பதிவு செய்த நாள்
22
டிச
2021
05:12
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி - இலங்கை இடையே ராமர் அமைத்த பாலத்தை பார்த்த சீன துாதர், இது முடிவல்ல; தொடரும் என கொக்கரித்துச் சென்றுள்ளார்.
இது குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியதாவது: இலங்கையில் உள்ள சீன துாதர் குய்சென் ஹாங், சமீபத்தில் வட மாகாணமான யாழ்ப்பாணம், மன்னார் பகுதிக்கு சென்றுள்ளார்.அங்குள்ள தமிழர்களை சந்தித்து மீன் பிடி வலைகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கி, அவர்கள் மனதில் இடம் பிடிக்க முயன்றுள்ளார்.யாழ்ப்பாணம் கடற்படை முகாம் சென்று, நம் எல்லையின் துாரத்தை வீரர்களிடம் கேட்டறிந்து, ட்ரோன் வாயிலாக, நம் எல்லையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதி வீடியோ பதிவின் சிப்பை எடுத்து சென்றுள்ளார்.தலைமன்னார் கடற்படை முகாம் சென்ற சீன துாதர், அங்கிருந்து 10 அதிநவீன ரோந்து படகுகள் பாதுகாப்புடன் 33 கி.மீ., துாரமுள்ள தனுஷ்கோடி - இலங்கை இடையே ராமர் அமைத்த பாலம், குறிப்பாக, தலைமன்னாரில் இருந்து, இலங்கை எல்லைக்குள் உள்ள மூன்றாம் மணல் தீடை வரை, பார்த்து சென்றுள்ளார்.இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பு அரணாக உள்ள ராமர் பாலத்தை, முதன் முதலாக பார்த்த சீன துாதரிடம், அந்நாட்டு நிருபர்கள் கேட்டதற்கு, இது முடிவல்ல; தொடரும் என பதில் அளித்துள்ளார். இது குறித்து, ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறியதாவது:ராமர் அமைத்த பாலத்தை கடந்த 17ம் தேதி, சீன துாதர் பார்த்த பின், மறுநாள் முதல் தொடர்ச்சியாக 67 மீனவர்கள், 10 படகுகளை கைது செய்துள்ளனர். நம் நாட்டிற்கு எதிராக, சீனாவுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போல் இலங்கை செயல்படுகிறது.
இனி வரும் காலத்தில், பாக்ஜலசந்தி கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது கேள்விக்குறியாகும். இப்பகுதியில், சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க கூடும். இதனால், நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதால், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி, மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தற்போது சிறையில் வாடும் மீனவர்கள், படகுகளை மீட்க, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.