பதிவு செய்த நாள்
31
ஜன
2013
11:01
தஞ்சாவூர் அருகில் உள்ள அன்னம்பேட்டை கிராமத்தில், சோழர் கால நந்தி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இச்சிற்பம், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என, கூறப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து, 10 கி.மீ., தொலைவில், திட்டை வழியாக, கும்பகோணம் செல்லும் சாலையில், அன்னம்பேட்டை உள்ளது. இங்கு, தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள, "சிரேயஸ் சத்திரத்திற்கு வருபவர்களுக்கு, நாள்தோறும் உணவு வழங்க, இவ்வூரிலிருந்த நிலத்தில் இருந்து நெல் வழங்கப்பட்டதாக, இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன. சிரேயஸ் சத்திரம், கடந்த ஆண்டு வரை, அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்தது. இது குறித்து, சரசுவதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், அன்னம்பேட்டையில், இடிபாடுற்று, தற்போது, அவ்வூர் மக்களால் சீரமைக்கப்பட்டு வரும் சிவன் கோவில் அருகில், சோழர் காலத்தைச் சேர்ந்த, ஜேஷ்டாதேவி சிற்பத்தை கண்டறிந்துள்ளார். ஒரே கல்லில், அழகிய புடைப்புச் சிற்பமாகக் காணப்படும், ஜேஷ்டாதேவியின் தலைப்பாகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அச்சிற்பத்தின் வலதுபுறம் மனித உடலும், காளையின் தலையும் கொண்ட ஜேஷ்டாவின் மகன் விருஷபன் உருவம், இடதுபுறம், அவள் மகள் நமனை உருவம் காணப்படுகின்றன. சிதைவுற்ற சிவன் கோவிலில் இருந்த சோழர் கால நந்தி சிற்பம், அருகில் உள்ள கோவிலில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இடிபாடுற்ற சிவன் கோவில் கருவறையில், சோழர் கால சிவலிங்கம் நல்ல நிலையில் உள்ளது.
இது குறித்து, தஞ்சாவூர் சரஸ்வதி மகால் தமிழ் பண்டிதர் கூறியதாவது: அன்னம்பேட்டை கிராமத்தின் கிழக்கே, ஒரு சிறிய மண்டபத்தில், தாயுமானவர் சிற்பம் உள்ளது. தாயுமானவர் மகன் கனகசபாபதிப் பிள்ளை, இவ்வூரில் தங்கியிருந்துள்ளார். அவரின் வழித்தோன்றல், இன்றளவும் அங்கு வழிபாடு செய்து வருகின்றனர். மாணிக்கவாசகரின் ஓவியம், இவ்வூர் மாரியம்மன்கோவிலில் காணப்படுகிறது. தொடர்ச்சியாக, இவ்வூருக்கு, 1,000 ஆண்டு கால வரலாறு இருப்பதை, கள ஆய்வின் போது கண்டறிய முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.