தார். இராவணன் முனிவரை வரவேற்று உபசரித்து ஆசனம் கொடுத்துக் கவுரவித்தான். நாரதர் எதையோ கூர்ந்து பார்ப்பதுபோல் இராவணனுடைய சிங்காதனத்தின் படிகளைப் பார்த்தார். மகரிஷே, என்ன பார்க்கிறீர்கள்? என்று கேட்டான் இலங்காதிபன். இந்தப் படிகளில் படுத்திருப்பது.. ..? என்று இழுத்தார் நாரதர். ஏன்... நவகிரகங்களைத் தான் படிகளில் படுக்க வைத்திருக்கிறேன். என் முன்னிலையில் அவர்களுக்கு ஏற்ற இடம் அதுதான். எத்தனை துணிவிருந்தால் அவர்கள் ஆரம்பத்தில் என் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாது என்னையே எதிர்த்திருப்பார்கள்? என்று பெருமையுடன் கூறினான் இராவணன். நல்ல தண்டனை, இராவணா! இது வேண்டியது தான். நீ யார் என்பதை உணராது உன்னிடம் யுத்தத்துக்கு வருவதென்றால் சும்மா விடுவதா? உன் வமிசம் என்ன? புலஸ்தியர் உன் பாட்டானாரல்லவா? அதைத் தெரிந்தும் உன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்காமல் எதிர்ப்பதென்றால் எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்? நல்ல காரியம் தான் செய்தாய்? தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இதை மறுக்க முடியாதல்லவா? இருந்த போதிலும்.. ... என்று சற்று நிறுத்தினார் நாரதர். என்ன, நாரதரே? என்று கேட்டான் தசக்ரீவன். இந்த நிலையிலும் அவனுக்கு மட்டும் புத்தி வரவில்லை போலும். இன்னும் ஆணவம் குறையவில்லையே என்றார் நாரதர்.
இராவணனுக்கு நாரதர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. அந்த நிலையிலும் நவக்கிரகங்களுள் யாரோ ஆணவத்துடன் இருப்பதாகச் சொல்கிறாரே என்று கோபமடைந்தான். நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? அந்த ஆள் யார் என்பதைச் சொல்லுங்கள். இப்போதே அவனுக்குப் புத்தி வரச் செய்கிறேன் என்று சீறினான். அதோ அந்தப் படியில் ... படுத்திருப்பது யார்?... என்று ஒரு படியைச் சுட்டிக் காட்டினார் நாரதர். யாரடா அந்தப்படியில் படுத்திருப்பது? என்று அதட்டினான் இராவணன். அந்தப் படியிலே படுத்திருந்தது சனி. நாரதருடைய சைகையைப் புரிந்து கொண்ட அவன் மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டுப் படுத்தான். இராவணா, சனிதான் படுத்திருக்கிறானா? அவனுக்கு எத்தனை ஆணவம் இருந்தால் உன் சபையில் சிங்காசனத்தின் படியில் குப்புறக் படுத்துக் கிடந்தாலும் சிரிப்பான்? இங்கு என்ன வேடிக்கை நடக்கிறதா சிரிப்பதற்கு? தான் இவ்விதம் கீழான நிலையில் கிடக்க நேரிட்டதே என வருந்துவதற்குப் பதிலாகச் சிரிக்கிறானே. எவ்வளவு துடுக்குத்தனம்! அவனைச் சும்மா விடுவதா? என்று நாரதர் கோபத்தோடு கூறினார். மகரிஷே, உங்களுக்கே அவன் செய்கை கோபத்தைக் கொடுத்தது என்றால், நான் பார்த்திருந்தால் அவனை என்ன செய்திருப்பேன் தெரியுமா? என்று கண்கள் கோபத்தால் சிவக்கக் கூறினான் இராவணன்.
இராவணா, குப்புறப்படுத்திருப்பதால் அவனுக்கு தன்னுடைய இழிவான நிலை தெரியவில்லை. பிறர் அவனுடைய பரிதாபகரமான நிலையைக் கண்டு முகம் சுளிப்பதை அவன் காண வேண்டும். அப்போது தான் அவனுக்குப் புத்தி வரும். குப்புறப் படுத்திருப்பதற்குப் பதிலாக அவனை மல்லாந்து படுக்கச் செய். அவன் மார்பிலே காலை வைத்து ஏறிச் செல். அப்போது தான் அவனுக்குப் புத்தி வரும் என்றார் நாரதர். சரியான தண்டனை, மகரிஷே அந்த ஆணவக்காரனை இதுதான் சரியான முறையில் தண்டித்ததாக ஆகும். இப்போதே அவனை மல்லாந்து படுக்கச் செய்கிறேன் என்று அவரைப் பாராட்டினான் இலங்காதிபதி. அந்த க்ஷணமே சனி இராவணனுடைய கட்டளைக்கு ஏற்ப சிங்காதனத்துப் படியிலே மல்லாந்து படுத்தான். ஆணவத்தால் அறிவிழந்த சனிக்குப் புத்தி வந்து விடும் என்று எக்காளமிட்டான் இராவணன். ஆனால் உண்மையில் ஆணவத்தால் அறிவிழந்தது யார்? தான் தான் என்பது இராவணனுக்குப் புரியவில்லை. நாரதர் ஆடிய நாடகத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. எந்த க்ஷணம் முதல், சனியினுடைய பார்வை இராவணன் மீது படுகிறதோ அதுமுதல் அவனுடைய சக்தியும் பராக்கிரமும் க்ஷீணதசையை அடையத் தொடங்கும் என்றே நாரதர் அவ்வாறு சனியின் மீது பொய்க் குற்றம் சாட்டினார். அதை இராவணன் எவ்வாறு அறிவான்? தாம் போட்ட திட்டம் தடங்கலின்றி நிறைவேறியது பற்றி மகிழ்ச்சி அடைந்தவராய் இராவணனிடம் விடை பெற்றுப் புறப்பட்டார் நாரதர். சனியினுடைய பார்வை இராவணன் மீது பூரணமாக விழத்தொடங்கியது. அந்த க்ஷணம் முதல் அவன் அழிவுக் காலமும் நெருங்கிவரத் தொடங்கிவிட்டது. சூரியன் முதலான நவக்கிரகங்களுக்கும் இந்திராதி தேவர்களுக்கும் நமஸ்காரம் தோன்றிவிட்டது.
