பதிவு செய்த நாள்
24
பிப்
2023
10:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை கண்துடைப்பு நாடகமாக இல்லாமல் முழுமையானதாக இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்கின்றனர் மக்கள்.
திருக்கோவிலூர் மலையமாநாட்டின் தலைநகரம். மெய்ப்பொருள் நாயனார், தெய்வீக மன்னன் உள்ளிட்ட அரசர்களால் அரசாட்சி செய்யப்பட்டு, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். பறந்து விரிந்த நான்கு மாட வீதிகளை கொண்டது. உலகளந்த பெருமாள், வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல பொது இடங்கள் என தென்பெண்ணை ஆற்றின் நதிக்கரையில், ஏரி, குளங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் மாநகரமாகும். மக்களாட்சியின் உச்சபட்ச ஆக்கிரமிப்பாக பறந்து விரிந்த சாலைகள் எல்லாம் இன்று ஒவ்வொரு தெருவிலும் 20 அடிக்கு மேல் ஆக்கிரமித்து நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டது. குறிப்பாக தெற்கு வீதி, வடக்கு வீதி, சன்னதி வீதி, கடை வீதிகளில் மக்கள் நடக்கவே முடியாத அளவிற்கு நகரம் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக கார், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, நடந்து செல்பவர்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் அவலம் அன்றாடம் அரங்கேறுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சன்னதி வீதியில் நிரந்தர ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் பக்தர்கள் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வருவதற்கே மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, ஐந்து ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்த கோவிலை சுற்றியிருக்கும் 20 அடி உயரம் உள்ள மதில் சுற்றை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் கோவிலின் அழகை கெடுப்பது மட்டுமல்ல கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் சன்னதி வீதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் நடந்து செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கோவிலின் மதில் சுவற்றை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால் அந்த இடத்தில் திருவண்ணாமலையைப் போன்று இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். திருக்கோவிலூரின் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு இது நிரந்தர தீர்வாக அமையும்.
இது போன்ற கோரிக்கையை இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக மக்கள் முன்வைத்து வருகின்றனர். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது அப்பொழுதைய கலெக்டர் கோபால் அதிரடி நடவடிக்கையால் கோவில் குளங்கள் மீட்கப்பட்டு பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இச்சூழலில் அவர் மாற்றப்பட்டதால் பணிகள் அப்படியே நின்று விட்டது. மாவட்டம் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் இணைக்கப்பட்டது. அதன் பிறகு தான் சிக்கல் அதிகரித்தது. காரணம், கள்ளக்குறிச்சியின் கடைசி எல்லைப் பகுதி என்பதுடன், திருக்கோவிலூர் தொகுதியின் எல்லை பிரச்சினை காரணமாக கள்ளக்குறிச்சி கலெக்டர்கள் திருக்கோவிலூரில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் பெரும்பாலாக பங்கேற்பதில்லை. இது ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் சவுகரியமாக அமைந்துவிட்டது.
நீதிமன்றம், பொது மக்களின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நேற்று நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்றம் துவக்கப்பட்டது. குறைந்த அளவு போலீசாரை கொண்டு கட்டை கோபுரத்திலிருந்து பணி துவங்கியது. துவக்கத்திலேயே கடை வைத்திருப்பவர் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையான ஆவணங்கள் வேண்டும் என போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை நிவர்த்தி செய்து வைக்க வேண்டிய வருவாய் துறையில் இருந்து வி.ஏ.ஓ., உள்ளிட்ட கீழ்மட்ட அலுவலர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் ஓரமாக ஒதுங்கி நின்று விட்டதால் ஆக்கிரமிப்பு எவ்வளவு என்று அளந்து அளவீடு செய்ய நில அளவைத் துறை, தாசில்தார் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் இல்லாமல் போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
தற்பொழுது துவங்கி இருக்கும் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை வெறும் கண்துடைப்பு நாடகமாக மட்டும் இல்லாமல், உண்மையிலேயே மக்களுக்கு பயன் தரும் வகையில் அமைய வேண்டும். அதற்கு வருவாய்த் துறையில் ஆர்.டி.ஓ., மட்டத்திலும், காவல் துறையில் டி.எஸ்.பி., அந்தஸ்திலும் என உயர் பொறுப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு நில அளவையை சரியாக மேற்கொண்டு, ஒட்டுமொத்தமாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகரவாசிகள் மட்டுமல்லாது நகருக்கு வந்து செல்லும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது. உலகையே அளந்த பெருமாளின் இடத்தையே ஆக்கிரமிக்கும் அளவிற்கு சூழ்நிலை மாறியிருக்கும் அபாயகரமான நிகழ்வை அரசு உணர்ந்து அதிரடி நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, திருக்கோவிலூரின் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.