பதிவு செய்த நாள்
31
டிச
2025
11:12
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் வழிபாடு நடைபெற்றது.
அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமியில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 108 வேத பாராயணம், ஸ்ரீ ராமசரிதமானஸ் பாராயணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. பிரதிஷ்டா துவாதசி பட்டோற்சவ கொண்டாட்டங்களின் முக்கிய தினமான இன்று, ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலில் யாகபூஜை, பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. இதில் தத்துவ கலசம், தத்துவ ஹோமம், மன்யு சூக்த ஹோமம், ராம தாரக மந்திர ஹோமம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரதிஷ்டா துவாதசி உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பிரதமர் வாழ்த்து: பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா குறித்து பிரதமர் மோடி கூறியதாவது; இன்று அயோத்தியின் புனித பூமியில் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது; இந்த விழா நமது நம்பிக்கை மற்றும் மரபுகளின் தெய்வீக விழாவாகும்; உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு குறிபிட்டுள்ளார்.
நெகிழ்ச்சியில் பக்தர்கள்: முன்னதாக நேற்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதிஷ்டா துவாதசி படோத்சவ நிகழ்வுகளின் இரண்டாம் நாளில், மோஹித் ஷெவானி மற்றும் அவரது குழுவினர் "காதா ஸ்ரீ ராம் மந்திர் கி" என்ற தலைப்பில் ஒரு தனித்துவமான மேடை நாடகத்தை வழங்கினர். படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்ட அயோத்தியில், பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காரை மீண்டும் பிரதிஷ்டை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களையும், தியாகங்களையும் இந்த நாடகம் சித்தரித்தது. அந்த நாடகத்தின் கதைக்களம் விறுவிறுப்பாகவும், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அது அங்கு கூடியிருந்த பக்தர்கள்களை உணர்ச்சிவசப்படச் செய்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.