17. அகஸ்தியர் உபதேசித்த அற்புத மந்திரம்
கடைசி முறையாகத் தூது அனுப்பியும் இலங்கேசன் மனம் மாறுவதாகத் தெரியவில்லையாதலால் ஸ்ரீராமன் யுத்தத்துக்குத் தயாரானார். இராவணனுடைய அரக்கப் படைகள் வானரப் படைகளைத் தாக்கின. பயங்கரமான யுத்தம் நிகழ்ந்தது. இந்திரஜித்து, கும்பகர்ணன் முதலானோர் ஒருவர் பின் ஒருவராகப் படைகளுடன் வந்து போரிட்டு யுத்தகளத்திலே உயிரிழந்தனர். முடிவில் இராவணனே யுத்தத்துக்கு வந்தான். பத்துத் தலைகளும் பேய்ச்சிரிப்பு சிரிக்க இருபது கரங்களிலும் உக்கிரமான ஆயுதங்களை ஏந்தி யுத்தகளத்திலே அவன் வந்து நின்ற தோற்றத்தைக் கண்டு வானர வீரர்கள் குலைநடுங்கினர். மாற்றி மாற்றி அஸ்திரங்களைப் பிரயோகித்து அவன் வானர வீரர்களிடையே பெருங் கல கலப்பை ஏற்படுத்தினான். ஆஞ்சநேயன், தோள்களிலே தம்மைத் தாங்கி நிற்க ஸ்ரீராமன் கொடிய அஸ்திரங்களால் இராவணனுடைய படைகளை நிர்மூலமாக்கினார். அவனுடைய சாரதியை வீழ்த்தி இரதத்தையும் தூளாக்கினார். ஏக காலத்தில் அஸ்திரங்களைப் பிரயோகித்து அவனுடைய வில்லைத் துண்டித்து எறிந்தார். ஆயுதங்களையும் படைகளையும் இழந்து தன்னந் தனியாக யுத்தகளத்திலே நின்றான் இராவணன். அழிந்தான் இலங்கேசன்! என்று வானர வீரர்கள் கோஷமிட்டுக் குதித்தனர். நிராதரவான நிலையில் இருக்கும் இலங்கேசனை ஸ்ரீராமன் வதைக்க விரும்பவில்லை. இலங்கேசா, இப்போதைய நிலையில் ஒரே பாணத்தால் உன்னை வதம் செய்ய முடியும். அது யுத்த தருமத்துக்கு ஏற்றதல்ல. ஆகவே, நீ திரும்பி அரண்மனை செல். இப்போது கூட நான் உனக்கொரு சந்தர்ப்பத்தை அளிக்கின்றேன். ஜானகியை என் வசம் ஒப்புவித்துவிட்டு மன்னிப்புக் கோருவாயேயானால் உன்னை நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன். உன்னைச் சேர்ந்தவர்கள் அழிந்தது போதும். எஞ்சியுள்ளோரும் இலங்கையும் பிழைக்கட்டும். அவ்விதம் செய்ய உனக்கு விருப்பமில்லாவிடில் நாளை மீண்டும் புதிய பலத்தோடு யுத்தத்துக்கு வா என்றார் கருணாமூர்த்தி.
இராவணனுடைய எண்சான் உடம்பும் அவமானத்தால் கூனிக் குறுகியது. அப்போதும் அவன் ஜானகியை அழைத்து வந்து ஒப்படைக்கத் தயாராக இல்லை. அரண்மனை திரும்பிய அவன் இரவெல்லாம் மனம் குமைந்தான். தன்னுடைய மாங்கல்யத்துக்கு அழிவு வரக்கூடிய காரியத்தில் இறங்க வேண்டாமென்று மண்டோதரி மன்றாடியது பலன் தரவில்லை. அந்த நிலையிலும் அவன் ஸ்ரீராமனை எதிர்க்கவே துணிந்தான். பொழுது புலர்ந்தது. எஞ்சிய வீரர்களை ஒன்று திரட்டிக்கொண்டு புதிய இரதத்திலே யுத்த களம் வந்தான் இராவணன். இலங்கேசன் இரதத்திலிருந்து போரிடுகையில் ஸ்ரீராமன் தரையில் நின்றவாறு போரிடவேண்டியிருப்பதைக் கண்ட இந்திரன் மாதலியை அழைத்துத் தன்னுடைய இரதத்தைக் கொண்டு செல்லுமாறு பணித்தான். மாதலியும் இரதத்தோடு யுத்தக்களத்துக்கு வந்து ஸ்ரீராமனைப் பணிந்து இந்திரனுடைய வேண்டுகோளைத் தெரிவித்து அவரை இரதத்திலேறிப் போரிடுமாறு பிரார்த்தித்தான். அதே சமயம் அகஸ்தியர் ஸ்ரீராமனைத் தேடி அங்கு வந்தார். கருணாமூர்த்தியான ஸ்ரீராமன் முனிவரை வரவேற்று உபசரித்து கவுரவித்தார். ஸ்ரீராமா, இலங்கேசன் புலஸ்தியருடைய பேரன். சிறந்த சிவ பக்தன். பெற்றுள்ள வரங்களுக்கு ஒரு கணக்கில்லை. அவனை வதைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. உனக்கு ஆதித்தனுடைய மந்திரத்தை உபதேசம் செய்கிறேன். இராவணனை வதைப்பதில் சிரமம் காண்பாயேயாகில் இந்த மந்திரத்தை உச்சரித்து அஸ்திரப் பிரயோகம் செய் என்று ஆதித்திய ஹிருதய மந்திரத்தை உபதேசம் செய்தார். பின்னர் விடை பெற்றுச் சென்றார் முனிவர். யுத்தம் தொடங்கியது. இராவணனுடைய முகங்களிலிருந்து கோபக்கனல் வீசியது. இருபது கரங்களாலும் அவன் மாற்றி மாற்றி அஸ்திரங்களைப் பிரயோகித்தான். அந்த வேகத்தைத் தாங்கமாட்டாது வானரப் படைகள் தவித்தன.
மாதலி சாரத்தியம் செய்ய, ஸ்ரீராமன் இந்திரனுடைய இரதத்திலேறி இலங்கேசனுடன் யுத்தம் செய்தார். பாணங்களை வர்ஷித்து அவனால் எய்யப்பட்ட அஸ்திரங்களைத் தடுத்து அழித்தார். அடுத்து அடுத்து பாணங்களைப் பிரயோகித்து அவனுடைய தலைகள் ஒவ்வொன்றையும் அறுத்துத் தள்ளினார். என்ன ஆச்சரியம்! பாணங்களால் அறுத்தெறியப்பட்ட தலைகள் முன்போல அதன் இடத்தில் தோன்றி அட்டகாசத்தோடு சிரித்தன. தொடர்ந்து பலமுறை அவ்வாறு இலங்கேசனுடைய தலைகளை ஸ்ரீராமன் அறுத்துத் தள்ளியும் அவை முன் போலவே அந்த இடத்தில் தோன்றின. விபீஷணன் ஸ்ரீராமனைச் சமீபித்தான். பிரபோ, இலங்கேசனுடைய மார்பிலே அமுதகலசம் இருக்கிறது. அதன் காரணமாகவே அவனுடைய வெட்டுண்ட தலைகள் மீண்டும் தோன்றுகின்றன. ஆகவே, முதலில் அவன் மார்பைப் பிளந்து அமிருத கலசத்தை உடைத்தெறியுங்கள் என்றான். விபீஷணனுடைய வார்த்தையைக் கேட்ட ஸ்ரீராமன் அவ்வாறே இராவணனுடைய மார்பைக் பிளக்க அகஸ்தியரால் உபதேசிக்கப்பட்ட அற்புதமான சூரிய மந்திரத்தை உச்சரிக்க முடிவு செய்தார். மானஸீகமாக சூரியனைத் தியானித்துத் தோத்திரங்கள் செய்தார். பின்னர் அகஸ்திய முனிவரால் உபதேசிக்கப்பட்ட அரிய மந்திரத்தைப் பக்தியோடு உச்சரித்து பாணத்தை இலங்கேசனுடைய மார்பை நோக்கிப் பிரயோகித்தார். வில்லிலிருந்து சீறிப் புறப்பட்ட பாணம் பாய்ந்து சென்று இலங்கேசனுடைய மார்பிலே தாக்கிப் பிளந்தது. அந்தப் பாணத்தை நெருங்கவிடாது தடுக்க அவன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. மார்பைப் பிளந்த பாணம் அமிருத கலசத்தை உடைத்தெறிந்ததோடு இராவணனுடைய ஆவியையும் கவர்ந்து கொண்டு திரும்பியது. இராவணனுடைய உயிரற்ற உடல் பர்வதம் போல யுத்த களத்திலே வீழ்ந்தது. வானிலே குழுமியிருந்த சித்தர், கந்தருவர் முதலானோர் மலர்மாரி பெய்து ஸ்ரீராமனைத் துதித்தனர். வானர வீரர்கள் எழுப்பிய மகிழ்ச்சிகரமான கோஷம் எட்டுத் திக்குகளையும் அதிரச் செய்தது.
