பதிவு செய்த நாள்
30
அக்
2022
08:10
* சூரபத்மன் வதம் மட்டுமின்றி கந்தசஷ்டிக்கு வேறு சில காரணங்களும் மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருசமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக யாகம் ஒன்றை நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை தொடங்கி ஆறு நாள் நடத்தினர். யாகத்தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதம் ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என்கிறது மகாபாரதம்.
* தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையில் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து விரதமிருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்புரிந்தார். இதனடிப்படையில் ஐப்பசி அமாவாசையை ஒட்டிய ஆறுநாட்கள் கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறது கந்தபுராணம்.
தெய்வானை திருக்கல்யாணம்: முருகன் போரில் வெற்றி பெற்றதற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை திருமணம் செய்து வைத்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்துாரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். இதற்கு முன்னதாக தெய்வானை தபசு மண்டபம் சென்று முருகனை மணம் புரிய வேண்டும் என வேண்டி தவமிருக்கும் வைபவம், நிச்சயதார்த்த வைபவம் நடக்கும். நள்ளிரவில் திருக்கல்யாணம் நடக்கும்.
முருகனுக்கான பிரார்த்தனை: கந்தசஷ்டி விரத நாளான இன்று படித்தால் நன்மை சேரும்!
* முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன் அன்பைப் பெற என்மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும்.
* முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழை மட்டுமே பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருளவேண்டும்.
* மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றி வீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக.
* முத்துப் போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவபாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக.
* எங்கள் எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்க பன்னிரு கைகளுடன் வந்தருள்வாயாக.
* கருணைக்கடலே! கந்தப்பெருமானே! நமசிவாயத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வரும் சுப்பிரமணியனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே! எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக.
* திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரகதோஷம் எதுவும் என்னைத் தாக்காமல் காத்தருள வேண்டும்.
* மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே! அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக.
* கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே! எங்களுக்கு செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.
* தெய்வானை மணாளனே! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட ஓடிவருபவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! தேவர்களைக் காத்த தேவசேனாபதியே! வாழ்நாள் முழுவதும் எனக்கு வழித்துணையாக வருவாயாக.
* சொல்லில் அடங்கா திருப்புகழ் கொண்டவனே! உள்ளம் ஒன்றி வழிபடுபவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே! திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே! இந்த உலகமெல்லாம் செழிக்க வந்தருள்வாயாக.
முருகனின் நைவேத்தியங்கள்: திருச்செந்துார் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின் போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமாக நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
ஒருநாள் கோபுர வாசல்: திருச்செந்துாரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் உள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்த நிலையில் கிழக்கு நோக்கி இருக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால் எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கும். கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். ஆனாலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை.
மும்மூர்த்தி முருகன்: சிவனின் அம்சமாக அவதரித்தவர் முருகன். பிரணவ மந்திரப் பொருளை தந்தைக்கு உபதேசித்தவர். அந்த மந்திரத்தின் பொருள் தெரியாத படைப்புக்கடவுள் பிரம்மாவை சிறையில் அடைத்தவர். சூரனை வதம் செய்தபின் மகாவிஷ்ணுவின் மகளை மணம்புரிந்தார். இதை உணர்த்தும் விதமாக திருச்செந்துாரில் மும்மூர்த்திகளான பிரம்மா, மகாவிஷ்ணு, சிவனின் அம்சமாக இருக்கிறார் முருகன். ஆவணி, மாசி திருவிழாவில் ஏழாம் நாளன்று சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவனாகவும், எட்டாம் நாளன்று அதிகாலையில் வெண்ணிற ஆடையில் பிரம்மனாகவும், மதியம் பச்சை வஸ்திரம் சாத்தி மகாவிஷ்ணுவாகவும் காட்சியளிக்கிறார்.