பதிவு செய்த நாள்
31
ஜன
2013
11:01
திருப்பூர்: கோவில்களை பற்றிய அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களை பற்றிய விவரங்கள் பதியும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு கோவிலின் வரலாறு, அமைப்பு, கோவிலுள்ள சிலைகள், பொருட்கள், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள் உள்ளிட்ட சொத்துக்கள், பணியாளர்கள் என அனைத்து தகவல்களையும், மின் ஆளுமை திட்ட பணியின் கீழ், கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம், கோவில்கள் குறித்த அனைத்து தகவல்களும், கம்ப்யூட்டரில் கிடைப்பதோடு, உடனடியாக அதிகாரிகள் பார்க்கும் வசதி ஏற்படுகிறது. ஒரு ஆவணமாக, இது மாறிவிடுவதோடு, சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் அதில் முறைகேடுகள் நடக்காமலும் கண்காணிக்கப்படும். அறநிலைய துறை நிர்வாகமும் முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, பணிகள் எளிமையாக வாய்ப்புள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களின் விவரங்கள் பதியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக, பட்டியல் இனத்தில் உள்ள 117 கோவில்கள் குறித்த தகவல்கள் பதியப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, பட்டியல் இனத்தில் சேராத 1,117 கோவில்களின் விபரங்கள் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கோவில்களை பற்றிய அனைத்து விவரங்களையும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யவும், இப்பணிகளை வரும் பிப்., 20க்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். கோவில்கள் குறித்த அனைத்து விவரங்களையும், அறநிலையத்துறை உயரதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலமே தெரிந்து கொள்ள வசதி ஏற்படும், என்றனர்.
கோவில் வழிகாட்டி நூல்: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், அவற்றின் தல வரலாறு, படங்கள், உற்சவர், மூலவர், பூஜை நேரங்கள் குறித்த தகவல்கள் இடம் பெறும் வகையில், மாவட்ட வழிகாட்டி நூல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், தல வரலாறு, படங்கள், திருவிழாக்களை சேகரித்து, மாவட்ட வழிகாட்டி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள நூல்கள், ஆன்மிக முறைப்படி, ஆன்மிக சொற்களுடன் அமையும் வகையில், ஆன்மிக எழுத்தாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. திருத்தங்கள் செய்து, விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.