18. கொடையிற் சிறந்த கர்ணன்
துவாரகாநாதன் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் சென்ற தூது முறிந்து விட்டது. பாண்டவர்களுக்கு ஊசிமுனை குத்தும் இடம் கூடக் கொடுக்க முடியாதென்று மறுத்துவிட்டான் துரியோதனன். கவுரவருக்கும் பாண்டவருக்குமிடையே யுத்தம் ஒன்றுதான் வழி எனத் தீர்மானமாகி விட்டது. தேர்ப்பாகன் மகனான தன்னை வளர்த்து ஆளாக்கி சமமாக நடத்தி, சேதி நாட்டுக்கும் அதிபதியாக்கிய துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அவன் பக்கம் உறுதியாய் நின்றான் கர்ணன். கிருஷ்ணன் அவனைச் சந்தித்து அவன் பிறப்பின் இரகசியத்தை அறிவித்து பாண்டவர்களுடைய மூத்த சகோதரனான அவன் அவர்கள் பக்கமே சேரவேண்டுமென்று கேட்டபோதும், கிருஷ்ணனால் கர்ணன் தன் புதல்வன் என்பதை அறிந்த குந்தி ஓடிவந்து அவனிடம் மன்றாடியபோதும் கர்ணன் கொஞ்சமும் மனம் தளரவில்லை. இதுகாறும் அவன் பிறப்பின் இரகசியத்தை யாரும் அறியவில்லை. அவ்விதமே கடைசிவரையில் இருந்து விடவேண்டுமென்று அவன் குந்தியிடம் பிரார்த்தித்தான். யுத்த களத்திலே தன் ஆவி பிரிந்த பின்னர் அவள் தன் உடலை மடி மீது கிடத்திக் கொண்டு அழும்போதே பாண்டவர்கள் தன் பிறப்பின் இரகசியத்தை அறிய வேண்டும் என்று வரம் கேட்டான். அதற்குப் பிரதியாக அவன் அர்ஜுனன் மீது நாகாஸ்திரத்தை ஒரு முறைக்குமேல் பிரயோகிப்பதில்லை என்றும் சபதம் செய்தான். சூரிய புத்திரனான கர்ணன் மிகுந்த திறமைசாலி. அவன் பிறந்தபோதே அவன் மார்பிலே சூரியனுடைய அனுக்கிரகத்தால் கவசம் ஒன்றும் இருந்தது. அதனை எந்த அஸ்திரத்தாலும் பிளக்க முடியாது. ஆகவே, கர்ணனை எவரும் யுத்தத்திலே வெல்வது என்பது முடியாத காரியம்.
அந்த இரகசியத்தை அறிந்த இந்திரன் தன் குமாரன் அர்ஜுனனைக் காப்பாற்ற முனைந்தான். வேதியனைப் போன்று வடிவம் கொண்டு கர்ணனுடைய அரண்மனைக்கு வந்தான். அவ்வமயம் கர்ணன் பூஜையில் இருந்தான். தன்னைக் காண யாரோ வேதியன் வந்திருப்பதை அறிந்ததும் கர்ணன் அதிகாரிகளை அழைத்து அப்பிராமணரை வரவேற்று உபசரித்து சபாமண்டபத்தில் இருக்கச் செய்யுமாறும் பூஜையை முடித்துக் கொண்டு வருவதாகவும் சொல்லி அனுப்பினான். இந்திரனுடைய வஞ்சக எண்ணத்தை அறிந்த சூரியன் தன் குமாரனுக்குத் தரிசனம் தந்து உண்மையை விளக்கினான். குமாரா, வந்திருப்பது சாதாரண வேதியர் அல்ல. இந்திரனே அவ்வடிவில் வந்திருக்கிறான். தன் புத்திரன் அர்ச்சுனனுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு வந்திருக்கிறான். அவன் விஷயத்தில் நீ ஏமாந்துவிடாதே என்று எச்சரித்து மறைந்தான். பூஜையை முடித்துக்கொண்டு மண்டபத்துக்கு வந்த கர்ணன் வேதியராக வந்திருக்கும் இந்திரனை நமஸ்கரித்தான். சுவாமி, தங்கள் வருகையால் நான் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். என்னைத் தேடித் தாங்கள் வரவேண்டுமானால் இந்த வேடம் எதற்கு? தேவராஜா, உம்மை நான் அறிவேன். எக்காரணம் கொண்டு தாங்கள் வந்திருந்தாலும் சரி. அதைத் தெரிவிக்கலாம் என்று பிரார்த்தித்தான். திடுக்கிட்ட தேவராஜன் தன் உண்மை சொரூபத்தைக் கர்ணனுக்குக் காட்டினான். கர்ணா, நான் வந்திருக்கும் விஷயத்தை நீ அறிந்தால் ஒருவேளை நான் வேண்டுவதை மறுக்கக்கூடுமோ என்றே வேதியர் வடிவில் வந்தேன் என்று தயங்கினான் இந்திரன்.
இந்திரனை மலர்ந்த முகத்தோடு பார்த்த கர்ணன், தேவராஜன், தயக்கம் ஏன்? தாங்கள் வந்த காரியத்தைத் தாராளமாகத் தெரிவியுங்கள் என்று வற்புறுத்தினான். கர்ணா, உன்னோடு பிறந்திருக்கும் மார்புக் கவசத்தை யாசகம் பெற்றுச் செல்லவே வந்தேன் என்றான் இந்திரன். அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் கொஞ்சமும் கலக்கமோ, கோபமோ அடையவில்லை. தேவராஜா, சற்று பொறுங்கள். தாங்கள் நாடிவந்ததைப் பெற்றுச் செல்லலாம் என்றான். சிறிதும் தயங்காமல், இந்திரன் கேட்பதைக் கொடுப்பதால் தனக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்பதையும் கருதாமல் சிரித்த முகத்தோடு மார்புக் கவசத்தை இந்திரனுக்குத் தானம் அளித்தான் கர்ணன். அதைப் பெற்றுக்கொள்ளும் போது இந்திரனுடைய கண்களில் நீர் நிறைந்தது. உடன் பிறந்த மார்புக் கவசத்தை இழந்த போதிலும் கர்ணனை யுத்தத்திலே அர்ஜுனனால் சுலபத்தில் வெற்றி கொள்ள முடியவில்லை. கர்ணன் செய்த தருமங்களால் அவன் அடைந்த புண்ணியங்கள் அவனைக் காப்பாற்றி வந்தன. யுத்த களத்திலே குருதிச் சேற்றிலே சிக்குண்ட இரதத்தின் சக்கரத்தை வெளியே எடுக்கும் முயற்சியில் கர்ணன் ஈடுபட்டிருக்கையில் கிருஷ்ணன் அங்குவந்து அவன் புண்ணியங்களைத் தானமாகக் கேட்டு பெற்றுக் கொண்டார். அந்த நிலையிலும் அவன் கொடுக்கத் தயங்கவில்லை. அதன் பின்னரே அர்ஜுனன் அவனை அடித்து வீழ்த்த முடிந்தது.
