பதிவு செய்த நாள்
13
ஜூன்
2022
08:06
திருச்செந்துார் கடற்கரையில் வைகாசி விசாகத்திருவிழாவிவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
திருச்செந்துார், ஜூன். 13-திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடந்த வைகாசி விசாக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமான் பிறந்த ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர நாளை விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் முருகப்பெருமானை வழிப்பட்டால் கிடைக்கும் பலன் வைகாசி விசாக திருவிழா அன்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது ஐதீகம்.விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்துார் கோயிலில் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது.
அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடந்தது.வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர். .
நேற்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக குவிந்த பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். நெல்லை, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (13ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.