பதிவு செய்த நாள்
27
அக்
2023
10:10
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள, சீனிவாசப் பெருமாள் திருக்கோவில், கி.பி. 5 ம் நுாற்றாண்டில், கோச்செங்கணான் என்கிற சோழ மன்னரால் கட்டப்பட்டது. இக்கோவில் 108 திவய தேசங்களில் 14வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.
திருவேங்கடத் திருப்பதிக்கு இணையான பிரசித்தி பெற்ற பிரார்த்தனை வைணவத் திருத்தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புடையது. திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருக்கோயில் அரசலாறு மற்றும் திருமலைராஜன் நதிகளுக்கு இடையேயுள்ள நறையூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை திருவிழாவின் நான்காம் திருநாளில் கல் கருட பகவான் வீதி உலா புறப்பாடு நடைபெறும். இதில், கருட பகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து எழுந்தருளும்போது முதலில் 4 பேர் சுமந்து வருவர். இதன் பிறகு பகவானின் எடை அதிகரிப்பதால், அடுத்தடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என சுமந்து வருவர். இந்தக் கல் கருட சேவை உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதையடுத்து திருப்பணிகள் முடிந்து, கடந்த 23ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று(27ம் தேதி) காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் செய்யபட்டு, பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித கலச நீர், மூலவர் விமானத்தில் உள்ள கலசத்தின் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. அப்போது, பக்தர்கள் `கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டனர். இதையடுத்து, மூலவருக்கு தீபாரதனை நடைபெற்றது. இதில், நாச்சியார்கோவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.