19. கணேசர் வதைத்த சிந்துராஜன்
மைதல தேசத்தில் கண்டநகரம் என்றொரு பட்டணம். அப்பட்டணத்தில் சக்கரபாணி என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த நியம நிஷ்டைகளோடு பகவானை ஆராதித்து வந்தான். இருப்பினும் அவனுக்குக் குழந்தைப் பாக்கியம் மட்டும் ஏற்படவில்லை. தான தருமங்கள் செய்தான். யாகங்கள் செய்தான். வெகு நாட்களுக்குப் பின்னர் அவன் மனைவி உக்கிரை என்பவள் கருவுற்றாள். ஆனால் குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டது. அடுத்தடுத்துப் பிறந்த பிள்ளைகளும் உயிர் தரிக்கவில்லை. அரசனும் அரசியும் அடைந்த வருத்தம் சொல்லி முடியாது. அவனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. பூர்வ ஜன்மத்தில் தான் செய்த ஏதோ தீச்செயலே இப்பிறவியில் இவ்வாறு பழிவாங்குகிறது என்று கண் கலங்கினான். அனைத்தையும் துறந்துவிட்டுக் கானகம் சென்று அடுத்த பிறவியிலாவது நல்ல கதியை அடையத் தவம் செய்ய எண்ணினான். அந்தச் சமயத்தில் ஒரு நாள் அவன் அரண்மனைக்கு சவுனக முனிவர் வந்தார். அரசன் முனிவரை வரவேற்று அர்க்கியம் முதலான கொடுத்து உபசரித்தான். அரசனுடைய முகம் வாட்டமடைந்திருப்பதைக் கண்ட முனிவர் அதற்கான காரணத்தை கேட்டபோது அரசன் தன் மனக்குறையை எடுத்துச் சொல்லிக் கண்ணீரைக் கொட்டினான். ஹே ராஜன், இனி கவலைப்படத் தேவையில்லை. உனக்குச் சத் புத்திரன் பிறப்பான். சூரிய விரதம் அனுஷ்டித்தால், அவன் அருளால் உன் குறை நீங்கும் என்று சொன்ன முனிவர் அரசனுக்கு சூரிய விரதம் அனுஷ்டிக்கும் விதத்தை எடுத்துக் கூறினார். முனிவர் தெரிவித்தவாறே அரசனும் பக்தியோடு சூரிய விரதம் அனுஷ்டித்து அனுக்கிரகம் செய்ய எண்ணினான். ஆனால் அரசன் மலடன் என்பதைக் கண்டு அவன் உருவிலே வந்து உக்கிரையின் கனவிலே அவளுக்கு இன்பத்தைத் தந்து சென்றான். காலையில் உக்கிரை கணவனிடம் கோபித்துக் கொண்டாள். சுவாமி, விரதம் அனுஷ்டித்து வரும் வேளையில் காம வசப்படலாமா? நேற்றிரவு தாங்கள் என்னிடம் நடந்து கொண்டது சரியல்ல என்றாள் உக்கிரை. அரசனுக்கு அவள் என்ன கூறுகிறாள் என்பது புரியவில்லை; விழித்தான்.
பிரியே, என்ன சொல்லுகிறாய்? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே என்று கேட்டான். இரவு அரசன் தன்னோடு மகிழ்ந்து இருந்ததை உக்கிரை தெரிவித்தபோது அவன் திடுக்கிட்டான். பின்னர் தன் குறை தீர்க்க இறைவனே அவ்வாறு அனுக்கிரகம் செய்திருக்க வேண்டும் என்று சமாதானம் கொண்டான். பிரியே, நமக்குப் புத்திர பாக்கியம் ஏற்பட வேண்டுமென்று பகவானே அவ்வாறு அனுக்கிரகம் புரிந்திருக்கிறார். விரதத்துக்குப் பங்கம் விளைந்து விட்டதோ எனக் கவலைப்படாதே என்று மனைவியைத் தேற்றினான். பத்து மாதங்கள் சென்றன. உக்கிரைக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சூரியனுடைய அனுக்கிரகத்தால் பிறந்த அந்தக் குழந்தை மிகுந்த தேஜஸ்ஸோடு விளங்கியது. இரு கைகளிலும் சூலங்களை ஏந்தியபடி சிவந்த ஜடையோடும் மூன்று கண்களோடும் பிறந்திருந்த அந்த குழந்தையைக் கண்டு உக்கிரை பயந்துவிட்டாள். வருணன் ஒரு பிராமணனாக வந்து குழந்தைக்கு சிந்து எனப் பெயரிட்டு ஆசிகள் பல கூறிச் சென்றான். குழந்தை வளர வளர அதன் பராக்கிரமமும் அதிகரித்து வந்தது. பர்வதங்களையெல்லாம் அனாயாசமாகப் பந்தாடினான். சமுத்திரத்தைக் கலக்கினான். அவனுடைய செயல்களைச் கவனித்த சுக்கிராச்சாரியார் அவனே அசுரர்களுக்கு ஏற்ற தலைவன் என்று எண்ணி அவனிடம் வந்தார்.
குமாரா, சிவபெருமானைத் தியானித்து அளவற்ற வரங்களைப் பெறுவாயானால் மூவுலகங்களும் உன் கால்களில் பணிந்து கிடக்கும். தேவர்களும் உனக்கு அடங்கி நடப்பர் என்று தூண்டி விட்டார். பராக்கிரமத்தின் காரணமாக மூவுலகங்களையும் அடக்கி ஆள ஆசைப்பட்ட சிந்து அசுரகுருவின் வார்த்தைகளின் படி சிவனைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். அனேக காலம் உறுதியோடு உடலை வருத்திக்கொண்டு ஈசனைக் குறித்துத் தியானம் செய்து வந்தான். அவன் தவத்தால் மகிழ்ந்து ஈசனும் அவனுக்குப் பிரத்தியக்ஷமாகி அவன் கோரிய வரங்களைத் தந்தார். தேவர்களாலும் ஜயிக்க முடியாத பராக்கிரமத்தையும் மூவுலகத்திலும் ஏகசக்கிராதிபதியாய் வாழவும் வரங்களைக் கேட்டுப் பெற்றான் சிந்து. அளவற்ற பராக்கிரமத்தை அடைந்த அவன் மனம் அதர்ம வழியில் செல்லத் தொடங்கியது. மூவுலகங்களையும் வென்று அடிமைப்படுத்தினான். அசுரர்கள் அவன் பராக்கிரமத்தைக் கண்டு நடுநடுங்கி அவனைத் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டனர். தேவர்களைச் சிறைப்பிடித்து வந்து தன் பட்டணத்தில் காவலில் வைத்தான். சிந்து ராஜனால் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுந் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தேவர்கள் ஒரு நாள் பிரகஸ்பதியிடம் தங்கள் அவல நிலையை எடுத்துச் சொல்லித் தங்களுக்கு விமோசனமே கிடையாதாவெனக் கேட்டனர். தேவர்களே, சிந்துராஜன் இரண்டாயிரம் வருடங்கள் தவம் செய்து ஏராளமான வரங்களைப் பெற்றிருக்கிறான். அவனை வெல்லக் கூடியவர் சர்வேஸ்வரனான விநாயகப் பெருமான் ஒருவரே. அவரைக் குறித்துத் தியானம் செய்யுங்கள். அவருடைய அருளால்தான் உங்கள் துன்பம் விலகவேண்டும் என்று கூறினார் பிரகஸ்பதி. சிறையில் இருந்தவாறே தேவர்கள் விநாயகரை மானஸீகமாகத் தியானிக்கலாயினர். இதன் நடுவே சதுர்த்தி விரதம் வரவே, தேவர்கள் பக்தியுடன் அந்த விரதத்தையும் மானஸீகமாக அனுஷ்டித்தனர். அதனால் சந்தோஷமடைந்த விநாயகப் பெருமான் பத்துக் கரங்களோடு சித்தி புத்தி சமேதராய் அவர்கள் முன்பு பிரத்யக்ஷமானார். அன்பர்களே, விரைவிலேயே சிந்துராஜனை சம்கரித்து