பதிவு செய்த நாள்
18
ஏப்
2022
10:04
சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் நடந்த, ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தி.மு.க., அரசு செய்த நிலையில், வைபவத்தில், கவர்னர் ரவி பங்கேற்றதால், அமைச்சர்கள் மட்டுமின்றி, அரசு உயர் அதிகாரிகளும் புறக்கணித்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 14 ஆண்டுகளுக்கு பின், சென்னை தீவுத்திடலில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாண வைபவம், நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. தேவஸ்தான நிர்வாக வேண்டுகோளின் படி, பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம், குடிநீர், தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட சகல வசதிகளும் அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டன.ஆலோசனை கூட்டம்இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, அதில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்தார். திருக்கல்யாண வைபவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர, அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இதையடுத்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பணிகளை பார்வையிட்டு ஆலோசனையும் வழங்கினர்.
பின், அனைத்து துறை ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.புறக்கணிப்பு அதேபோல, வேலுார் லோக்சபா எம்.பி.,யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தும், விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். திருக்கல்யாண உற்சவத்தில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், கவர்னர் ரவியை சந்தித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் அழைப்பு விடுத்தார். அதன்படி கவர்னரும் பங்கேற்றார். ஆனால், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என ஒருவர் கூட பங்கேற்கவில்லை. கவர்னர் பங்கேற்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் அனைவரும் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தனிப்பட்ட முடிவு இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதன் காரணமாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.இந்நிலையில், தீவுத்திடலில் நடந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்கும்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு, தேவஸ்தானம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் உத்தரவுப்படி, அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுத்தது.
கவர்னர் வருகை உறுதியானதால், அந்த விழாவில் தி.மு.க., பங்கேற்க விரும்பவில்லை. எனவே, அமைச்சர்கள் உட்பட தி.மு.க.,வினர் யாரும் போகவில்லை. அதிகாரிகள் பங்கேற்காதது, அவர்களின் தனிப்பட்ட முடிவு. இவ்வாறு அவர்கள் கூறினர். - -நமது நிருபர்- -