பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
11:04
மாமல்லபுரம்; திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசூர் பாலாற்றில், ராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு, ராஜராஜசோழன் ஆட்சி புரிந்தார்.
தஞ்சாவூரில் பிரமாண்ட பிரகதீஸ்வரர் கோவிலையும் கட்டியுள்ளார். அவரது மகன் ராஜேந்திர சோழன், அரியலுார் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரத்தை, புதிய தலைநகராக நிர்மாணித்து ஆட்சி புரிந்தார். தந்தையைப் போன்றே, அங்கு சிவபெருமானுக்கு கோவில் எழுப்பியுள்ளார். அவரது ஆட்சியில், சோழப் பேரரசின் எல்லை விரிவடைந்தது. அவரைப் பற்றிய மெய்கீர்த்தி கல்வெட்டு, செங்கல்பட்டு மாவட்டம், திருக் கழுக்குன்றம் அடுத்த ஈசூர் பாலாற்றில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதை கண்டெடுத்த, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலை, அறிவியல் கல்லுாரி வரலாற்றுத் துறைவிரிவுரையாளர் மதுரை வீரன் கூறியதாவது: ராஜேந்திர சோழனின்மெய்கீர்த்தி, ‘திருமன்னி வளர இருநில மடந்தையும்’ என தொடங்கும். அந்த கீர்த்தியில், கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீராசேந்திரசோழ தேவர்க்கு யாண்டு ஜெயங்கொண்ட சோழமண்டலத்து என, 12 வரிகள் மட்டும் கொண்ட துண்டான கல்வெட்டு கிடைத்துள்ளது. ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழங்கால கோவிலில், இக்கல்வெட்டு இருந்திருக்கலாம். முழுமையான கல்வெட்டாக இல்லாததால், கோவிலைப் பற்றியோ, தற்போது கோவில்உள்ளதா என்பதைப்பற்றியோ அறிய முடிய வில்லை. இந்த கல்வெட்டை, அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளோம். இவ்வாறு, அவர்கூறினார்.