உங்களைச் சிறையிலிருந்து விடுவிப்போம் என்று அனுக்கிரகம் செய்து மறைந்தார். தேவர்களும் ஓரளவு மனம் சமாதானம் அடைந்தவர்களாய் அந்த நன்னாளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க, திரிசந்தி ÷க்ஷத்திரத்தில் இருந்த கவுதமர் முதலானோர் சிந்துவுக்குப் பயந்து தங்கள் ரூபத்தை யோகபலத்தால் மறைத்துக் கொண்டு சிவபெருமானைத் தியானித்து வந்தனர். ஈசன் பார்வதி சமேதராய் அவர்களுக்குத் தரிசனம் தந்தபோது, அவரைத் தங்களுடன் அந்த ÷க்ஷத்திரத்தில் தங்கியிருக்க வேண்டுமென்றும், அப்போது தான் சிந்துவின் பயமில்லாது இருக்க முடியுமென்றும் முனிவர்கள் பிரார்த்தித்தனர். இறைவன் அவர்கள் கோரிக்கையை ஏற்றுத் தேவியுடன் அங்கேயே தங்கினார். ஒருநாள் நிஷ்டையிலிருக்கும் ஈசனைக் கண்டு தேவி ஆச்சரியப்பட்டு, சகல தேவர்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் அவர் யாரைக் குறித்து நிஷ்டையில் இருக்கிறார் என்பதைக் கேட்டாள். தேவியின் மனத்திலே எழுந்த கேள்விக்கு ஈசன் விடையளித்தார். தேவி, விஷ்ணு முதலான தேவர்களால் நான் எவ்வாறு தியானிக்கப்படுகின்றேனோ அவ்வாறு நான் தியானிக்கும் பரம் பொருள் ஒன்று உண்டு. அவரே மும்மூர்த்திகளாகிய எங்களைத் தோற்றுவித்தவர். சிந்து ராஜனால் சிறையில் அடைக்கப்பட்டு அல்லல் பட்டுவரும் தேவர்களுடைய துயர் போக்க அப்பெருமான் உன்னிடத்தில் திருக்குமாரனாக அவதரிக்கப் போகிறார். பன்னிரண்டு வருடகாலம் ஏகாக்ஷர மந்திரத்தை நீ பக்தியோடு தியானித்து வந்தாயானால் அந்தப் பாக்கியம் நிறைவேறும். இவ்வாறு கூறி ஈசன் தேவிக்கு ஏகாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். தேவியும் அவ்வாறே மயூரேச விநாயகர் ஆலயத்தில் பன்னிரண்டு வருஷகாலம் ஏகாக்ஷர மந்திரத்தை ஜபித்து வந்தார். மூம்மூர்த்திகளின் திருமுகங்களோடும், ஆறு கைகளோடும் ரிஷப வாகனத்தில் விநாயகப் பெருமான் தேவியின் முன்பு தோன்றினார். தேவி, எம்மை மனத்தால் வழிபட்டுவரும் தேவர்களைச் சிறை மீட்க விரைவிலேயே உனக்குப் புத்திரனாக நாம் அவதரிப்போம் என்று அருள் புரிந்து மறைந்தார். விநாயக சதுர்த்தி அன்று தேவி பெருமானை மண்டபத்தில் எழுந்தருளச்செய்து பக்தியோடு ஆராதனை செய்து வந்தாள். அப்போது கோடி சூரியப்பிரகாசத்தோடு ஜோதி ஒன்று தோன்றியது. அதன் நடுவே கணக்கற்ற முகங்களும் கைகளும் கால்களும் கொண்டு விசுவ ரூபமாக நின்றார் விநாயகப்பெருமான். அந்தக் காட்சியைக் காண முடியாது தேவியின் கண்கள் கூசின. இருகைகளையும் கூப்பி வணங்கிய தேவி, பிரபோ இந்தக் காட்சியைக் காணும் சக்தி எனக்கில்லை. தயவு செய்து குழந்தை உருவில் தரிசனம் தரவேண்டும் என்று பிரார்த்தித்தான்.
அடுத்த கணம் அங்கே அழகிய குழந்தையாகக் காட்சி தந்தார் விநாயகர். மூன்று கண்களும் ஆறு கரங்களும் கொண்டு, மார்பிலே மாலைகள் அசையப் படுத்திருக்கும் பெருமானைக் கண்டு பார்வதி ஆவலோடு அள்ளி அணைத்து உச்சிமுகந்து கொண்டாடினாள். அப்போது தேவர்களுக்கு வலது தோள்களும் வலது கண்களும் துடிக்க, சிந்துராஜனுக்கு இடது தோளும், கண்ணும் துடித்தன. அவன் மனத்திலே இதுவரை இல்லாத குழப்பம் எழுந்தது. அதே சமயம் வானத்திலே அசிரீரி ஒன்று எழுந்தது. ஹே சிந்துராஜா, உன்னை அழிக்கப் போகும் குழந்தை திரிசந்தி ÷க்ஷத்திரத்திலே வளர்ந்து வருகிறான். சிந்துராஜனுடைய கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்தன. என் அழிவுக்கு ஒருவன் பிறந்திருக்கிறானா? இப்போதே அவனை நமனுலகுக்கு அனுப்பிவைக்கிறேன் பார் என்று வாளை உருவிக்கொண்டு பாய்ந்தான். அருகிலிருந்தவர்கள் அவனைத் தடுத்து ஆசுவாசப்படுத்தினர். திரிசந்தி ÷க்ஷத்திரத்திலே வளர்ந்து வரும் எதிரியை அழித்து வருமாறு பல அசுரர்களை ஏவினான் சிந்துராஜன்.
கிருத்திராசுரன் கழுகுபோல வந்து கணேசரைக் கொத்தித் தூக்க முயன்று அழிவை அடைந்தான். கேமாசுரன் குசலாசுரன் என்னும் இருவர் எலிகளாக மாறி ஒருவரோடு ஒருவர் சண்டைபோடுவது போல வந்து விழுந்தனர். கணேசர் பூனையாகி அவர்களைக் கடித்துக் குதறினார். மற்றொரு அசுரன் பூனையாக வர அவனை நாயாக மாறிக் கொன்றார் பாலகணேசர். முனிகுமாரனைப் போன்று வந்த பலாசுரன் விளையாட்டின் நடுவே நமனுலகை அடைந்தான். வியோமாசுரன் ஆகாயம் வரை மரமாக உயர்ந்து நிற்க கணேசர் அவனை நொடிப் பொழுதில் சம்கரித்தார். சதமகிஷிபக்ஷிணி என்ற அரக்கி ஒரு நாளைக்கு நூறு எருமைகளைப் புசிப்பவள். அவள் அழகிய பெண்ணாக உருக்கொண்டு வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆகாயமார்க்கத்தில் கிளம்ப, கணேசர் அவள் காதைப் பிடித்துத் திருகவே அரக்கி அலறிக்கொண்டு பூமியில் விழுந்து உயிரைவிட்டாள். கடாசுரன் ஆமையாகவும், அசகாசுரன் மலைப்பாம்பாகவும், கமலாசுரன் பட்சியாகவும் வந்து கணேசரைக் கொல்ல முயன்று அவரால் யமலோகத்துக்கு அனுப்பப்பட்டனர். துந்துபி என்பவன் கொடிய விஷங்களை நாகப்பழமாகச் செய்து கொண்டு வந்து குழந்தை கணேசரிடம் கொடுத்துச் சாப்பிடச் செய்தான். அவர் பதிலுக்கு பூஜையில் நைவேத்தியத்துக்கு வைத்திருந்த மோதகத்தை எடுத்துக் கொடுத்தார். விஷத்தால் ஆன நாகப்பழங்களைச் சாப்பிட்ட கணேசருக்கு ஒன்றும் செய்யவில்லை. மோதகத்தைச் சாப்பிட்ட அசுரன் விஷம் தலைக்கேறி இரத்தத்தைக் கக்கிக்கொண்டு கீழே விழுந்து உயிரை விட்டான். இன்னும் வீமாசுரன், விகிர்தாசுரன், கருத்தமாசுரன், கடகாசுரன் ஆகியோரும் கணேசரைக் கொல்ல வந்து அவரால் கொல்லப்பட்டார்கள். விசுவகர்மா திரிசந்தி ÷க்ஷத்திரம் வந்து கணேசரைச் சந்தித்து பரசு, தாமரை மலர், பாசம், அங்குசம் முதலான ஆயுதங்களைச் சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான்.
