பதிவு செய்த நாள்
06
டிச
2022
05:12
எதிர்காலம் ஒளிமயமாக...: தமிழ்நாட்டின் முதன்மை விழா. முன்னோடி விழா. பழமை விழா. பாரம்பரிய விழா என்றெல்லாம் சொல்லி கொண்டாடப்படும் திருவிழா திருக்கார்த்திகை. அன்று திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு அரோகரா... என்ற கோஷம் கேட்பவர்களது, காதுகளில் தேனை பாய்ச்சும். மனதில் இன்பத்தை கொடுக்கும். இது நடப்பது மாலையில். அதற்கு முன் அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதி முன்பு ஒரு தீபம் ஏற்றப்படும். இதற்கு பின் ஒரு தத்துவம் பொதிந்துள்ளது. அதை மாணிக்கவாசகர் தனது சிவபுராணத்தில் பதிவு செய்கிறார்.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
இதில் ஏகன் அநேகன் என்ற வரி முக்கியமானது. இதற்கும் தீபத்திற்கு என்ன சம்பந்தம் உள்ளது என யோசிக்காதீர்கள். அதிகாலையில் ஏற்றப்பட்ட அந்த ஒரு தீபத்தில் இருந்து ஐந்து தீபங்கள் ஏற்றுவர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதையே, ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் என்பர். இது எதைக் குறிக்கிறது? பரம்பொருளான சிவபெருமானே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களை செய்கிறார். அதாவது ஒரு தீபத்தில் இருந்து பல தீபம் ஏற்றப்பட்டாலும், ஒளி ஒன்றுதான். அதுதான் சிவபெருமான். அவரை வணங்குவோம். நமது எதிர்காலமும் ஒளிமயமாகும்.
பூம்பாவையால்...: அன்று முதல் இன்றுவரை இனிமேலும் விளக்கேற்றுவதற்குரியவர்கள் பெண்கள் தான். எப்படி எதனால் சொல்கிறீர்கள் காரணம் தெரிந்து கொள்ள வாருங்கள் சென்னை மையிலாப்பூருக்கு... தொண்டை மண்டலம் என்கிற சென்னைக்கு ஞானசம்பந்தர் வந்த போது அவர் முன் என்றோ! பாம்பு கடித்து இறந்த பூம்பாவை என்ற பெயருடைய தன்மகளின் சாம்பலை வைத்தார் அவரது தந்தை. கபாலீஸ்வரரை வணங்கி பாடல்கள் பாடி பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்தார் ஞானசம்பந்தர். அப்பாடல்களில் புகழ்பெற்ற திருவிழாக்களை பட்டியலிடும் பாடல்களில் கார்த்திகை திருநாளை சிறப்பாக குறிப்பிடும் பாடல் ஒன்று உள்ளது. அதில் வளையல் அணிந்த பெண்கள் விளக்கேற்றுவதாக குறிப்படுகிறார். இதோ அப்பாடல்...
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
ஒன்று மூன்றானது: கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை திருநாளை முன்னோர்கள் மூன்றாக பிரித்து கொண்டாடினர்.
* கார்த்திகை நட்சத்திரம் கூடி வரும் நாளில் முருகன் கோயில்களில் கொண்டாடப்பெறுவதை குமராலய தீபம் என்பர்.
* ரோகிணி நட்சத்திரம் கூடி வரும் நாளில் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்பெறுவதை விஷ்ணுவாலய தீபம் என்பர்.
* கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி தங்கும் நாளில் எல்லா கோயில்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்பெறுவதை சர்வாலய தீபம் என்பர்.
கார்த்திகையில் புற்று தரிசனம்: சென்னை - திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உள்ள புற்று வடிவான லிங்கத்தை ஆண்டு முழுவதும் கவசம் சாற்றியபடியே தரிசிக்கலாம். திருக்கார்த்திகை பவுர்ணமியிலிருந்து மூன்று நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக லிங்கத்திருமேனியில் புனுகு சாற்றி கவசம் சாற்றாமல் வைத்திருப்பர். இந்நாட்களில் தேவர்கள் வந்து சிவபெருமானை தரிசிக்கின்றனர் என்பது சிறப்பு.
சகல சவுபாக்கியம் பெற...: கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருக்கார்த்திகை. இந்த நாளில் வீடுகளில் 3 விளக்குகள் அல்லது 27 விளக்குகள் ஏற்றலாம். 27 என்பது நட்சத்திரங்களை குறிக்கும். சரி. எங்கள் வீட்டில் விளக்கும் உள்ளது, விளக்கேற்ற இடமும் உள்ளது என யோசிக்கிறீர்களா... உங்கள் ஆசைப்படியே வீடு முழுவதும் ஏற்றலாம். இந்த வழிபட்டால் சகல சவுபாக்கியமும் கிடைக்கும். எதுவாக இருந்தாலும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கை ஏற்றுங்கள்.
கார்த்திகை விளக்கீடு: கார்த்திகை மாதம் வந்தாலே நம் நினைவிற்கு வருவது தீபம்தான். ஆம்! வீடு, கோயில் முழுவதும் கமகமக்கும் நல்லெண்ணெய் வாசனையும், பசுநெய் வாசனையும் கலந்து தீபங்களின் வெளிச்சத்தில் ஒளிர்வதை காண முடியும். இந்த வழிபாடு இன்று நேற்று அல்ல... நீண்ட காலமாகவே வழக்கத்தில் உள்ளது. இதற்கு தமிழ் இலக்கியத்தில் கார்த்திகை விளக்கீடு என்ற பெயரும் உள்ளது. அதில் ஒன்று,
வேலை நோக்கிய விளக்கு நிலையும்-தொல்காப்பியம்: இதற்கு, கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்று நச்சினார்க்கினியர் புலவர் உரை எழுதியுள்ளார். அக்காலத்தில் முதல் இக்காலம் வரை போற்றிக் கொண்டாடும் பண்டிகை இது என்று சொல்கிறார்.
எல்லா நாளும் கார்த்திகை: வெறும் மண். அந்த மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கு. திரி இட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, ஜோதியாக ஜொலிக்கும் தீபத்திருவிழா. இப்படி கடவுளின் அருளைப் பெற தீபமேற்றி வழிபாடு செய்யலாம். இதன் மூலம் நமது கர்ம வினைகள் குறையும். இதையே திருநாவுக்கரசர் தேவாரத்தில் சொல்கிறார்.
இல்லக விளக்கது விருள்கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
வீட்டில் ஏற்றும் விளக்கு அங்குள்ள இருளை கெடுத்து ஒளியை கொடுக்கும். அதுபோல் சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய, நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு
நமச்சிவாய என்னும் ஐந்து எழுத்து மந்திரமாகும். அதாவது பல பிறவிகளில் செய்த வினைகளினால் நம்மிடம் அறியாமை என்னும் இருள் உள்ளது. அதை நமச்சிவாய என்னும் மந்திர விளக்கை கொண்டு அகற்றலாம். பிறகு என்ன... எல்லா நாளும் கார்த்திகை தான்.