பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
10:04
கோவை; கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த 2013ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், கடந்த, ஜனவரி 20ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த, மார்ச் 31ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
முன்னதாக ராஜகோபுரம், கோவில் சன்னதிகள், படிக்கட்டு பாதை, படிக்கட்டு பாதையில் உள்ள மண்டபங்கள் என அனைத்து இடங்களிலும், புதிய வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. கோவில் உட்புறத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புதிய தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பொருத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட கருவறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலவர், சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கு அஸ்தபந்தன மருந்து சாற்றப்பட்டுள்ளது. இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ராஜகோபுரம், சன்னதி கோபுரங்கள் என அனைத்து இடங்களிலும், வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட யாகசாலை மண்டபத்தில், காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. கடந்த, 1ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, 108 மூலிகை பொருட்கள் ஆகுதி, பேரொளி வழிபாடு, மலர் போற்றுதல், திருமுறை விண்ணப்பம் நடந்தது. மாலை, 4:15 மணிக்கு, ஐந்தாம் கால யாக பூஜை, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடந்தது. இன்று காலை, 5:45 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜையும், காலை, 8:30 மணிக்கு, ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 09:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ஆதி மூலவர் ஆகிய மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அடிவாரத்தில் காத்திருக்கும் பக்தர்களும், கும்பாபிஷேகத்தை நேரலையில் காணும் வகையில், பெரிய திரைகள் அமைக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில், 1,300 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலை மேல் பக்தர்கள் வந்து செல்லும் பாதை முழுவதும், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமிக்கு பெரும் திருமஞ்சனமும், பேரொளி வழிபாடும், திருக்கல்யாணமும், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.