சூரியனுடைய தேஜஸ்ஸைத் தாங்க மாட்டாது ஸமுக்ஞா தன் தந்தை வீடு வந்துவிடவே விசுவகர்மா சூரியனுடைய அனுமதி பெற்று அவருடைய தேஜஸ்ஸை சாணைக் கல்லிலே சாணைப் பிடித்துக் குறைத்தார். அப்போது சிதறிய சூரியனுடைய அம்சத்தைக் கொண்டு சூலமும் மற்ற ஆயுதங்களும் செய்யப்பட்டன. சூலாயுதத்தைச் சிவனிடம் சேர்ப்பித்த விசுவகர்மா மற்ற ஆயுதங்களை கணேசருக்கு அளித்தான். கணேசரைக் கொன்றுவிடுமாறு அனுப்பப்பட்ட அசுரர்கள், ஒருவராவது உயிருடன் திரும்பாதத்தைக் கண்ட சிந்து முடிவில் தானே செல்வதென்று தீர்மானித்து படைகளுடன் புறப்பட்டுச் சென்று திரிசந்தி ÷க்ஷத்திரம் சென்று ஆசிரமத்தைச் சூழ்ந்து கொண்டான். ஆசிரமவாசிகள் நடுநடுங்கி கணேசரிடம் சென்று சரண் அடைந்தனர். அவர் மனத்தால் சதுரங்க படைகளையும் தோற்றுவித்து சிந்துவின் வீரர்களுடன் போரிடுமாறு அனுப்பினார். கணேசருடைய வீரர்கள் சிந்துவின் வீரர்களை நிலை குலையச் செய்து தோல்வியுற்று ஓடுமாறு செய்தனர். தோல்வியால் பெரும் சீற்றம் கொண்ட சிந்து திரிசந்தி ÷க்ஷத்திரத்திற்குள் சூரியனோ, சந்திரனோ, வருணனோ நுழையக் கூடாதென்று கட்டுப்பாடு செய்தான். கணேசர் தம்முடைய திருமுகத்திலிருந்து சூரியனையும் சந்திரனையும் தோற்றுவித்தார். சிந்துவின் அழிவுக் காலம் நெருங்கியது. அவன் அட்டகாசங்கள் அளவுக்கு மீறிப் போய் விடவே, கணேசர் அவன் முடிவைத் தீர்மானிக்க தாமே படைகளுடன் புறப்பட்டார். சுப்பிரமணியரும், வீரபாகு தேவரும், நந்திகேச்வரரும் தங்கள் படைகளுடன் வந்தனர். சிந்து அசுர வீரர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து எதிர்த்துப் போரிட்டான். பயங்கரமான யுத்தம் நிகழ்ந்தது. கணேசர் சிந்து இருக்குமிடத்தைத் தேடி வந்தார். அவரைக் கண்டதும் சிந்து ஆத்திரத்தால் குமுறியவனாய் பலவித அஸ்திரங்களால் தாக்கினான். கணேசரோ அந்த அஸ்திரங்கள் தம்மை நெருங்காதவாறு வழியிலேயே தடுத்து அழித்தார். அவன் சக்கராயுதத்தைப் பிரயோகிக்க அதைத் தம் கரத்திலே கிரகித்துக் கொண்டார் கணேசர். பின்னர் அவர் தம்முடைய பரசுவைப் பிரயோகிக்க அது சிந்துவை நெருங்கி அவர் மார்பைப் பிளந்து அவன் ஆவியைக் குடித்துத் திரும்பியது. அரசனுடைய சிறையில் கிடந்த தேவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பட்டுவந்த துன்பங்களுக்கு முடிவுக் காலம் ஏற்பட்டது. அனைவரும் கணேசரைப் பணிந்து கொண்டாடினார்கள்.
20. தூமாட்சனைக் கொன்ற மகோற்கடர்
தேவாந்தகன், நராந்தகன் என்ற இருவரும் நாரதரால் உபதேசிக்கப்பட்டவர்களாய் பரமசிவனைக் குறித்துத் தவம் இருந்து ஏராளமான வரங்களைப் பெற்றனர். அதன் காரணமாக அவர்கள் மமதை கொண்டவர்களாய் யாரையும் லட்சியம் செய்யாமல் மனம் போனவாறு நடந்து கொண்டனர். தேவர்களை அடித்துத் துன்புறுத்தி தேவலோகத்தைப் பிடித்துக் கொண்டனர். மூவுலகமும் பாதாள லோகமும் கூட அவர்களுக்கு அடி பணிந்தன. தேவர்கள் படும் துயரைக் கண்ட அதிதி கணவரிடம் அதைப்பற்றி பெரிதும் வருத்தப்பட்டுக் கொண்டாள். காசியபர் அவளைத் தேற்றி விநாயகப் பெருமானைக் குறித்து விரதம் இருந்தால் தேவர்களை ரக்ஷிக்க அவரே குழந்தையாக அவதரிப்பார் என்று ஆறுதல் கூறினார். அதிதியும் வினாயகப் பெருமானை பஞ்சாக்ஷர மந்திர தியானத்தால் ஆராதித்தாள். விநாயகர் அவளுக்குத் தரிசனம் தந்து விரைவிலேயே அவள் குமாரனாக அவதரிப்பதாகக் கூறி மறைந்தார். ஒரு நாள் அதிதி ஆசிரமத்தில் விநாயகரைப் பூஜித்து வருகையில் ஆயிரம் கைகளுடன் கோடி சூரியப் பிரகாசத்தோடு விநாயகர் அவள் முன் தோன்றினார். அதைக்கண்டு பயந்தவளாய் அதிதி, சுவாமி, இதென்ன தோற்றம்? என்று கேட்டாள். அம்மா, தங்களுக்குக் குமாரனாக அவதரிக்க வேண்டுமென்று கோரவில்லையா? இப்போது அதை நிறைவேற்ற வந்துள்ளேன் என்றார். சுவாமி, தங்கள் இந்த ரூபத்தை எவ்வாறு நான் கைகளில் தாங்கி ஆசையுடன் அணைப்பேன்? குழந்தையாக வரவேண்டும் என்று வேண்டினாள் அதிதி. விநாயகரும் அவ்வாறே குழந்தையாக உருவம் கொள்ள, அதிதி அவரைக் கைகளில் வாரி மார்புடன் அணைத்து மகிழ்ந்தாள். முனிபுங்கவர்கள் வந்து குழந்தையைக் கண்டு மகிழ்ந்து சென்றனர். காசியபர் உரிய காலத்தில் குமாரனுக்கு உபநயனம் செய்து வைத்தார்.
