பதிவு செய்த நாள்
20
நவ
2022
10:11
சென்னை:வடபழநி ஆண்டவர் கோவிலில், தங்க தேர் புதுப்பிக்கப்பட்டு, தங்க தேர் பவனி மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. மேலும், கோவில் தல வரலாறு பாடல்கள் உடைய குறுந்தகடு வெளியிடப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தங்க தேர் பவனியை துவக்கி வைத்தார். அவருடன், வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு, அறநிலையத் துறை இணை கமிஷனர் தனபாலன், துணை கமிஷனர் முல்லை உள்ளிட்டோர், தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை சுற்றி வந்தனர். பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தமிழக கோவில்களில் தங்கம், வெள்ளி மற்றும் மரத்தால் ஆன தேர்கள், மீண்டும் பவனி வருவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.திருச்சி சமயபுரம், திருத்தணி முருகன், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆகிய கோவில்களில், நீண்ட காலமாக ஓடாதிருந்த தேர்கள் சீரமைக்கப்பட்டு பவனி வருகின்றன.
கடந்த, 2021- - 22ம் நிதியாண்டில் புதிய தேர்கள் உருவாக்கவும், பழைய தேர்களை சீரமைக்கவும், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதேபோல், இந்த நிதியாண்டில், ஒன்பது புதிய தேர்கள் செய்யவும், நான்கு பழைய தேர்கள் பழுது நீக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையம், அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. உ.பி., காசியில் நடந்து வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காகவும், காசி யாத்திரைக்காகவும், 50 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.கொரோனா காலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வடபழநி ஆண்டவர் கோவிலில் தங்க தேர் பவனி நடத்தப்படாமல் இருந்தது.பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தேர் புதுப்பிக்கும் பணி முடிந்து, தேர் பவனி மீண்டும் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.