ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது 26ம் தேதி மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2021 05:12
சபரிமலை: 26ம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜைக்காக ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி பவனி இன்று காலை புறப்பட்டது.
கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலம் வரும் 26- தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய 423 பவுன் எடையுள்ள தங்க அங்கி பவனியாக எடுத்து வரப்படுகிறது. இன்று காலை 7:00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து பக்தர்களின் சரண கோஷத்துடன் பவனி புறப்பட்டது. இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் நந்தகோபன், உறுப்பினர் தங்கப்பன் முன்னாள் தலைவர் பத்மகுமார் பத்தனம்திட்டா கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்ப்பை பெற்ற பவனி நேற்றிரவு ஓமலூர் வந்தடைந்தது. நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு இரவு கோந்நி முருகமங்கலம் கோயிலில் தங்கும். நாளை மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு இரவு பெருநாடு சாஸ்தா கோயிலில் தங்கும். 25-ம் தேதிஇங்கிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும். மாலை 3:00மணிக்கு இங்கிருந்து தலை சுமடு மூலம் அங்கி கொண்டுவரப்படும். மாலை 6.00 மணிக்கு சன்னிதானம் வந்து சேரும் அங்கியை தந்திரியும் மேல் சாந்தியும் பெற்று ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவார்கள். 26-ம் நடைபெறும் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அணிவிக்கப் பட்டிருக்கும். மண்டல பூஜைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பம்பையிலும் சன்னிதானத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.