காசிராஜன் தன் குமாரத்திக்குத் திருமணம் நிச்சயித்து அதை உடன் இருந்து முடித்து வைக்க குலகுருவான காசியபரை அழைத்துச் செல்லவந்தான். அப்போதுதான் காசியபர் சாதுர் மாசிய விரதம் தொடங்கியிருந்தார். ஆகவே தமக்குப் பதிலாகத் தம் குமாரன் மகோற்கடரை அனுப்பி வைத்தார். அவர்கள் செல்லும் வழியில் தூமாட்சன் தவம் செய்து கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். தூமாட்சன், தேவாந்தகன், நாராந்தகன் ஆகியவர்களுக்குச் சிற்றப்பன் ஆவான். அவன் சூரியனைக் குறித்துக் கடுமையாகத் தவம் மேற்கொண்டிருந்தான். சூரியனைத் திருப்தி செய்து அவரிடமிருந்து சூரியாஸ்திரத்தைப் பெற வேண்டுமென்று அவன் தவமிருந்தான். தூமாட்சகன் தவத்தால் மகிழ்ந்து சூரியன் அவன் விரும்பிய அஸ்திரத்தை அனுப்பி வைத்தான். அது தூமாட்சனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட விநாயகப் பெருமானான மகோற்கடர், அசுரனிடம் அஸ்திரம் போய்ச் சேருவதை விரும்பாது அதைத் தம் கரத்திலே கிரகித்துக் கொண்டு பின்னர் அசுரனை வதைக்குமாறு அதையே பிரயோகித்தார். சூரியாஸ்திரம் தூமாட்சனுடைய சிரத்தைக் கொய்து அவன் உயிரைக் குடித்து மீண்டது. செய்தி அறிந்த தூமாட்சனுடைய புதல்வர்கள் இருவரும் வந்து மகோற்கடரைத் தாக்க அவர்கள் நொடிப்பொழுதில் அழிக்கப்பட்டனர். தேவாந்தகனும், நராந்தகனும் கோபம் கொண்டு மகோற்கடரை எதிர்க்க ஒருவர் பின்னொருவராக இருவரும் யுத்தத்திலே கொல்லப்பட்டார்கள். தேவர்கள் துன்பம் நீங்கியவர்களாய் விநாயகப் பெருமானைப் பலவாறு போற்றித் துதித்தனர்.
21. மணியால் வந்த அபவாதம்
சத்திராஜித்து என்பவன் சூரியனிடம் நட்பு கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் கடற்கரையில் பக்தியோடு சூரியனை வழிபட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் மகிழ்ச்சி கொண்டு சூரியன் அவன் முன்பு வந்து நின்றான். தகதக வென்று பிரகாசத்தோடு எதிரில் நிற்கும் சூரியனைக் கண்டதும் சத்திரஜித்து பணிவோடு நமஸ்கரித்து, பிரபோ, தங்களை வானத்தில் காணும் நெருப்புக் கோளமாகவே இப்போதும் காண்கிறேன். உம்மை நான் வேறு எந்த விதத்திலும் காண முடியவில்லையே. என்னிடம் அனுக்கிரகம் செய்து என்ன பயன்? என்று வருத்தம் தொனிக்கக் கூறினான். சூரியன் சிரித்தவாறு தான் கழுத்திலே அணிந்திருந்த சியமந்தகம் என்னும் ரத்தினத்தை எடுத்து மறைத்து வைத்து விட்டு அவன் எதிரில் நின்றான். அப்போது கண்ணைப் பறிக்கும் பிரகாசம் நீங்கிய சூரியனை சத்திராஜித்து காண முடிந்தது. மகிழ்ச்சியோடு அவரைத் தரிசித்து நமஸ்காரம் செய்தான். நண்பா, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டான் சூரியன். சத்திராஜித்து தனக்கு அந்த சியமந்தக ரத்தினத்தையே தருமாறு சூரியனைக் கேட்டான். சூரியனும் அவன் விருப்பப்படியே அந்த மணியை அவன் கழுத்தில் அணிவித்து விட்டுச் சென்றான். அந்தத் திவ்வியமான ரத்தினத்தைத் தரித்ததனாலே சத்திராஜித்து சூரியனைப் போன்று பிரகாசித்தான். அவன் துவாரகைக்குத் திரும்பியபோது சூரியன் தான் வருகிறான் என்று மக்கள் நினைத்து விட்டனர். கிருஷ்ணனிடம் ஓடிச்சென்று அவரைத் தரிசிக்க சூரிய பகவான் துவாரகைக்கு வருவதாகத் தெரிவித்தனர். கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, யாதவர்களே வருவது சூரியன் அல்ல, நம் சத்திராஜித்தே வருகிறான். சூரியனைத் துதித்து அவனிடமிருந்து திவ்வியமான சியமந்தகமென்ற ரத்தினத்தைப் பெற்று அதை அணிந்து கொண்டு வருகிறான். போய்ப் பாருங்கள் என்றார்.
விஷயத்தை அறிந்தபோது அனைவரும் சத்திராஜித்தைப் பாராட்டினர். அவன் அதைத் தன் மாளிகையில் பத்திரமாக வைத்திருந்தான். நாள் ஒன்றுக்கு அந்த மணி எட்டு பாரம் நிறையுள்ள தங்கத்தைக் கொடுத்து வந்தது. மேலும் அது இருக்கும் பட்டணத்தில் நோயோ, பஞ்சமோ வறுமையோ தலைகாட்டச் செய்வதில்லை. அந்த உத்தமமான ரத்தினம் யாதவர்களுக்கு அரசரான உக்கிரசேன மகாராஜனிடம் இருப்பதே முறையானது என்று அபிப்பிராயப்பட்டார் கிருஷ்ணன். இருப்பினும் அதைக் கேட்டால் இருவருக்குமிடையே அபிப்பிராய பேதம் எழுவதுடன் குலத்திலே பிளவு நேரிடலாம் என்று பேசாதிருந்தார். கிருஷ்ணனுடைய அபிப்பிராயத்தை அறிந்த சத்திராஜித்து, அந்த மணியைக் கிருஷ்ணன் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயந்து தன் சகோதரன் பிரசேனனிடம் கொடுத்து விட்டான். உத்தமமானவனே அந்த ரத்தினத்தைத் தரிக்கலாம். அப்போது தான் அது பயன் தரும். அசுத்தன் அதனைத் தரித்தால் பயன் கொடுக்காது. பரிசேனன் அதை உணராமல் கழுத்திலே அந்த மணியை அணிந்து கொண்டு காட்டிற்கு வேட்டையாடத் தனிமையில் சென்றான். அங்கே சிங்கம் ஒன்று அவனைத் தாக்கி அவனையும் குதிரையையும் கொன்று விட்டது. அவன் கழுத்தில் அணிந்திருந்த மணியை ஏதோ புசிக்கத் தகுந்த பொருள் எனக் கொண்டு சென்றது. வழியிலே கரடி ராஜனான ஜாம்பவான் எதிர்ப்பட்டான். சிங்கத்தினிடமிருந்த அற்புத மணியைக் கண்டு அதிசயித்து அதைத் தான் கொள்ள விரும்பினான். அதனோடு சண்டையிட்டு அதைக் கொன்று மணியை எடுத்துச் சென்று குகையிலே உள்ள தன் குழந்தைக்கு விளையாட்டுப் பொருளாக வைத்துக் கொண்டான். காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பிரசேனன் திரும்பி வராமல் போகவே யாதவர்கள் கவலை கொண்டனர். சியமந்தக ரத்தினத்தின் மீதுள்ள ஆசையால் கிருஷ்ணனே பிரசேனனைக் கொன்று அபகரித்துக் கொண்டிருக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டனர்.
