அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 12:12
கோவை; மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் அருந்தவ செல்வி உடனமர் அன்னூர் ஸ்ரீ மன்னீஸ்வரர் கோவில் திருத்தேர் விழா இன்று (31ம் தேதி) கோலாகலமாக நடந்தது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் 26ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு விநாயகர் அம்மன் முருகன் சந்திரசேகர் சண்டேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் பங்கேற்று அருளுரை வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
தேரோட்டம்: இன்று காலை 7:15 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார், காலை 10:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். இதையடுத்து வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இன்று இரவு 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், வரும் 2ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்பக்குளத்தில் சுவாமி தெப்பத் தேரில் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.