பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
10:04
பாலக்காடு; பாலக்காடு நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு, நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவிலில், பங்குனி மாத வேலா திருவிழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலையில், பள்ளிவாள் கடயல் நிகழ்ச்சியுடன், கோவிலில் ஆச்சார சடங்குகள் துவங்கியது. கணபதி ஹோமம், வரியோலை வாசிப்பு, நெல் பறை எடுப்பு நடந்தது. அதன்பின், பகவதி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. சோற்றானிக்கரை சுபாஷ் மாரார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பஞ்சவாத்தியம் முழங்க, யானைகள் அணிவகுப்பில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மத்தியானத்துக்கு பின் பெய்த கனமழையால் விழா சடங்குகள் தாமதமாக நடந்தது. மாலையில் மழை பொழிவு குறைந்ததால், கலாமண்டலம் சிவதாசனின் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட செண்டை மேளம் நிகழ்ச்சி நடந்தது. ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்து மணி குடைகள் சூடிய, ஒன்பது யானைகள் கோவில் வாசல் முன் அணிவகுத்து நின்று குடை மாற்றம் நிகழ்வு நடந்தது. விழாவின், சிறப்பு அம்சமான இரு தரப்பினர் போட்டி போட்டுள்ள பிரமாண்ட வாணவேடிக்கை நடந்தது. வாண வேடிக்கையை காண மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.