அந்தப் பேச்சு விரைவிலேயே கிருஷ்ணனுக்கு எட்டியது. தமக்கு இப்படியொரு அபவாதம் வந்து விட்டதே என்று வேதனைப்பட்டுப் பிரசேனனைத் தேடிப் புறப்பட்டார். அவருடன் யாதவர்களும் சென்றனர். காட்டிலே பிரசேனன் கொல்லப்பட்டிருந்த இடத்தை அடைந்து அவன் பிணத்தைக் கண்டனர். அவன் உடலில் சிங்கத்தின் கால் நகங்கள் கீறப்பட்டிருக்கும் அடையாளத்தையும், பக்கத்தே சிங்கத்தின் காலடித் தடயங்களையும் கண்டனர். பிரசேனன் சிங்கத்தால் கொல்லப்பட்டான் என்பதைக் கண்ட யாதவர்கள் கிருஷ்ணன் மீது அபாண்டமாகப் பழி சுமத்தினோமே என வருந்தினர். கிருஷ்ணன் அவர்களை அழைத்துக்கொண்டு சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து சென்றார். கொஞ்சதூரம் சென்றதும் சிங்கம் கொல்லப்பட்டுக் கிடப்பதையும் அதனருகே கரடியின் காலடித் தடயங்கள் தெரிவதையும் கண்டனர். ரத்தினத்தை மட்டும் காணவில்லை. மறுபடியும் அவர்கள் கரடியின் காலடித் தடயங்களைப் பார்த்துக் கொண்டே சென்றனர். அது ஒரு குகைக்குள் சென்றது. கிருஷ்ணன் தன்னோடு வந்தவர்களை வெளியே நிறுத்திவிட்டுத் தாம் மட்டுமே உள்ளே சென்றார். குகையினுள் செவிலி ஒருத்தி ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தாள். சிங்கம் பிரசேனனைக் கொன்றது. சிங்கத்தை நம் ஜாம்பவான் கொன்றார். சியமந்தகம் உனக்குக் கிடைத்தது என்று அவள் தாலாட்டுப் பாடிக் கொண்டிருப்பதையும் அவளிடம் அந்த ரத்தினம் பிரகாசித்துக் கொண்டிருப்பதையும் கிருஷ்ணன் கண்டார். கிருஷ்ணனைப் பார்த்ததும் அவள் பயந்து கூக்குரலிடவே, ஜாம்பவான் கோபத்துடன் அங்கே ஓடி வந்தான். கிருஷ்ணனுக்கும் ஜாம்பவானுக்கும் உக்கிரமான சண்டை உண்டாயிற்று. இருவரும் கடுமையாக யுத்தம் செய்தனர். இருபத்தொரு நாட்களுக்குச் சளைக்காமல் சண்டையிட்டனர். குகைக்கு வெளியே இருந்த யாதவர்கள் ஏழு நாட்கள்வரை கிருஷ்ணனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவர் வராதிருக்கவே கிருஷ்ணன் அந்தக் குகையினுள் கொல்லப்பட்டு விட்டான் என்று முடிவு செய்து கொண்டு துவாரகை திரும்பிவிட்டனர். அவருக்காக அனைவரும் துக்கம் காத்து அழுது கொண்டிருந்தனர்.
கிருஷ்ணனுக்குச் சமமாகப் போரிட்டாலும் நாட்கள் ஆக ஆக ஜாம்பவானுக்கு தளர்ச்சி உண்டாகலாயிற்று. இருபத்தோராவது நாள் அவனுக்குத் தான் போரிடும் நபர் சாதாரண மானிடர் அல்ல என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே சண்டையிடுவதை நிறுத்தி, அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரித்தவனாய், சுவாமி, தாங்கள் யார்? தாங்கள் சாதாரண மனிதர் அல்ல என்பதை உணருகிறேன். இல்லையேல் இத்தனை உக்கிரமாகப் போரிட முடியாது. நான் வணங்கும் அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போன்று தங்களையும் ஸ்ரீமன் நாராயணனுடைய அம்சமாகவே நினைக்கிறேன் என்றான். கிருஷ்ணன் தம் திருக்கரங்களால் அவரை ஆலிங்கனம் செய்து கொண்டு, லோக ரக்ஷணார்த்தம் நான் துவாரகையில் கிருஷ்ணனாக அவதரித்திருக்கிறேன் என்றார். ஜாம்பவானை ஆலிங்கனம் செய்து கொண்டதுமே சண்டையினால் அவர் தேகத்தில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து புதிய தெம்பு உண்டாயிற்று. ஜாம்பவான் கிருஷ்ணனை நமஸ்கரித்து அவருக்கு அர்க்கியம் முதலியன கொடுத்து உபசரித்தான். கிருஷ்ணன் தான் அங்கு வந்த நோக்கத்தைத் தெரிவித்ததும் ஜாம்பவான் சியமந்தக மணியை எடுத்து வந்து பாதங்களில் சமர்ப்பித்தான். மேலும் அவன் தன்னுடைய புத்திரியான ஜாம்பவதியை அழைத்து வந்து அவளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிராத்தித்துக் கொண்டான். கிருஷ்ணனும் அவனுடைய பக்திக்கு மகிழ்ந்து ஜாம்பவதியை ஏற்றுக்கொண்டு சியமந்தக மணியுடன் துவாரகை திரும்பினார். கிருஷ்ணனைக் கண்டதும் யாதவர்கள் அளவற்ற ஆனந்தம் கொண்டனர். இழந்த தனத்தைப் பெற்றதுபோல் அவர்கள் பூரித்துப் போனார்கள். கிருஷ்ணன் சியமந்தக மணியை சத்திராஜித்திடம் சேர்ப்பித்து நடந்த விவரங்களையும் கூறினார். சத்திராஜித்து பெரும் வேதனைக்குள்ளானான். தன்னால் அல்லவோ கிருஷ்ணனுக்கு அபவாதம் ஏற்பட்டது என்று வருந்தினான். அதற்குப் பரிகாரமாக அவன் தன் குமாரத்தி சத்தியபாமாவைக் கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.
22. கலியுகத்தில் கதிரவன் கருணை
போஜ ராஜனுடைய சபையில் பல கவிஞர்கள் இருந்து வந்தனர். அவர்களுள் மயூர கவி என்பவரும் ஒருவர். அவருக்கு ஒரு புத்திரி இருந்தாள். அவள் மிகவும் அழகானவள். பார்ப்பவர் மனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது அவள் அழகு. புத்திரியின் அழகு தந்தையின் உள்ளத்தே சலனத்தைத் தோற்றுவித்தது. அதன் இழுப்பிலே அவர் தன் அறிவை இழந்தார். அவளைப் போகப் பொருளாகவே நினைத்தார். புத்திரி என்பதை அவர் மறந்துவிட்டார். அவளை அடையவேண்டும் என்ற ஆசை அவரைப் பெரிதும் அலைக்கழித்தது. தந்தையின் தகாத ஆசையைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். அவர் கொண்டிருக்கும் ஆசை முறையற்றது என்பதைப் பலவாறு எடுத்துக் கூறினாள். ஆசை மயக்கத்திலே இருந்த கவியின் மனத்திலே அவள் எடுத்துக்காட்டும் புத்திமதிகள் ஏறுமா? அவள் சீறி எழுந்தாள். தந்தை என்பதையும் லட்சியம் செய்யாமல் குஷ்டரோகம் பீடிக்குமாறு சாபம் கொடுத்தாள். அந்த க்ஷணமே அவரைச் சாபம் பீடித்தது. குறுகிய காலத்துக்குள்ளாக அவர் குஷ்டரோகத்தால் பிறரும் அருவருப்புக் கொள்ளும் தோற்றத்தை அடைந்து வருந்தினார். தன் தவறை உணர்ந்து அதற்காக அல்லும் பகலும் வருந்தினார். சூரியனைப் பக்தியோடு ஆராதித்து அவரைத் தியானித்து வந்தார். கொஞ்ச காலத்துக்கெல்லாம் சூரியன் அனுக்கிரகத்தால் அவருடைய நோய் நீங்கியது. தம்முடைய பிரார்த்தனைக்கு இணங்கி அருள் செய்த சூரியனைக் குறித்து அவர் நூறு பாடல்களைக் கொண்ட ஒரு ஸ்தோத்திரத்தை இயற்றினார். சூரிய சதகம் எனப்பட்ட அந்நூலை இன்றைக்கும் அறிஞர்கள் கொண்டாடுகின்றனர்.