பதிவு செய்த நாள்
18
ஏப்
2022
10:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், நடவாவி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு அய்யங்கார்குளம் நடவாவி கிணற்றில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை, பாலாற்றில் திருமஞ்சனம் முடிந்து, கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், நடப்பாண்டு, 16ம் தேதி, சித்ரா பவுர்ணமி அன்று விமரிசையாக நடந்தது.பவுர்ணமிக்கு முன் தின இரவு, கோவிலில் இருந்து வரதராஜ பெருமாள் புறப்பட்டார். செவிலிமேடு, அப்துல்லாபுரம் துாசி, வாகை, ஆகிய பகுதிகளில் பெருமாளுக்கு மண்டகப்படி நடந்தது.சித்ரா பவுர்ணமி இரவு அய்யங்கார்குளம் கிராமம் சென்றடைந்தார். வீதியுலா முடிந்து, அங்குள்ள பழமையான சஞ்சீவராயர் கோவிலுக்கு சென்றார். பின் பெருமாள், உபய நாச்சியாருக்கு, கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.இரவு 12:00 மணிக்கு, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்பட்டு, அப்பகுதியில் அமைந்துள்ள நடவாவி எனப்படும் தரைமட்டத்திற்கு கீழ், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கிணற்றில் வரதர் எழுந்தருளினார்.இத்திருவிழாவை காண, சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர், நடவாவி கிணறு பகுதியில் கூடினர்.நடவாவி கிணற்றில் இருந்து நள்ளிரவு 1:00 மணிக்கு பெருமாள் புறப்பட்டு, செவிலிமேடு பாலாற்றிற்கு சென்றார்.
பாலாற்றில், நான்கு புறமும் பள்ளம் தோண்டி, நடுவில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பந்தலில், அதிகாலை 2:30 மணிக்கு பெருமாள் எழுந்தருளினார். திருமஞ்சனம் முடிந்ததும், காலை 4:15 மணிக்கு துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலுக்கு புறப்பட்டார்.அங்கு, பெருமாளுக்கு மாலை மரியாதை அளிக்கப்பட்டதும், வரதர் அங்கிருந்து புறப்பட்டு, காலை 7:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தார்.வழக்கமாக, செவிலிமேடு பாலாற்றில் இந்த உற்சவத்திற்காக ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதனால், கூட்டமும் அதிகளவில் காணப்படும்.
இந்த ஆண்டு, ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பாதுகாப்பற்றதாக இருந்ததால், யாரும் கடைகள் அமைக்கவில்லை.இன்று, தோட்ட உற்சவத்தை முன்னிட்டு, வரதராஜ பெருமாள், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள தாத்தாச்சாரியார் தோட்டம் மண்டபத்திற்கு செல்ல, காலை 6:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு, தோட்டத்தில் பெருமாள் தங்கி, நாளை மீண்டும் கோவிலை சென்றடைவார்.